நிலையாத சமுத்திரமான
சமுசார துறைக்கணின் மூழ்கி
நிசமானதெனப் பல பேசி
அதனூடே நெடுநாளும் உழைப்புளதாகி
பெரியோர்களிடைக் கரவாகி
நினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல்
தலையான வுடற்பிணி யூறி
பவநோயின் அலைப்பல வேகி
சலமான பயித்திய மாகி தடுமாறித் தவியாமல்
பிறப்பையு நாடி யதுவேரை யறுத்து
உனையோதி தலைமீதில் பிழைத்திடவே
நினருள்தாராய்
கலியாண சுபுத்திரனாக
குறமாது தனக்கு விநோத
கவினாரு புயத்தில் உலாவி விளையாடி
களிகூரும் உனைத்துணை தேடும் அடியேனை
சுகப்பட வேவை கடனாகும்
இதுக்கன மாகு முருகோனே
பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே
சிவலோக மெனப்பரி வேறு
பதியான திருத்தணி மேவு
பவரோக வயித்திய நாத பெருமாளே.
அகலம், ஆழம் இவ்வளவு என்று காணமுடியாத பெரும் சமுத்திரம் போன்ற சம்சாரம் ஆகிய நீர்த்துறையிலே மூழ்கி, மெய் போன்ற பல பொய்களைப் பேசி, அந்த சம்சாரக் கடலிலே, நீண்ட காலமாக உழைப்புள்ளவன் ஆகி, பெரியோர்களின் கூட்டத்தில் சேராமல் ஒளிந்து மறைந்து ஒதுங்கி, நல்ல நினைவோடு நின்னடிக்கான தொண்டுகளை விரும்பிப் போற்றாமல், உடலில் முதன்மையான நோய்கள் வந்து தாக்கவும், இந்த சம்சார சாகரத்தில் பிறவி நோய் என்னும் பல அலைகள் வீசவும், கோபம் கொண்ட பைத்தியக்காரனாக மாறி, யான் தடுமாறித் தவிக்காமல், பிறவியின் மூல காரணத்தை ஆராய்ந்து, அதன் ஆணிவேராகிய ஆசையை அறுத்து, உன் புகழ் ஓதி இவ்வுலகில் உய்யுமாறு உன் திருவருள் புரிந்து ஆட்கொள்வாயாக. மேன்மை தங்கிய கல்யாண மாப்பிள்ளையாகவே குறக் குல வள்ளி தேவியிடத்தில் என்றும் விளங்கி உல்லாசமாக, அழகு நிறைந்த அவளது திருப் புயத்தில் தழுவி உலாவி லீலைகள் புரிந்து மகிழும் உன்னை உற்றதுணையெனத் தேடுகின்ற என்னை இன்பம் அடையும்படியாகவே வைத்தருள்க. இது உனக்குக் கடமையாகும். அவ்வாறு என்னை அருளினால் அது உனக்குப் பெருமையும் ஆகும், முருகனே. பன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன் திருப்புகழைப் பாடி இவ்வுலகிலே உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து வாழும்படியாக அருளும் செவ்வேளே, இதுவே பூலோகத்தில் உள்ள சிவலோகம் என்ற அன்பை உண்டாக்கத்தக்க திருத்தலமாகிய திருத்தணிகையில் வாழ்கின்ற, பிறவிப் பெரு நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே.
நிலையாத சமுத்திரமான ... அகலம், ஆழம் இவ்வளவு என்று காணமுடியாத பெரும் சமுத்திரம் போன்ற சமுசார துறைக்கணின் மூழ்கி ... சம்சாரம் ஆகிய நீர்த்துறையிலே மூழ்கி, நிசமானதெனப் பல பேசி ... மெய் போன்ற பல பொய்களைப் பேசி, அதனூடே நெடுநாளும் உழைப்புளதாகி ... அந்த சம்சாரக் கடலிலே, நீண்ட காலமாக உழைப்புள்ளவன் ஆகி, பெரியோர்களிடைக் கரவாகி ... பெரியோர்களின் கூட்டத்தில் சேராமல் ஒளிந்து மறைந்து ஒதுங்கி, நினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல் ... நல்ல நினைவோடு நின்னடிக்கான தொண்டுகளை விரும்பிப் போற்றாமல், தலையான வுடற்பிணி யூறி ... உடலில் முதன்மையான நோய்கள் வந்து தாக்கவும், பவநோயின் அலைப்பல வேகி ... இந்த சம்சார சாகரத்தில் பிறவி நோய் என்னும் பல அலைகள் வீசவும், சலமான பயித்திய மாகி தடுமாறித் தவியாமல் ... கோபம் கொண்ட பைத்தியக்காரனாக மாறி, யான் தடுமாறித் தவிக்காமல், பிறப்பையு நாடி யதுவேரை யறுத்து ... பிறவியின் மூல காரணத்தை ஆராய்ந்து, அதன் ஆணிவேராகிய ஆசையை அறுத்து, உனையோதி தலைமீதில் பிழைத்திடவே ... உன் புகழ் ஓதி இவ்வுலகில் உய்யுமாறு நினருள்தாராய் ... உன் திருவருள் புரிந்து ஆட்கொள்வாயாக. கலியாண சுபுத்திரனாக ... மேன்மை தங்கிய கல்யாண மாப்பிள்ளையாகவே குறமாது தனக்கு விநோத ... குறக் குல வள்ளி தேவியிடத்தில் என்றும் விளங்கி உல்லாசமாக, கவினாரு புயத்தில் உலாவி விளையாடி ... அழகு நிறைந்த அவளது திருப் புயத்தில் தழுவி உலாவி லீலைகள் புரிந்து களிகூரும் உனைத்துணை தேடும் அடியேனை ... மகிழும் உன்னை உற்றதுணையெனத் தேடுகின்ற என்னை சுகப்பட வேவை கடனாகும் ... இன்பம் அடையும்படியாகவே வைத்தருள்க. இது உனக்குக் கடமையாகும். இதுக்கன மாகு முருகோனே ... அவ்வாறு என்னை அருளினால் அது உனக்குப் பெருமையும் ஆகும், முருகனே. பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி ... பன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன் திருப்புகழைப் பாடி படிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே ... இவ்வுலகிலே உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து வாழும்படியாக அருளும் செவ்வேளே, சிவலோக மெனப்பரி வேறு ... இதுவே பூலோகத்தில் உள்ள சிவலோகம் என்ற அன்பை உண்டாக்கத்தக்க பதியான திருத்தணி மேவு ... திருத்தலமாகிய திருத்தணிகையில் வாழ்கின்ற, பவரோக வயித்திய நாத பெருமாளே. ... பிறவிப் பெரு நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே.