பூசல் இட்டுச் சரத்தை நேர் கழித்துப் பெருத்த போர் விடத்தைக் கெடுத்து வடி கூர் வாள் போல முட்டி
குழைக்குள் ஓடி வெட்டித் தொளைத்து போக(ம்) மிக்கப் பரிக்கும் விழியார் மேல்
ஆசை வைத்துக் கலக்க மோகம் உற்றுத் துயர்க்குள் ஆகி மெத்தக் களைத்து உள் அழியாமே
ஆரணத்துக் கண் நத்து நாண் மலர்ப் பொன் பதத்தை யான் வழுத்திச் சுகிக்க அருள்வாயே
வாசம் உற்றுத் தழைத்த தாள் இணைப் பத்தர் அத்த மாதர்கள் கண் சிறைக்குள் அழியாமே வாழ்வு உறப் புக்கி
ரத்ன ரேகை ஒக்கச் சிறக்கும் மா மயில் பொன் கழுத்தில் வரும் வீரா
வீசும் முத்துத் தெறிக்க ஓலை புக்கு உற்று இருக்கும் வீறு உடைப் பொன் குறத்தி கணவோனே
வேல் எடுத்துக் கரத்தில் நீல வெற்பில் தழைத்த வேள் எனச் சொல் கருத்தர் பெருமாளே.
போர் புரிவது போல் அமைந்து, அம்பை (தனது கூர்மைக்கு) நேர் நிற்க முடியாமல் விரட்டித் தள்ளி, மிகுந்து நெருங்கி வந்த (ஆலகால) விஷத்தை வென்று அழித்து, மிகக் கூர்மை கொண்ட வாள் போலத் தாக்கி, காதிலுள்ள குண்டலங்கள் வரையிலும் ஓடிப் பாய்ந்து, கண்டவர் உயிரை வெட்டித் தொளைத்து, இன்பத்தைத் தன்னிடம் நிரம்பக் கொண்டுள்ள கண்களை உடைய பொது மகளிர் மேல் ஆசை வைத்து, கலக்கும் மோகத்தைக் கொண்டு, துயரத்துக்கு உள்ளாகி மிகவும் சோர்ந்து உள்ளம் குலைந்து போகாமல், வேதத்தின் கண் விரும்பிப் போற்றும் புது மலர் அணிந்துள்ள அழகிய திருவடியை நான் போற்றிச் சுகம் பெற அருள் புரிவாயாக. நறுமணம் கொண்டு விளங்கும் உனது திருவடியைப் பற்றிய பக்தர்கள், பொருளாசை கொண்ட விலைமாதர்களின் கண் என்னும் சிறைச் சாலையில் அடைபட்டு அழிந்து போகாமல் நல் வாழ்வை அடையும்படி புறப்பட்டு, ரத்ன வரிகள் போலப் பிரகாசிக்கும் நிறம் கொண்ட மேன்மையான மயிலின் அழகிய கழுத்தில் வருகின்ற வீரனே, ஒளி வீசும் முத்துக்கள் சிதறுண்ண, (தினைப்புனத்தில்) ஓலையால் ஆக்கப்பட்ட பரண் மீது புகுந்து நின்றிருக்கும் பெருமை வாய்ந்த அழகிய குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, கையில் வேலாயுதத்துடன், நீலோற்பலம் (தினமும் சுனையில்) மலர்கின்ற திருத்தணிகை மலையில் மகிழ்ந்து வீற்றிருப்பவனே, செவ்வேளே எனக் கூறிப் புகழும் கருத்துள்ள அடியார்களின் பெருமாளே.
பூசல் இட்டுச் சரத்தை நேர் கழித்துப் பெருத்த போர் விடத்தைக் கெடுத்து வடி கூர் வாள் போல முட்டி ... போர் புரிவது போல் அமைந்து, அம்பை (தனது கூர்மைக்கு) நேர் நிற்க முடியாமல் விரட்டித் தள்ளி, மிகுந்து நெருங்கி வந்த (ஆலகால) விஷத்தை வென்று அழித்து, மிகக் கூர்மை கொண்ட வாள் போலத் தாக்கி, குழைக்குள் ஓடி வெட்டித் தொளைத்து போக(ம்) மிக்கப் பரிக்கும் விழியார் மேல் ... காதிலுள்ள குண்டலங்கள் வரையிலும் ஓடிப் பாய்ந்து, கண்டவர் உயிரை வெட்டித் தொளைத்து, இன்பத்தைத் தன்னிடம் நிரம்பக் கொண்டுள்ள கண்களை உடைய பொது மகளிர் மேல் ஆசை வைத்துக் கலக்க மோகம் உற்றுத் துயர்க்குள் ஆகி மெத்தக் களைத்து உள் அழியாமே ... ஆசை வைத்து, கலக்கும் மோகத்தைக் கொண்டு, துயரத்துக்கு உள்ளாகி மிகவும் சோர்ந்து உள்ளம் குலைந்து போகாமல், ஆரணத்துக் கண் நத்து நாண் மலர்ப் பொன் பதத்தை யான் வழுத்திச் சுகிக்க அருள்வாயே ... வேதத்தின் கண் விரும்பிப் போற்றும் புது மலர் அணிந்துள்ள அழகிய திருவடியை நான் போற்றிச் சுகம் பெற அருள் புரிவாயாக. வாசம் உற்றுத் தழைத்த தாள் இணைப் பத்தர் அத்த மாதர்கள் கண் சிறைக்குள் அழியாமே வாழ்வு உறப் புக்கி ... நறுமணம் கொண்டு விளங்கும் உனது திருவடியைப் பற்றிய பக்தர்கள், பொருளாசை கொண்ட விலைமாதர்களின் கண் என்னும் சிறைச் சாலையில் அடைபட்டு அழிந்து போகாமல் நல் வாழ்வை அடையும்படி புறப்பட்டு, ரத்ன ரேகை ஒக்கச் சிறக்கும் மா மயில் பொன் கழுத்தில் வரும் வீரா ... ரத்ன வரிகள் போலப் பிரகாசிக்கும் நிறம் கொண்ட மேன்மையான மயிலின் அழகிய கழுத்தில் வருகின்ற வீரனே, வீசும் முத்துத் தெறிக்க ஓலை புக்கு உற்று இருக்கும் வீறு உடைப் பொன் குறத்தி கணவோனே ... ஒளி வீசும் முத்துக்கள் சிதறுண்ண, (தினைப்புனத்தில்) ஓலையால் ஆக்கப்பட்ட பரண் மீது புகுந்து நின்றிருக்கும் பெருமை வாய்ந்த அழகிய குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, வேல் எடுத்துக் கரத்தில் நீல வெற்பில் தழைத்த வேள் எனச் சொல் கருத்தர் பெருமாளே. ... கையில் வேலாயுதத்துடன், நீலோற்பலம் (தினமும் சுனையில்) மலர்கின்ற திருத்தணிகை மலையில் மகிழ்ந்து வீற்றிருப்பவனே, செவ்வேளே எனக் கூறிப் புகழும் கருத்துள்ள அடியார்களின் பெருமாளே.