தறையின் மானுடர் ஆசையினால் மடல் எழுது(ம்) மால்அருள் மாதர்கள்
தோதக சரசர் மா மலர் ஓதியினால் இரு கொங்கையாலும்
தளர் மின் நேர் இடையால் உடையால் நடை அழகினால் மொழியால் விழியால்
மருள் சவலை நாய் அடியேன் மிக வாடி மயங்கலாமோ
பறவையான மெய் ஞானிகள் மோனிகள்
அணுக ஒணா வகை நீடும் இராசிய(ம்)
பவன பூரக(ம்) ஏகிகமாகிய விந்து நாதம்
பகர ஒணாதது சேர ஒணாதது நினை ஒணாததுவான
தயாபர பதியது ஆன சமாதி மனோலயம் வந்து தாராய்
சிறை விடாத நிசாசரர் சேனைகள் மடிய நீல கலாபம் அது ஏறிய
திறல் விநோத சமேள தயாபர
அம்புராசி திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய
திரிசிரா மலை மேல் உறை வீர
குறிஞ்சி வாழும் மறவர் நாயக ஆதி விநாயகர் இளைய நாயக காவிரி நாயக
வடிவின் நாயக ஆனை தன் நாயக எங்கள் மானின் மகிழு(ம்) நாயக தேவர்கள் நாயக
கவுரி நாயகனார் குரு நாயக
வடிவதாம் மலை யாவு(ம்) மேவிய தம்பிரானே.
இந்தப் பூமியில் மக்கள் காம ஆசையால் மடல் எழுதக் கூடிய அளவுக்கு (அவர்களுக்கு) மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்கள், வஞ்சனையுடன் காம லீலை செய்பவர்கள், நல்ல பூக்கள் கொண்டு விளங்கும் கூந்தலாலும், இரண்டு மார்புகளாலும், தளர்ச்சியைக் காட்டும், மின்னலுக்கு ஒப்பான, இடையாலும், உடுத்துள்ள ஆடையாலும், நடை அழகினாலும், பேசும் இனிய பேச்சினாலும், கண்களாலும், மயக்கம் கொள்ளும் சவலைப் பிள்ளையைப்போல, நாயினும் கீழான அடியேன், மிகவும் வாடி மயக்கம் கொள்ளலாமோ? (ஓரிடத்தில் தங்காது) பறவைபோல எங்கும் திரிந்து உலாவும் உண்மையான ஞானிகளும், மெளன நிலை கண்டவர்களும், அணுகுதற்குக் கூடாததாய் விலகி விளங்கும் இரகசியம், காற்றை (மூச்சை) பூரகமாக அடக்குவதால் (பிராணாயாமத்தால்) ஒன்றுபடக் கூடிய சிவசக்தி தத்துவ ஒலியாய் விளங்குவதும், சொல்ல முடியாததும், அடைய முடியாததும், நினைக்கவும் முடியாததுமான கருணைப் பரம் பொருளாய், மூலப் பொருளான மனதை ஒடுக்கும் சமாதி நிலைப் பேற்றை நீ வந்து (எனக்குத்) தந்து அருள வேண்டும். (தேவர்களுடைய) சிறையை விடாத அசுரர்களின் படைகள் இறக்கும்படியாக, நீல நிறங் கொண்ட மயிலின் மேல் ஏறி வரும் வல்லமை கொண்ட விநோதனே, கருணை கலந்த மூர்த்தியே, கடலின் பெரிய அலைகளைப்போல் அலைமோதி வரும் குளிர்ந்த நீருடன், குடகு நாட்டிலிருந்து வரும் காவிரி ஆற்றின் பெரிய அலைகளைக் கொண்ட திரிசிரா மலையில் வீற்றிருக்கும் வீரனே, மலை நிலத்தில் வாழும் வேடர்களின் நாயகனே, ஆதி கணபதிக்குத் தம்பியாகிய நாயகனே, காவிரிக்கு நாயகனே, அழகுக்கு ஒரு நாயகனே, தேவயானைக்கு நாயகனே, எங்கள் மான் போன்ற வள்ளி நாயகியிடத்தே மகிழும் நாயகனே, அமரர்கள் நாயகனே, பார்வதியின் நாயகனான சிவபெருமானுக்கு குரு மூர்த்தியே, அழகிய மலைகள் எல்லாவற்றிலும் வீற்றிருந்து அருளும் தம்பிரானே.
தறையின் மானுடர் ஆசையினால் மடல் எழுது(ம்) மால்அருள் மாதர்கள் ... இந்தப் பூமியில் மக்கள் காம ஆசையால் மடல் எழுதக் கூடிய அளவுக்கு (அவர்களுக்கு) மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்கள், தோதக சரசர் மா மலர் ஓதியினால் இரு கொங்கையாலும் ... வஞ்சனையுடன் காம லீலை செய்பவர்கள், நல்ல பூக்கள் கொண்டு விளங்கும் கூந்தலாலும், இரண்டு மார்புகளாலும், தளர் மின் நேர் இடையால் உடையால் நடை அழகினால் மொழியால் விழியால் ... தளர்ச்சியைக் காட்டும், மின்னலுக்கு ஒப்பான, இடையாலும், உடுத்துள்ள ஆடையாலும், நடை அழகினாலும், பேசும் இனிய பேச்சினாலும், கண்களாலும், மருள் சவலை நாய் அடியேன் மிக வாடி மயங்கலாமோ ... மயக்கம் கொள்ளும் சவலைப் பிள்ளையைப்போல, நாயினும் கீழான அடியேன், மிகவும் வாடி மயக்கம் கொள்ளலாமோ? பறவையான மெய் ஞானிகள் மோனிகள் ... (ஓரிடத்தில் தங்காது) பறவைபோல எங்கும் திரிந்து உலாவும் உண்மையான ஞானிகளும், மெளன நிலை கண்டவர்களும், அணுக ஒணா வகை நீடும் இராசிய(ம்) ... அணுகுதற்குக் கூடாததாய் விலகி விளங்கும் இரகசியம், பவன பூரக(ம்) ஏகிகமாகிய விந்து நாதம் ... காற்றை (மூச்சை) பூரகமாக அடக்குவதால் (பிராணாயாமத்தால்) ஒன்றுபடக் கூடிய சிவசக்தி தத்துவ ஒலியாய் விளங்குவதும், பகர ஒணாதது சேர ஒணாதது நினை ஒணாததுவான ... சொல்ல முடியாததும், அடைய முடியாததும், நினைக்கவும் முடியாததுமான தயாபர பதியது ஆன சமாதி மனோலயம் வந்து தாராய் ... கருணைப் பரம் பொருளாய், மூலப் பொருளான மனதை ஒடுக்கும் சமாதி நிலைப் பேற்றை நீ வந்து (எனக்குத்) தந்து அருள வேண்டும். சிறை விடாத நிசாசரர் சேனைகள் மடிய நீல கலாபம் அது ஏறிய ... (தேவர்களுடைய) சிறையை விடாத அசுரர்களின் படைகள் இறக்கும்படியாக, நீல நிறங் கொண்ட மயிலின் மேல் ஏறி வரும் திறல் விநோத சமேள தயாபர ... வல்லமை கொண்ட விநோதனே, கருணை கலந்த மூர்த்தியே, அம்புராசி திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய ... கடலின் பெரிய அலைகளைப்போல் அலைமோதி வரும் குளிர்ந்த நீருடன், குடகு நாட்டிலிருந்து வரும் காவிரி ஆற்றின் பெரிய அலைகளைக் கொண்ட திரிசிரா மலை மேல் உறை வீர ... திரிசிரா மலையில் வீற்றிருக்கும் வீரனே, குறிஞ்சி வாழும் மறவர் நாயக ஆதி விநாயகர் இளைய நாயக காவிரி நாயக ... மலை நிலத்தில் வாழும் வேடர்களின் நாயகனே, ஆதி கணபதிக்குத் தம்பியாகிய நாயகனே, காவிரிக்கு நாயகனே, வடிவின் நாயக ஆனை தன் நாயக எங்கள் மானின் மகிழு(ம்) நாயக தேவர்கள் நாயக ... அழகுக்கு ஒரு நாயகனே, தேவயானைக்கு நாயகனே, எங்கள் மான் போன்ற வள்ளி நாயகியிடத்தே மகிழும் நாயகனே, அமரர்கள் நாயகனே, கவுரி நாயகனார் குரு நாயக ... பார்வதியின் நாயகனான சிவபெருமானுக்கு குரு மூர்த்தியே, வடிவதாம் மலை யாவு(ம்) மேவிய தம்பிரானே. ... அழகிய மலைகள் எல்லாவற்றிலும் வீற்றிருந்து அருளும் தம்பிரானே.