வெற்றி செயவுற்ற கழை விற்குதை வளைத்து
மதன் விட்டகணை பட்ட விசையாலே
வெட்டவெளியில் தெருவில் வட்டபணையில்
கனல்விரித்தொளி பரப்பு மதியாலே
பற்றி வசை கற்றபல தத்தையர் தமக்கும்
இசை பட்ட திகிரிக்கும் அழியாதே
பத்தியை யெனக்கருளி முத்தியை யளித்து
வளர் பச்சைமயிலுற்று வரவேணும்
நெற்றிவிழி பட்டெரிய
நட்டமிடும் உத்தமர் நினைக்குமனமொத்த கழல்வீரா
நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
நித்தம் இறுகத் தழுவு மார்பா
எற்றியதிருச்சலதி சுற்றிய திருத்தணியில்
எப்பொழுது நிற்கு முருகோனே
எட்டு அசலம் எட்ட நிலமுட்டமுடி நெட்டு அசுரர்
இட்டசிறை விட்ட பெருமாளே.
ஜெயமே தரவல்ல கரும்பு வில்லின் முனையை வளைத்து மன்மதன் செலுத்திய மலர் அம்புகள் மேலே தைத்த வேகத்தாலும், வெட்டவெளியிலும், தெருக்களிலும், வட்டப் பறையென நின்று நெருப்பை அள்ளி வீசி ஒளி பரப்பும் நிலவினாலும், வசைமொழிகளை விடாது பிடித்துக்கொண்டு பயின்று, அவற்றையே பேசும் பல மாதர்களின் ஏச்சாலும், இசையை எழுப்பும் புல்லாங்குழலின் ஓசையாலும் நான் நலிவுறாமல், பக்தி நெறியை எனக்குத் தந்துதவி, முக்தியையும் அளிக்க உயர்ந்த பச்சை மயில் வாகனத்தில் ஏறி நீ வர வேண்டுகிறேன். நெற்றிக் கண்ணின் தீ பட்டு மன்மதன் எரிந்து போக, நடனம் செய்த பெரியோராம் சிவபிரான் உன்னைத் தியானிக்க, அவரது மனத்தில் பொருந்தி இருந்த திருவடிகளை உடைய வீரனே, தேன் ததும்பும் தாமரை போன்ற இள மார்பை உடைய, சத்தியவதியான குற வள்ளி அன்பு கொள்ளும்படியாக அவளை நாள்தோறும் கெட்டியாக அணைக்கும் மார்பனே, அலை வீசும் கடல்கள் சூழ்ந்த புவியில் திருத்தணியில் எப்பொழுதும் எழுந்தருளியிருக்கும் முருகனே, அஷ்ட குலகிரிகள் வரையிலும் எட்டிப் பரவ, உலகெல்லாம் தங்கள் ஆட்சியைச் செலுத்திய அசுரர்கள் தேவர்களை அடைத்த சிறையினின்றும் அவர்களை விடுவித்த பெருமாளே.
வெற்றி செயவுற்ற கழை விற்குதை வளைத்து ... ஜெயமே தரவல்ல கரும்பு வில்லின் முனையை வளைத்து மதன் விட்டகணை பட்ட விசையாலே ... மன்மதன் செலுத்திய மலர் அம்புகள் மேலே தைத்த வேகத்தாலும், வெட்டவெளியில் தெருவில் வட்டபணையில் ... வெட்டவெளியிலும், தெருக்களிலும், வட்டப் பறையென நின்று கனல்விரித்தொளி பரப்பு மதியாலே ... நெருப்பை அள்ளி வீசி ஒளி பரப்பும் நிலவினாலும், பற்றி வசை கற்றபல தத்தையர் தமக்கும் ... வசைமொழிகளை விடாது பிடித்துக்கொண்டு பயின்று, அவற்றையே பேசும் பல மாதர்களின் ஏச்சாலும், இசை பட்ட திகிரிக்கும் அழியாதே ... இசையை எழுப்பும் புல்லாங்குழலின் ஓசையாலும் நான் நலிவுறாமல், பத்தியை யெனக்கருளி முத்தியை யளித்து ... பக்தி நெறியை எனக்குத் தந்துதவி, முக்தியையும் அளிக்க வளர் பச்சைமயிலுற்று வரவேணும் ... உயர்ந்த பச்சை மயில் வாகனத்தில் ஏறி நீ வர வேண்டுகிறேன். நெற்றிவிழி பட்டெரிய ... நெற்றிக் கண்ணின் தீ பட்டு மன்மதன் எரிந்து போக, நட்டமிடும் உத்தமர் நினைக்குமனமொத்த கழல்வீரா ... நடனம் செய்த பெரியோராம் சிவபிரான் உன்னைத் தியானிக்க, அவரது மனத்தில் பொருந்தி இருந்த திருவடிகளை உடைய வீரனே, நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற ... தேன் ததும்பும் தாமரை போன்ற இள மார்பை உடைய, சத்தியவதியான குற வள்ளி அன்பு கொள்ளும்படியாக நித்தம் இறுகத் தழுவு மார்பா ... அவளை நாள்தோறும் கெட்டியாக அணைக்கும் மார்பனே, எற்றியதிருச்சலதி சுற்றிய திருத்தணியில் ... அலை வீசும் கடல்கள் சூழ்ந்த புவியில் திருத்தணியில் எப்பொழுது நிற்கு முருகோனே ... எப்பொழுதும் எழுந்தருளியிருக்கும் முருகனே, எட்டு அசலம் எட்ட நிலமுட்டமுடி நெட்டு அசுரர் ... அஷ்ட குலகிரிகள் வரையிலும் எட்டிப் பரவ, உலகெல்லாம் தங்கள் ஆட்சியைச் செலுத்திய அசுரர்கள் இட்டசிறை விட்ட பெருமாளே. ... தேவர்களை அடைத்த சிறையினின்றும் அவர்களை விடுவித்த பெருமாளே.