பொற்பதத்தி னைத் துதித்து நற்பதத்திலுற்ற பத்தர்
பொற்பு உரைத்து நெக்கு உருக்க அறியாதே
புத்தகப் பிதற்றை விட்டு வித்தகத்து உனைத்துதிக்க
புத்தியிற்கலக்க மற்று நினையாதே
முற்படத்தலத்துதித்து பிற்படைத்த கிர்த்ய முற்றி
முற்கடைத் தவித்து நித்தம் உழல்வேனை
முட்ட இக் கடைப்பிறப்பி னுட் கிடப்பதைத் தவிர்த்து
முத்தி சற்று எனக்களிப்பது ஒருநாளே
வெற்பளித்த தற்பரைக்கு இடப்புறத்தை யுற்றளித்த
வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில்வீரா
வித்தை தத்வ முத்தமிழ்ச்சொல் அத்த சத்தம் வித்தரிக்கு
மெய்த்திருத்தணிப்பொருப்பில் உறைவோனே
கற்பகப்புனக்குறத்தி கச்சடர்த்த சித்ர முற்ற
கற்புரத்திருத்தனத்தில் அணைவோனே
கைத்து அரக்கர் கொத்து கச்சினத்து வஜ்ரனுக்கு அமைத்த
கைத்தொ ழுத்த றித்து விட்ட பெருமாளே.
உன் அழகிய பாதங்களைத் துதித்து உயர்ந்த பதவியை அடைந்த பக்தர்களுடைய சிறப்பினை எடுத்துரைத்து உள்ளம் நெகிழ்ந்துருகத் தெரியாமலும், புத்தகத்தைக் கற்று அவற்றைப் பிதற்றுவதை விட்டு, ஞானத்தால் உன்னைத் துதித்திட கலக்கமற்ற புத்தியுடன் உன்னை நினையாமலும், இந்தப் பூமியில் பிறத்தலில் நான் முற்பட்டவனாகி, பின்னர் இங்கு நான் செய்யும் அக்ரமமான செயல்கள் நிரம்பி, பிறருடைய வாசல்களின் முன் நின்று தவித்து தினமும் அலைகின்ற என்னை, அடியோடு இந்த இழிவான பிறப்பினுள் விழுந்து கிடப்பதிலிருந்தும் நீக்கி, மோக்ஷ இன்பத்தை சிறிது நீ எனக்கு அளித்தருளும் ஒரு பாக்கிய நாள் கிடைக்குமா? இமயமலை அரசன் போற்றி வளர்த்த பராசக்தியான பார்வதிக்கு தன் இடது பாகத்தை அன்புடன் அளித்த ஞான முதல்வரான சிவபிரான் பெற்ற வெற்றி மயில் வீரனே, கல்வி, உண்மை இவை இடம் பெற்ற முத்தமிழ் மொழியின் சொல்லும் பொருளோசையும் நீடித்திருக்கும் மெய்ம்மைத் திருத்தணி மலையில் வாழ்பவனே, கற்பக விருட்சங்கள் போன்ற மரங்கள் உள்ள வள்ளிமலைப் புனத்தில் வாழும் குறத்தி வள்ளியின் கச்சு நெருக்கும் அழகுள்ள பச்சைக் கற்பூர மணம் வீசும் திருமார்பை அணைபவனே, பகைத்த அரக்கர் கூட்டம் சிதறுண்டு அழியுமாறு கோபித்து, வஜ்ராயுதனாம் இந்திரனுக்கு சூரன் இட்ட கை விலங்கை முறித்தெறிந்து அருளிய பெருமாளே.
பொற்பதத்தி னைத் துதித்து நற்பதத்திலுற்ற பத்தர் ... உன் அழகிய பாதங்களைத் துதித்து உயர்ந்த பதவியை அடைந்த பக்தர்களுடைய பொற்பு உரைத்து நெக்கு உருக்க அறியாதே ... சிறப்பினை எடுத்துரைத்து உள்ளம் நெகிழ்ந்துருகத் தெரியாமலும், புத்தகப் பிதற்றை விட்டு வித்தகத்து உனைத்துதிக்க ... புத்தகத்தைக் கற்று அவற்றைப் பிதற்றுவதை விட்டு, ஞானத்தால் உன்னைத் துதித்திட புத்தியிற்கலக்க மற்று நினையாதே ... கலக்கமற்ற புத்தியுடன் உன்னை நினையாமலும், முற்படத்தலத்துதித்து பிற்படைத்த கிர்த்ய முற்றி ... இந்தப் பூமியில் பிறத்தலில் நான் முற்பட்டவனாகி, பின்னர் இங்கு நான் செய்யும் அக்ரமமான செயல்கள் நிரம்பி, முற்கடைத் தவித்து நித்தம் உழல்வேனை ... பிறருடைய வாசல்களின் முன் நின்று தவித்து தினமும் அலைகின்ற என்னை, முட்ட இக் கடைப்பிறப்பி னுட் கிடப்பதைத் தவிர்த்து ... அடியோடு இந்த இழிவான பிறப்பினுள் விழுந்து கிடப்பதிலிருந்தும் நீக்கி, முத்தி சற்று எனக்களிப்பது ஒருநாளே ... மோக்ஷ இன்பத்தை சிறிது நீ எனக்கு அளித்தருளும் ஒரு பாக்கிய நாள் கிடைக்குமா? வெற்பளித்த தற்பரைக்கு இடப்புறத்தை யுற்றளித்த ... இமயமலை அரசன் போற்றி வளர்த்த பராசக்தியான பார்வதிக்கு தன் இடது பாகத்தை அன்புடன் அளித்த வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில்வீரா ... ஞான முதல்வரான சிவபிரான் பெற்ற வெற்றி மயில் வீரனே, வித்தை தத்வ முத்தமிழ்ச்சொல் அத்த சத்தம் வித்தரிக்கு ... கல்வி, உண்மை இவை இடம் பெற்ற முத்தமிழ் மொழியின் சொல்லும் பொருளோசையும் நீடித்திருக்கும் மெய்த்திருத்தணிப்பொருப்பில் உறைவோனே ... மெய்ம்மைத் திருத்தணி மலையில் வாழ்பவனே, கற்பகப்புனக்குறத்தி கச்சடர்த்த சித்ர முற்ற ... கற்பக விருட்சங்கள் போன்ற மரங்கள் உள்ள வள்ளிமலைப் புனத்தில் வாழும் குறத்தி வள்ளியின் கச்சு நெருக்கும் அழகுள்ள கற்புரத்திருத்தனத்தில் அணைவோனே ... பச்சைக் கற்பூர மணம் வீசும் திருமார்பை அணைபவனே, கைத்து அரக்கர் கொத்து கச்சினத்து வஜ்ரனுக்கு அமைத்த ... பகைத்த அரக்கர் கூட்டம் சிதறுண்டு அழியுமாறு கோபித்து, வஜ்ராயுதனாம் இந்திரனுக்கு சூரன் இட்ட கைத்தொ ழுத்த றித்து விட்ட பெருமாளே. ... கை விலங்கை முறித்தெறிந்து அருளிய பெருமாளே.