கறை இலங்கும் உக்ரச் சத்தி தரிக்கும் சரவணன்
சித்தத்துக்குள் ஒளிக்கும் கரவடன்
கொற்றக் குக்குடவத்தன்
தனி வீரக் கழல் இடும் பத்ம
கண் செவி வெற்பன்
பழநி மன் கச்சி கொற்றவன்
மற்றும் கடக வஞ்சிக்கு கர்த்தன் எனச்செம் தமிழ் பாடி
குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும்
பொறைகள் நந்த அற்பப் புத்தியை விட்டு என்
குணம் அடங்கக் கெட்டு குணம் மற்று ஒன்று இலதான
குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்று
குறியொடும் சுத்த பத்தர் இருக்கும்
குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ
பிறை கரந்தை கொத்து பணி மத்தம்
தலை எலும்பு அப்பு கொக்கின் இறகு அக்கம்
பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்றையும் வேணி
பிறவு நின்று ஒக்க தொக்கு
மணக்கும் சரணி அம் பத்ம கைக் கொடி
முக்கண் பெறு கரும்பு அத் தக்கது அருள்
நல் பங்கய வாவி திறை கொளும் சித்ரக் குத்து முலைக் கொம்பு
அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும் த்ரிபுரை
செம்பட்டுக் கட்டு நுசுப்பின் திருவான தெரிவை
அம் துர்க்கி சத்தி எவர்க்கும் தெரி அரும் சுத்த பச்சை நிற பெண் சிறுவ
தொண்டர்க்கு சித்தி அளிக்கும் பெருமாளே.
(இரத்தக்) கறை விளங்கும் உக்கிரம் பொருந்திய வேற்படையை ஏந்தும் சரவண மூர்த்தி, மனத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் திருடன், வீரம் வாய்ந்த கோழிக் கொடியை ஏந்திய கையன், ஒப்பற்ற வீரக்கழலை அணிந்துள்ள தாமரை போன்ற திருவடியை உடையவன், பாம்பு மலையான் (திருச்செங்கோட்டு மலையான்), பழனி மலையான், காஞ்சீபுரத்து வீரன், பின்னும் கைவளை அணிந்த வள்ளிக் கொடி போன்ற வள்ளிக்குத் தலைவன் என்று செந்தமிழ்ப் பாக்களைப் பாடி, குறைவு படாத அன்பு பூண்டு, குற்றங்களை விலக்க வல்ல பொறுமைக் குணம் சிறந்து மேம்பட, அற்பமான புத்தியை ஒழித்து, என்னுடைய தீய குணங்கள் எல்லாம் கெட்டு, குணம் வேறு ஒன்று இல்லாததான ஒரே நிலையான சாத்துவிகக் குணம் ஒன்றையே அடைந்து, எல்லாவிதமான ஆசைகளையும் ஒழித்து, கடவுள் குறி ஒன்றையே கருதும் பரிசுத்தமான பக்தர்கள் இருக்கும் பெருமை பொருந்தும் ஞான நிலை எனக்குக் கை கூடுவதற்கு உனது திருவருள் சற்றேனும் கிடைக்காதோ? சந்திரன், திருநீற்றுப் பச்சைக் கொத்துக்கள், பாம்பு, ஊமத்தம் மலர், கபால எலும்பு, கங்கை நீர், கொக்கின் இறகு, ருத்ராக்ஷ மாலை பிரமன் முன்பு எட்டுதற்கு அரிதாக இருந்த அழகிய கொன்றை இவை எல்லாம் அணிந்த சடை மற்றவைகளும் விளங்கி ஒன்று சேர்ந்து கூடி (சிவபெருமான் வீழ்ந்து வணங்குவதால் அவர் தலையில் உள்ள பொருள்களின்) மணம் வீசும் திருவடி உடையவள், அழகிய தாமரை போன்ற திருக்கரத்தை உடைய கொடி போன்றவள், மூன்று கண்கள் கொண்ட கரும்பு போன்றவள், அந்தத் தக்கதான பொருளை (அடியேனுக்கு) அருள் செய்பவள், நல்ல திருக் குளத்துத் தாமரையையும் வென்று அடக்கும் அழகிய, திரண்டு குவிந்த மார்பைக் கொண்ட கொம்பு போன்றவள், ஞானமுள்ளவள், அழகிய கிளி கையில் பயின்று இருக்கும் திரிபுரை (சந்திர கண்டம், சூரிய கண்டம், அக்கினி கண்டம் என்னும் முப்பிரிவை உடைய சக்கரத்துக்குத் தலைவி), செம்பட்டு ஆடை கட்டியிருக்கும் இடையை உடைய, லக்ஷ்மிகரம் பொருந்திய நங்கை, அழகிய துர்க்கா தேவி, பராசக்தி, எல்லோருக்கும் தெரிவதற்கு அரிதான சுத்தமான பச்சை நிறம் கொண்ட பெண் ஆகிய பார்வதி தேவியின் பிள்ளையே, அடியார்களுக்கு வீடு பேற்றை அளிக்கும் பெருமாளே.
கறை இலங்கும் உக்ரச் சத்தி தரிக்கும் சரவணன் ... (இரத்தக்) கறை விளங்கும் உக்கிரம் பொருந்திய வேற்படையை ஏந்தும் சரவண மூர்த்தி, சித்தத்துக்குள் ஒளிக்கும் கரவடன் ... மனத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் திருடன், கொற்றக் குக்குடவத்தன் ... வீரம் வாய்ந்த கோழிக் கொடியை ஏந்திய கையன், தனி வீரக் கழல் இடும் பத்ம ... ஒப்பற்ற வீரக்கழலை அணிந்துள்ள தாமரை போன்ற திருவடியை உடையவன், கண் செவி வெற்பன் ... பாம்பு மலையான் (திருச்செங்கோட்டு மலையான்), பழநி மன் கச்சி கொற்றவன் ... பழனி மலையான், காஞ்சீபுரத்து வீரன், மற்றும் கடக வஞ்சிக்கு கர்த்தன் எனச்செம் தமிழ் பாடி ... பின்னும் கைவளை அணிந்த வள்ளிக் கொடி போன்ற வள்ளிக்குத் தலைவன் என்று செந்தமிழ்ப் பாக்களைப் பாடி, குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும் ... குறைவு படாத அன்பு பூண்டு, குற்றங்களை விலக்க வல்ல பொறைகள் நந்த அற்பப் புத்தியை விட்டு என் ... பொறுமைக் குணம் சிறந்து மேம்பட, அற்பமான புத்தியை ஒழித்து, என்னுடைய குணம் அடங்கக் கெட்டு குணம் மற்று ஒன்று இலதான ... தீய குணங்கள் எல்லாம் கெட்டு, குணம் வேறு ஒன்று இல்லாததான குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்று ... ஒரே நிலையான சாத்துவிகக் குணம் ஒன்றையே அடைந்து, எல்லாவிதமான ஆசைகளையும் ஒழித்து, குறியொடும் சுத்த பத்தர் இருக்கும் ... கடவுள் குறி ஒன்றையே கருதும் பரிசுத்தமான பக்தர்கள் இருக்கும் குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ ... பெருமை பொருந்தும் ஞான நிலை எனக்குக் கை கூடுவதற்கு உனது திருவருள் சற்றேனும் கிடைக்காதோ? பிறை கரந்தை கொத்து பணி மத்தம் ... சந்திரன், திருநீற்றுப் பச்சைக் கொத்துக்கள், பாம்பு, ஊமத்தம் மலர், தலை எலும்பு அப்பு கொக்கின் இறகு அக்கம் ... கபால எலும்பு, கங்கை நீர், கொக்கின் இறகு, ருத்ராக்ஷ மாலை பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்றையும் வேணி ... பிரமன் முன்பு எட்டுதற்கு அரிதாக இருந்த அழகிய கொன்றை இவை எல்லாம் அணிந்த சடை பிறவு நின்று ஒக்க தொக்கு ... மற்றவைகளும் விளங்கி ஒன்று சேர்ந்து கூடி மணக்கும் சரணி அம் பத்ம கைக் கொடி ... (சிவபெருமான் வீழ்ந்து வணங்குவதால் அவர் தலையில் உள்ள பொருள்களின்) மணம் வீசும் திருவடி உடையவள், அழகிய தாமரை போன்ற திருக்கரத்தை உடைய கொடி போன்றவள், முக்கண் பெறு கரும்பு அத் தக்கது அருள் ... மூன்று கண்கள் கொண்ட கரும்பு போன்றவள், அந்தத் தக்கதான பொருளை (அடியேனுக்கு) அருள் செய்பவள், நல் பங்கய வாவி திறை கொளும் சித்ரக் குத்து முலைக் கொம்பு ... நல்ல திருக் குளத்துத் தாமரையையும் வென்று அடக்கும் அழகிய, திரண்டு குவிந்த மார்பைக் கொண்ட கொம்பு போன்றவள், அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும் த்ரிபுரை ... ஞானமுள்ளவள், அழகிய கிளி கையில் பயின்று இருக்கும் திரிபுரை (சந்திர கண்டம், சூரிய கண்டம், அக்கினி கண்டம் என்னும் முப்பிரிவை உடைய சக்கரத்துக்குத் தலைவி), செம்பட்டுக் கட்டு நுசுப்பின் திருவான தெரிவை ... செம்பட்டு ஆடை கட்டியிருக்கும் இடையை உடைய, லக்ஷ்மிகரம் பொருந்திய நங்கை, அம் துர்க்கி சத்தி எவர்க்கும் தெரி அரும் சுத்த பச்சை நிற பெண் சிறுவ ... அழகிய துர்க்கா தேவி, பராசக்தி, எல்லோருக்கும் தெரிவதற்கு அரிதான சுத்தமான பச்சை நிறம் கொண்ட பெண் ஆகிய பார்வதி தேவியின் பிள்ளையே, தொண்டர்க்கு சித்தி அளிக்கும் பெருமாளே. ... அடியார்களுக்கு வீடு பேற்றை அளிக்கும் பெருமாளே.