தோல் நீங்காத குடிசையும், அழுக்கைக் கொண்டதும், சுகம், துக்கம், ஆசை இவற்றைத் தன்னுள் கொண்ட குடமும், மும்மலம் (ஆணவம், கன்மம், மாயை) என்றிவை நெருக்கமாய் வைத்த காற்றடைத்த பானையும், மிழற்றும் மழலை போன்று பொருள் விளங்காத வார்த்தைகள் உள்ள பல சமய நூல்களை கைக்கொண்டு வீண் கூச்சலை மேற்கொண்டதுமான இந்த உடம்பை, துன்பத்துக்கு இடமான மாமிச பிண்டம், சதை, ரத்தம், இவற்றால் கட்டப்பட்ட கலப்பும் மிக வெறுக்கத்தக்க பொருளானதுமான இந்த உடம்பை, விரும்பித் திரிகிற எனக்கு, அடியோடு வாக்கு அழிந்து போகும் (மெளனநிலை கூடும்) ஒருநாள் ஏற்படுமோ? எலும்புகள், பாம்புகள், திருநீறு, இவற்றைத் தம் உடம்பில் அணிந்துள்ள நம் தந்தையாம் சிவபிரான் மலர்களால் அர்ச்சித்துத் தொழுத ஞானியான அப்பனே, போருக்கு எப்போதும் ஆயத்தமாய் உள்ள பன்னிரண்டு மலைகள் போன்ற புயத்தோனே, குவளை மலர் பூக்கின்ற திருத்தணிகை மலையோனே, பார்வதிக்கும் கங்கைக்கும் குமரனே, இந்தப் பூமியில் பார்வை என்று ஒன்று இருந்தால் அது உன் திருநடனத்தைப் பார்க்கும் பார்வையே. அந்தப் பார்வையை உடைய தவசீலர்களுக்கு உதவும் இளையவனே, உன்னை வணங்காதவர்களுக்கு அரியவனாகி, பாசங்களிலிருந்து நீங்கியவனே, தமிழ்ப் பாக்களால் உன்னைத் துதிப்போர்க்கு எளிமையாய் இருக்கும் பெருமாளே.
தொக்கறாக் குடில் அசுத்தமேற்ற ... தோல் நீங்காத குடிசையும், அழுக்கைக் கொண்டதும், சுக துக்கமாற் கடம் ... சுகம், துக்கம், ஆசை இவற்றைத் தன்னுள் கொண்ட குடமும், முமலமாயை ... மும்மலம் (ஆணவம், கன்மம், மாயை) என்றிவை துற்றகாற் பதலை ... நெருக்கமாய் வைத்த காற்றடைத்த பானையும், சொற்படாக் குதலை துப்பிலாப் பலசமயநூலை ... மிழற்றும் மழலை போன்று பொருள் விளங்காத வார்த்தைகள் உள்ள பல சமய நூல்களை கைக் கொளாக் கதறு கைக்கொள் ஆக்கை ... கைக்கொண்டு வீண் கூச்சலை மேற்கொண்டதுமான இந்த உடம்பை, அவலப் புலாற் றசை குருதியாலே ... துன்பத்துக்கு இடமான மாமிச பிண்டம், சதை, ரத்தம், இவற்றால் கட்டுகூட்டு அருவருப்பு ... கட்டப்பட்ட கலப்பும் மிக வெறுக்கத்தக்க பொருளானதுமான இந்த உடம்பை, வேட்டுழல சட்டவாக்கு அழிவது ஒருநாளே ... விரும்பித் திரிகிற எனக்கு, அடியோடு வாக்கு அழிந்து போகும் (மெளனநிலை கூடும்) ஒருநாள் ஏற்படுமோ? அக்கு அராப் பொடியின் மெய்க்கு இடாக் குரவர் ... எலும்புகள், பாம்புகள், திருநீறு, இவற்றைத் தம் உடம்பில் அணிந்துள்ள நம் தந்தையாம் சிவபிரான் அர்ச்சியாத் தொழு முநிவனாய அப்ப ... மலர்களால் அர்ச்சித்துத் தொழுத ஞானியான அப்பனே, போர்ப் பனிரு வெற்ப ... போருக்கு எப்போதும் ஆயத்தமாய் உள்ள பன்னிரண்டு மலைகள் போன்ற புயத்தோனே, பூத் தணியல் வெற்ப ... குவளை மலர் பூக்கின்ற திருத்தணிகை மலையோனே, பார்ப்பதி நதி குமாரா ... பார்வதிக்கும் கங்கைக்கும் குமரனே, இக்கண் நோக்குறில் நிருத்தநோக்குறு ... இந்தப் பூமியில் பார்வை என்று ஒன்று இருந்தால் அது உன் திருநடனத்தைப் பார்க்கும் பார்வையே. அந்தப் பார்வையை உடைய தவத்தினோர்க்கு உதவும் இளையோனே ... தவசீலர்களுக்கு உதவும் இளையவனே, எத்திடார்க்கு அரிய முத்த ... உன்னை வணங்காதவர்களுக்கு அரியவனாகி, பாசங்களிலிருந்து நீங்கியவனே, பாத்தமிழ்கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே. ... தமிழ்ப் பாக்களால் உன்னைத் துதிப்போர்க்கு எளிமையாய் இருக்கும் பெருமாளே.