புன மடந்தைக்கு தக்க புயத்தன்
குமரன் என்று எத்திப் பத்தர் துதிக்கும் பொருளை
நெஞ்சத்து கற்பனை முற்றும் பிறிது ஏதும்
புகலும் எண்பத்து எட்டு எட்டு இயல் தத்(து)வம்
சகலமும் பற்றி பற்று அற நிற்கும்
பொதுவை என்று ஒக்கத் தக்கது ஓர் அத்தம் தனை நாளும்
சினமுடன் தர்க்கித்துச் சிலுக்கிக் கொண்டு
அறுவரும் கைக்குத்து இட்டு ஒருவர்க்கும்
தெரி அரும் சத்(தி)யத்தை தெரிசித்து உன்செயல் பாடி
திசைதொறும் கற்பிக்கைக்கு இனி அற்பம்
திரு உ(ள்)ளம் பற்றி செச்சை மணக்கும்
சிறு சதங்கைப் பொன் பத்மம் எனக்கு என்று அருள்வாயே
கனப் பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம்
கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண்
கடலை கண்டு அப்பி பிட்டொடு மொக்கும் திரு வாயன்
கவள(ம்) துங்கக் கை கற்பக(ம்) முக்கண்
திகழு(ம்) நம் கொற்றத்து ஒற்றை மருப்பன்
கரி முகன் சித்ரப் பொன் புகர் வெற்பன் தனை ஈனும்
பனவி ஒன்று எட்டுச் சக்ரத் தலப் பெண்
கவுரி செம் பொன் பட்டுத் தரி அப்பெண்
பழய அண்டத்தைப் பெற்ற மடப் பெண் பணிவாரை
பவ தரங்கத்தைத் தப்ப நிறுத்தும்
பவதி கம்பர்க்குப் புக்கவள் பக்கம்
பயில் வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே.
தினைப்புனத்து மடந்தையாகிய வள்ளிக்கு ஏற்றதான புயங்களை உடையவன், குமரன் என்று போற்றி பக்தர்கள் துதிக்கின்ற பொருளை, மனத்தில் கொண்ட கற்பனைகள் முழுமையும், பிறவான பலவற்றையும், புகழ்ந்து சொல்லப்படும் தொண்ணூற்றாறு வகையான தத்துவ உண்மைகளும் ஆக எல்லாவற்றையும், பற்றியும், பற்று இல்லாமலும் நிற்கும் பொதுப் பொருளை, சூரியனுக்கு ஒப்பாகத் தக்க (பேரொளியைக் கொண்ட) ஒப்பற்றச் செல்வத்தை நாள் தோறும், கோபத்துடன் வாதாடிப் பேசி சண்டையிட்டுக் கொண்டு அறு வகைச் சமயத்தாரும் கைக்குத்துடன் வாதம் செய்து, ஒருவருக்கும் தெரிதற்கு அரிதான சத்தியப் பொருளை தரிசனம் செய்து, உன் திருவிளையாடல்களைப் பாடி, திக்குகள் தோறும் (உள்ள யாவருக்கும்) எடுத்து உபதேசிக்க, இனி மேல் நீ சற்று தயை கூர்ந்து, வெட்சி மாலை மணம் வீசும், சிறிய சதங்கை அணிந்துள்ள உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்? கனத்த பெரிய வயிற்றில் எள், பொரி, அப்பம், பழம், கிழங்கு, கரும்பு இவைகளையும், சர்க்கரை, தேங்காய், கடலை, கற்கண்டு இவைகளையும் வாரி உண்டு, பிட்டுடன் விழுங்கும் திரு வாயை உடையவர், சோற்றுத் திரளை உண்ணும் சிறந்த துதிக்கையை உடைய கற்பக விநாயகர் (கற்பகத்தரு போல கேட்டதைக் கொடுப்பவர்), முக்கண்ணர், விளங்கும் நமது வீரம் வாய்ந்த ஒற்றைக் கொம்பர், யானை முகத்தினர், அழகிய, பொலிவுள்ள (மத்தகத்தில்) புள்ளிகளை உடைய மலை போன்ற கணபதியைப் பெற்ற அந்தணி, (1+8) ஒன்பது கோணங்களை உடைய சக்ரத்தில் (நவாவரணத்தில்) வீற்றிருக்கும் பெண், கெளரி, செவ்விய அழகிய பட்டாலாகிய மேலாடை அணிந்துள்ள அந்தப் பெண், பழையவளும், அண்டங்களைப் பெற்றவளுமாகிய இளம் பெண், தன்னைப் பணிபவர்களுடைய பிறப்பு என்னும் அலை கடலை விலக்கி நிறுத்தும் பகவதி (பார்வதி), ஏகாம்பர நாதரைக் கணவராக அடைந்தவள் ஆகிய உமா தேவிக்குப் பக்கத்தில் அமர்ந்து, வரத்தைப் பெற்று, காஞ்சீபுரத்தில் நின்றருளும் பெருமாளே.
புன மடந்தைக்கு தக்க புயத்தன் ... தினைப்புனத்து மடந்தையாகிய வள்ளிக்கு ஏற்றதான புயங்களை உடையவன், குமரன் என்று எத்திப் பத்தர் துதிக்கும் பொருளை ... குமரன் என்று போற்றி பக்தர்கள் துதிக்கின்ற பொருளை, நெஞ்சத்து கற்பனை முற்றும் பிறிது ஏதும் ... மனத்தில் கொண்ட கற்பனைகள் முழுமையும், பிறவான பலவற்றையும், புகலும் எண்பத்து எட்டு எட்டு இயல் தத்(து)வம் சகலமும் ... புகழ்ந்து சொல்லப்படும் தொண்ணூற்றாறு வகையான தத்துவ உண்மைகளும் ஆக எல்லாவற்றையும், பற்றி பற்று அற நிற்கும் பொதுவை ... பற்றியும், பற்று இல்லாமலும் நிற்கும் பொதுப் பொருளை, என்று ஒக்கத் தக்கது ஓர் அத்தம் தனை நாளும் ... சூரியனுக்கு ஒப்பாகத் தக்க (பேரொளியைக் கொண்ட) ஒப்பற்றச் செல்வத்தை நாள் தோறும், சினமுடன் தர்க்கித்துச் சிலுக்கிக் கொண்டு ... கோபத்துடன் வாதாடிப் பேசி சண்டையிட்டுக் கொண்டு அறுவரும் கைக்குத்து இட்டு ... அறு வகைச் சமயத்தாரும் கைக்குத்துடன் வாதம் செய்து, ஒருவர்க்கும் தெரி அரும் சத்(தி)யத்தை தெரிசித்து ... ஒருவருக்கும் தெரிதற்கு அரிதான சத்தியப் பொருளை தரிசனம் செய்து, உன்செயல் பாடி ... உன் திருவிளையாடல்களைப் பாடி, திசைதொறும் கற்பிக்கைக்கு ... திக்குகள் தோறும் (உள்ள யாவருக்கும்) எடுத்து உபதேசிக்க, இனி அற்பம் திரு உ(ள்)ளம் பற்றி ... இனி மேல் நீ சற்று தயை கூர்ந்து, செச்சை மணக்கும் சிறு சதங்கைப் பொன் பத்மம் எனக்கு என்று அருள்வாயே ... வெட்சி மாலை மணம் வீசும், சிறிய சதங்கை அணிந்துள்ள உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்? கனப் பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு ... கனத்த பெரிய வயிற்றில் எள், பொரி, அப்பம், பழம், கிழங்கு, கரும்பு இவைகளையும், சர்க்கரை முக்கண் கடலை கண்டு அப்பி ... சர்க்கரை, தேங்காய், கடலை, கற்கண்டு இவைகளையும் வாரி உண்டு, பிட்டொடு மொக்கும் திரு வாயன் ... பிட்டுடன் விழுங்கும் திரு வாயை உடையவர், கவள(ம்) துங்கக் கை கற்பக(ம்) முக்கண் ... சோற்றுத் திரளை உண்ணும் சிறந்த துதிக்கையை உடைய கற்பக விநாயகர் (கற்பகத்தரு போல கேட்டதைக் கொடுப்பவர்), முக்கண்ணர், திகழு(ம்) நம் கொற்றத்து ஒற்றை மருப்பன் கரி முகன் ... விளங்கும் நமது வீரம் வாய்ந்த ஒற்றைக் கொம்பர், யானை முகத்தினர், சித்ரப் பொன் புகர் வெற்பன் தனை ஈனும் பனவி ... அழகிய, பொலிவுள்ள (மத்தகத்தில்) புள்ளிகளை உடைய மலை போன்ற கணபதியைப் பெற்ற அந்தணி, ஒன்று எட்டுச் சக்ரத் தலப் பெண் ... (1+8) ஒன்பது கோணங்களை உடைய சக்ரத்தில் (நவாவரணத்தில்) வீற்றிருக்கும் பெண், கவுரி செம் பொன் பட்டுத் தரி அப்பெண் ... கெளரி, செவ்விய அழகிய பட்டாலாகிய மேலாடை அணிந்துள்ள அந்தப் பெண், பழய அண்டத்தைப் பெற்ற மடப் பெண் ... பழையவளும், அண்டங்களைப் பெற்றவளுமாகிய இளம் பெண், பணிவாரை பவ தரங்கத்தைத் தப்ப நிறுத்தும் பவதி ... தன்னைப் பணிபவர்களுடைய பிறப்பு என்னும் அலை கடலை விலக்கி நிறுத்தும் பகவதி (பார்வதி), கம்பர்க்குப் புக்கவள் பக்கம் பயில் ... ஏகாம்பர நாதரைக் கணவராக அடைந்தவள் ஆகிய உமா தேவிக்குப் பக்கத்தில் அமர்ந்து, வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே. ... வரத்தைப் பெற்று, காஞ்சீபுரத்தில் நின்றருளும் பெருமாளே.