பகலி ராவினுங் கருவி யால்
அ(ன்)னம் பருகி யாவிகொண்டு
உடல்பேணி
பழைய வேதமும் புதிய நூல்களும்
பலபுராணமுஞ் சிலவோதி
அகல நீளமென்று அளவு கூறரும்
பொருளிலே அமைந்து அடைவோரை
அசடர் மூகரென்று அவலமே மொழிந்து
அறிவிலேன் அழிந்திடலாமோ
சகல லோகமும் புகல
நாடொறும் சறுகிலாத
செங்கழுநீரும் தளவு நீபமும்
புனையு மார்ப
தென் தணிகை மேவு செங்கதிர்வேலா
சிகர பூதரந் தகர
நான்முகன் சிறுகு வாசவன்
சிறைமீள
திமிர சாகரங் கதற
மாமரஞ் சிதற
வேல்விடும் பெருமாளே.
பகலிலும் இரவிலும் இந்த உடம்பு என்ற கருவியால் சோறு உண்டு உயிரைப் பாதுகாத்து இவ்வுடம்பை விரும்பி வளர்த்த யான், பழமையான வேத நூல்களையும் புதுமையான நூல்களையும் பலவகையான புராணங்களையும் ஒரு சிலவற்றை ஓதி உணர்ந்து, இத்தனை அகலம் இத்தனை நீளம் என்று அளக்க முடியாத பேரின்பப் பொருளிலே மனத்தை வைத்து அமைதியுறும் ஆன்றோரை, மூடர், ஊமையர் என்றெல்லாம் வீண் வார்த்தைகளால் அவமதித்து அறிவிலியாகிய அடியேன் அழிந்து போகலாமா? எல்லா உலகங்களும் போற்றிப் புகழும்படி, தினந்தோறும் தவறாமல் மலர்கின்ற செங்கழுநீர் மலரும், முல்லையும், கடப்ப மலரும் தரிக்கின்ற மார்பனே, அழகிய திருத்தணிகையில் வாழ்கின்ற செவ்வொளி வீசும் வேலாயுதா, சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலை பொடிப்பொடியாக, பிரம்மாவும், மேல்நிலையிலிருந்து தாழ்ந்த இந்திரனும் சூரனது சிறைச்சாலையிலிருந்து மீட்சி பெற, இருண்ட கடல் கொந்தளித்து அலை ஓசை மிக, மாமரமாக மாய உருக்கொண்ட சூரனது உடல் பிளவுபட, வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.