பொரியப் பொரியப் பொலி முத்து வடத் துகளில் புதை அத் தனம் மீதே
புரளப் புரளக் கறுவித் தறு கண் பொரு வில் சுறவக் கொடி வேள் தோள் தெரி வைக்கு(ம்)
அரிவைப் பரவைக்கு உருகிச் செயல் அற்றனள் கற்பு அழியாதே
செறி உற்று அணையில் துயில் உற்று அருமைத் தெரிவைக்கு உணர்வைத் தர வேணும்
சொரி கற்பக நல் பதியைத் தொழு கைச் சுரருக்கு உரிமைப் புரிவோனே
சுடர் பொன் கயிலைக் கடவுட்கு இசையச் சுருதிப் பொருளைப் பகர்வோனே
தரி கெட்டு அசுரப் படை கெட்டு ஒழியத் தனி நெட்டு அயிலைத் தொடும் வீரா
தவளப் பணிலத் தரளப் பழனத் தணிகைக் குமரப் பெருமாளே.
காமத்தீயால் மேலும் மேலும் பொரிக்கப்பட்டு விளங்கும் முத்து மாலை தூள்பட்டுப் புதைபடும் அந்த மார்பகங்களின் மேல், (இப்பெண் படுக்கையில்) புரண்டுப் புரண்டு வேதனைப்படுமாறு அவள் மீது கோபம் கொண்டு கொடுமையுடன் போர் செய்யும் (கரும்பு) வில்லையும், சுறா மீன் கொடியையும் உடைய மன்மதனின் கை தெரிந்து குறிபார்த்துச் செலுத்தும் கூர்மை கொண்ட பாணத்துக்கும், வம்பு பேசும் மகளிர்களுக்கும், ஒலிக்கும் கடலுக்கும் மனம் உருகினவளாய், செய்ய வேண்டிய செயல்கள் அற்றவளான இவளுடைய கற்பு அழியாதவாறு, நீ இவளுடன் நெருங்கி படுக்கையில் துயில் கொண்டு, இந்த அருமையான மாதுக்கு (மயக்கத்தை நீக்கி) நல்லுணர்வைத் தர வேண்டும். சொரியும் (மலர்களை உடைய) கற்பக மரங்கள் உள்ள அமராவதி நகரை, தொழுகின்ற கைகளுடன் நின்ற தேவர்களுக்கு உரிமையாகும்படி உதவியவனே, ஒளி வீசும் அழகிய கயிலை மலைக் கடவுளாகிய சிவ பெருமானுக்கு, உள்ளம் உவந்து பொருந்தும்படி வேதப் பொருளை உபதேசம் செய்தவனே, நிலை கெட்டு அசுரர்களுடைய சேனைகள் அழிந்து தொலையும்படி, ஒப்பற்ற நெடிய வேலைச் செலுத்திய வீரனே, வெண்மையான சங்குகளும் முத்துக்களும் கிடக்கும் வயல்கள் உள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.
பொரியப் பொரியப் பொலி முத்து வடத் துகளில் புதை அத் தனம் மீதே ... காமத்தீயால் மேலும் மேலும் பொரிக்கப்பட்டு விளங்கும் முத்து மாலை தூள்பட்டுப் புதைபடும் அந்த மார்பகங்களின் மேல், புரளப் புரளக் கறுவித் தறு கண் பொரு வில் சுறவக் கொடி வேள் தோள் தெரி வைக்கு(ம்) ... (இப்பெண் படுக்கையில்) புரண்டுப் புரண்டு வேதனைப்படுமாறு அவள் மீது கோபம் கொண்டு கொடுமையுடன் போர் செய்யும் (கரும்பு) வில்லையும், சுறா மீன் கொடியையும் உடைய மன்மதனின் கை தெரிந்து குறிபார்த்துச் செலுத்தும் கூர்மை கொண்ட பாணத்துக்கும், அரிவைப் பரவைக்கு உருகிச் செயல் அற்றனள் கற்பு அழியாதே ... வம்பு பேசும் மகளிர்களுக்கும், ஒலிக்கும் கடலுக்கும் மனம் உருகினவளாய், செய்ய வேண்டிய செயல்கள் அற்றவளான இவளுடைய கற்பு அழியாதவாறு, செறி உற்று அணையில் துயில் உற்று அருமைத் தெரிவைக்கு உணர்வைத் தர வேணும் ... நீ இவளுடன் நெருங்கி படுக்கையில் துயில் கொண்டு, இந்த அருமையான மாதுக்கு (மயக்கத்தை நீக்கி) நல்லுணர்வைத் தர வேண்டும். சொரி கற்பக நல் பதியைத் தொழு கைச் சுரருக்கு உரிமைப் புரிவோனே ... சொரியும் (மலர்களை உடைய) கற்பக மரங்கள் உள்ள அமராவதி நகரை, தொழுகின்ற கைகளுடன் நின்ற தேவர்களுக்கு உரிமையாகும்படி உதவியவனே, சுடர் பொன் கயிலைக் கடவுட்கு இசையச் சுருதிப் பொருளைப் பகர்வோனே ... ஒளி வீசும் அழகிய கயிலை மலைக் கடவுளாகிய சிவ பெருமானுக்கு, உள்ளம் உவந்து பொருந்தும்படி வேதப் பொருளை உபதேசம் செய்தவனே, தரி கெட்டு அசுரப் படை கெட்டு ஒழியத் தனி நெட்டு அயிலைத் தொடும் வீரா ... நிலை கெட்டு அசுரர்களுடைய சேனைகள் அழிந்து தொலையும்படி, ஒப்பற்ற நெடிய வேலைச் செலுத்திய வீரனே, தவளப் பணிலத் தரளப் பழனத் தணிகைக் குமரப் பெருமாளே. ... வெண்மையான சங்குகளும் முத்துக்களும் கிடக்கும் வயல்கள் உள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.