மொகுமொகு என நறை கொள் மலர் வற்கத்தில் அ(ன்)புடைய முளரி மயில் அனையவர்கள்
நெய்த்துக் கறுத்து மழை முகில் அனைய குழல் சரிய
ஒக்கக் கனத்து வளர் அதிபார முலை புளகம் எழ வளைகள் சத்திக்க முத்த மணி முறுவல் இள நிலவு தர
மெத்தத் தவித்த சில மொழி பதற இடை துவள வட்டச் சிலை புருவ இணை கோட
அகில் மிருக மத சலிலம் விட்டுப் பணித்த மலர் அமளி பட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு அமர் பொருத நெடி விழி செக்கச் சிவக்க
அமர மத(ம்) நீதி அடல் வடிவு நலம் இதனில் மட்கச் செருக்கி உ(ள்)ளம் உருக
நரை பெருக உடல் ஒக்கப் பழுத்து விழும் அளவில் ஒரு பரம வெளியில் புக்கு இருக்க எனை நினையாதோ
செகு - - - எனவே நீள்
சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர் தணிகை மலை தனில் மயிலில் நிர்த்தத்தனில் நிற்க வல்ல பெருமாளே.
கம கம என்னும் வாசனை கொண்ட மலர்க் கூட்டத்தில் விருப்பம் கொண்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மி போன்ற மயிலை நிகர்த்த (பொது) மகளிருடைய நெய்ப்பும், கருமையும் கொண்ட, கருமேகம் போன்ற கூந்தல் சரிந்து விழ, ஒன்று சேர பருத்து வளர்ந்துள்ள, அதிகக் கனம் கொண்ட மார்பகங்கள் புளகம் கொள்ள, (கையில் அணிந்துள்ள) வளைகள் ஒலி செய்ய, முத்துக்கள் போன்ற பற்கள் இள நிலவின் ஒளியை வீச, மிகவும் தவிப்புடன் சில மொழிகள் அசைவுற்று வெளிப்பட, இடை நெளிவு உற, வட்டவடிவமான வில்லைப் போன்ற புருவங்கள் இரண்டும் வளைவு உற, அகில், கஸ்தூரி, பன்னீர் விட்டு அலங்கரிக்கப்பட்ட மலர்ப் படுக்கை கசங்கி கலைவு பட, ஒளி கலந்த ரத்தினங்களால் அமைக்கப்பட்டுப் பிரகாசிக்கும் குண்டலங்களுடன் போர் புரிவது போல் நீண்டுள்ள கண்கள் மிகவும் சிவக்க, (இவ்வாறு கலவி இன்பத்தில்) பொருந்துவதால் கொள்கை, அறிவு, நீதி, வலிமை, உருவம், குணம் இவை எல்லாம் மங்கும்படியாக அளவு கடந்து (அதனால்) உள்ளம் தளர்ச்சி அடைந்து உருக, நரை அதிகமாக, உடல் ஒரு சேர முதிர்ந்து கிழமாய் விழும் அந்தச் சமயத்தில், ஒப்பற்ற பரஞ் சோதியான பேரின்ப வீட்டில் நான் புகுந்து ஓய்வு பெற்று இருக்க என்னைக் குறித்து உனது திருவுள்ளம் நினையாதோ? இவ்வாறான ஒலி பெருகி நீள தாள ஒத்துடன் முழவு வாத்தியங்கள் பலவும் இரண்டு பக்கங்களிலும் ஒலிக்கவும், பழைமை வாய்ந்த அன்னை பைரவி துர்க்கையும் உள்ளம் அஞ்சி திகைப்பு அடையவும், சிறப்பு வாய்ந்த திருத்தணிகை மலையில் மயில் மீது நிலைத்து நடனம் செய்யவல்ல பெருமாளே.
மொகுமொகு என நறை கொள் மலர் வற்கத்தில் அ(ன்)புடைய முளரி மயில் அனையவர்கள் ... கம கம என்னும் வாசனை கொண்ட மலர்க் கூட்டத்தில் விருப்பம் கொண்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மி போன்ற மயிலை நிகர்த்த (பொது) மகளிருடைய நெய்த்துக் கறுத்து மழை முகில் அனைய குழல் சரிய ... நெய்ப்பும், கருமையும் கொண்ட, கருமேகம் போன்ற கூந்தல் சரிந்து விழ, ஒக்கக் கனத்து வளர் அதிபார முலை புளகம் எழ வளைகள் சத்திக்க முத்த மணி முறுவல் இள நிலவு தர ... ஒன்று சேர பருத்து வளர்ந்துள்ள, அதிகக் கனம் கொண்ட மார்பகங்கள் புளகம் கொள்ள, (கையில் அணிந்துள்ள) வளைகள் ஒலி செய்ய, முத்துக்கள் போன்ற பற்கள் இள நிலவின் ஒளியை வீச, மெத்தத் தவித்த சில மொழி பதற இடை துவள வட்டச் சிலை புருவ இணை கோட ... மிகவும் தவிப்புடன் சில மொழிகள் அசைவுற்று வெளிப்பட, இடை நெளிவு உற, வட்டவடிவமான வில்லைப் போன்ற புருவங்கள் இரண்டும் வளைவு உற, அகில் மிருக மத சலிலம் விட்டுப் பணித்த மலர் அமளி பட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு அமர் பொருத நெடி விழி செக்கச் சிவக்க ... அகில், கஸ்தூரி, பன்னீர் விட்டு அலங்கரிக்கப்பட்ட மலர்ப் படுக்கை கசங்கி கலைவு பட, ஒளி கலந்த ரத்தினங்களால் அமைக்கப்பட்டுப் பிரகாசிக்கும் குண்டலங்களுடன் போர் புரிவது போல் நீண்டுள்ள கண்கள் மிகவும் சிவக்க, அமர மத(ம்) நீதி அடல் வடிவு நலம் இதனில் மட்கச் செருக்கி உ(ள்)ளம் உருக ... (இவ்வாறு கலவி இன்பத்தில்) பொருந்துவதால் கொள்கை, அறிவு, நீதி, வலிமை, உருவம், குணம் இவை எல்லாம் மங்கும்படியாக அளவு கடந்து (அதனால்) உள்ளம் தளர்ச்சி அடைந்து உருக, நரை பெருக உடல் ஒக்கப் பழுத்து விழும் அளவில் ஒரு பரம வெளியில் புக்கு இருக்க எனை நினையாதோ ... நரை அதிகமாக, உடல் ஒரு சேர முதிர்ந்து கிழமாய் விழும் அந்தச் சமயத்தில், ஒப்பற்ற பரஞ் சோதியான பேரின்ப வீட்டில் நான் புகுந்து ஓய்வு பெற்று இருக்க என்னைக் குறித்து உனது திருவுள்ளம் நினையாதோ? செகு - - - எனவே நீள் ... இவ்வாறான ஒலி பெருகி நீள சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர் தணிகை மலை தனில் மயிலில் நிர்த்தத்தனில் நிற்க வல்ல பெருமாளே. ... தாள ஒத்துடன் முழவு வாத்தியங்கள் பலவும் இரண்டு பக்கங்களிலும் ஒலிக்கவும், பழைமை வாய்ந்த அன்னை பைரவி துர்க்கையும் உள்ளம் அஞ்சி திகைப்பு அடையவும், சிறப்பு வாய்ந்த திருத்தணிகை மலையில் மயில் மீது நிலைத்து நடனம் செய்யவல்ல பெருமாளே.