முலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச முகில் அளகம் அகில் பொங்க அமுதான மொழி பதற அருமந்த விழி குவிய
மதி கொண்ட முகம் வெயர்வு பெற மன்றல் அணை ஊடே கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட உருகி
இதயங்கள் ப்ரியமே கூர் கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ
அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட அதிர வெடி பட அண்டம் இமையோர்கள் அபயம் என
நடு நின்ற அசுரர் அடி உண்டு அவர்கள் முனை கெட நின்று பொரும் வேலா
தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை சடை முடியில் அணிகின்ற பெருமானார் தரு குமர
விட ஐந்து தலை அரவு தொழுகின்ற தணி மலையில் உறைகின்ற பெருமாளே.
மார்பகங்கள் புளகம் கொள்ள, அழகிய கையில் அணிந்துள்ள சரியும் வளையல்களும் மெதுவாக ஒலிக்க, மேகம் போன்ற கரிய கூந்தல் அகில் மணம் வீச, அமுதம் போன்ற மொழிகள் நடுக்கமும் விரைவும் காட்ட, அருமை வாய்ந்த கண்கள் குவிய, நிலவு போன்ற முகத்தில் வியர்வை எழ, நறு மணம் உள்ள படுக்கையில் ஆடை தளர, செழுமை வாய்ந்த வஞ்சிக் கொடி போன்ற இடை துவட்சி உற, உடல்கள் ஒன்றோடு ஒன்று சேர உருகி, உள்ளம் அன்பு மிக்கு புணர்ச்சித் தொழில் அளவு கடந்த இன்ப அலையில் அலை படுகின்ற கவலை ஒழிய, உன்னுடைய அன்பை நான் அடையமாட்டேனோ? அலை வீசும் வலிமை வாய்ந்த கடலின் உட்புறத்தில் நெருப்பு நெருங்கிப் பற்றிக் கொள்ள, அண்டம் அதிர்ச்சியுடன் வெடிபட, தேவர்கள் அடைக்கலம் என்று முறையிட, இடை நிலத்தே நின்ற அசுரர்கள் அழிய, அடிபட்டு அவர்களின் சேனைகள் அழிய, நின்று சண்டை செய்த வேலனே, தலையில் நிலவு, கங்கை, தும்பை, இள அறுகம் புல், மணம் வீசும் கொன்றை மலர் இவைகளைச் சடை முடியில் அணிந்த சிவபெருமான் அருளிய குமரனே, விஷம் கொண்ட ஐந்து தலைகளை உடைய பாம்பு பூஜித்து வணங்கும் திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
முலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச முகில் அளகம் அகில் பொங்க அமுதான மொழி பதற அருமந்த விழி குவிய ... மார்பகங்கள் புளகம் கொள்ள, அழகிய கையில் அணிந்துள்ள சரியும் வளையல்களும் மெதுவாக ஒலிக்க, மேகம் போன்ற கரிய கூந்தல் அகில் மணம் வீச, அமுதம் போன்ற மொழிகள் நடுக்கமும் விரைவும் காட்ட, அருமை வாய்ந்த கண்கள் குவிய, மதி கொண்ட முகம் வெயர்வு பெற மன்றல் அணை ஊடே கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட உருகி ... நிலவு போன்ற முகத்தில் வியர்வை எழ, நறு மணம் உள்ள படுக்கையில் ஆடை தளர, செழுமை வாய்ந்த வஞ்சிக் கொடி போன்ற இடை துவட்சி உற, உடல்கள் ஒன்றோடு ஒன்று சேர உருகி, இதயங்கள் ப்ரியமே கூர் கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ ... உள்ளம் அன்பு மிக்கு புணர்ச்சித் தொழில் அளவு கடந்த இன்ப அலையில் அலை படுகின்ற கவலை ஒழிய, உன்னுடைய அன்பை நான் அடையமாட்டேனோ? அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட அதிர வெடி பட அண்டம் இமையோர்கள் அபயம் என ... அலை வீசும் வலிமை வாய்ந்த கடலின் உட்புறத்தில் நெருப்பு நெருங்கிப் பற்றிக் கொள்ள, அண்டம் அதிர்ச்சியுடன் வெடிபட, தேவர்கள் அடைக்கலம் என்று முறையிட, நடு நின்ற அசுரர் அடி உண்டு அவர்கள் முனை கெட நின்று பொரும் வேலா ... இடை நிலத்தே நின்ற அசுரர்கள் அழிய, அடிபட்டு அவர்களின் சேனைகள் அழிய, நின்று சண்டை செய்த வேலனே, தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை சடை முடியில் அணிகின்ற பெருமானார் தரு குமர ... தலையில் நிலவு, கங்கை, தும்பை, இள அறுகம் புல், மணம் வீசும் கொன்றை மலர் இவைகளைச் சடை முடியில் அணிந்த சிவபெருமான் அருளிய குமரனே, விட ஐந்து தலை அரவு தொழுகின்ற தணி மலையில் உறைகின்ற பெருமாளே. ... விஷம் கொண்ட ஐந்து தலைகளை உடைய பாம்பு பூஜித்து வணங்கும் திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.