சல மலம் விட்டத் தடம் பெரும் குடில்
சகல வினைக் கொத்து இருந்திடும்படி
சதிர உறுப்புச் சமைந்து வந்த ஒரு தந்தை தாயும் தர வரு பொய்க்குள் கிடந்த கந்தலில்
உறையும் உயிர்ப்பை சமன் துரந்து ஒரு தனியில் இழுக்கப்படும் தரங்கமும் வந்திடா முன்
பல உருவத்தைப் பொருந்தி அன்று உயர் படியு(ம்) நெளிக்கப் படர்ந்த
வன் கண பட மயில் புக்குத் துரந்து கொண்டு இகல் வென்றி வேலா
பரிமள மிக்கச் சிவந்த நின் கழல்பழுது அற நல் சொல் தெரிந்து அன்பொடு பகர்வது இனி சற்று உகந்து தந்திட வந்திடாயோ
சிலையும் எனப் பொன் சிலம்பை முன் கொடு சிவ மயம் அற்றுத் திடம் குலைந்தவர் திரி புரம் அத்தை சுடும் தினம்
தரி திண் கையாளி திரு மகள் கச்சுப் பொருந்திடும் தன தெரிவை இரக்கத்துடன் பிறந்தவள்
திசைகளில் ஒக்கப் படர்ந்து இடம் பொருகின்ற ஞானக் கலைகள் அணை கொத்து அடர்ந்து
வம்பு அலர் நதி கொள் அகத்தில் பயந்து கம்பர் மெய் கருக இடத்தில் கலந்து இருந்தவள்
கஞ்ச பாதம் கருணை மிகுத்துக் கசிந்த உளம் கொடு கருதும் அவர்க்குப் பதங்கள் தந்து அருள் கவுரி
திருக் கொட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே.
சலம், மலம் இவைகளை வெளியேற்றுகின்ற மிகப் பெரிய குடிசையில், எல்லா வினைகளும் ஒன்று சேர்ந்து அமையும்படி, அழகாகப் பொறுத்தப்பட்ட அவயவங்கள் சேர்ந்த மனக் களிப்புடன் தந்தையும் தாயும் கலந்து அளிக்க உண்டாகின்ற, பொய்யிலே கிடந்த கிழிபட்ட துணிபோல் அழிந்து போகும் உடலில், இருக்கும் உயிரை யமன் ஓட்டிச் செலுத்தி ஒரு தனியான வகையில் இழுக்கும் மனக் கலக்கமும் வந்து கூடுவதற்கு முன், பல வித நிறங்களைப் பொருந்தியதும், அன்று (போர்க் களத்தில்) சிறந்த பூமியும் நெளியும்படியாக நடந்து சென்றதுமான, வலிமை வாய்ந்த, பீலிக் கண்களை உடைய தோகையை உடைய மயிலில் ஏறி, அதனைச் செலுத்திச் சென்று போரினை வென்ற வேலனே, நறு மணம் மிகுந்து, சிவந்த உனது திருவடியை, எவ்வகைக் குற்றமும் இல்லாத நல்ல சொற்கள் கொண்டு அறிந்து, அன்புடன் சொல்லும்படியான பாக்கியத்தை இனிச் சற்று நீ மகிழ்ந்து தந்துதவ வர மாட்டாயோ? வில் என்னும்படி பொன் மலையாகிய மேருவை (சிவபிரான்) முன் கையில் கொண்டு, சிவ வழிபாட்டைக் கைவிட்டவர்களும் தமது சக்தி குலைந்தவர்களுமாகிய அசுரர்களையும் திரி புரங்களையும் எரித்த தினத்தில் அந்த வில்லைத் தாங்கிய திண்ணிய திருக் கரத்தைக் கொண்டவள், அழகிய தேவி, கச்சு அணிந்த மார்பகங்களைக் கொண்ட மாது, கருணையுடன் தோன்றியவள், திசைகள் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கொண்ட ஞான நூல்கள் உட்பட்ட திரண்ட கலை நூல்கள் அனைத்தையும் நிரம்பக் கற்றவள், புது மலர்களைத் தன்னுள்ளே கொண்ட கம்பை நதிக் கரையில் (காமாக்ஷி சிவனை வழிபடும்போது), (நதியின் வெள்ளத்தைக் கண்டு) பயந்து ஏகாம்பர நாதருடைய சிவந்த உடல் கரு நிறம் கொள்ளுமாறு அவருடைய இடப் பாகத்தில் கலந்திருந்தவள், தனது தாமரைத் திருவடியை அன்பு மேலிட்டு கனிந்த மனம் கொண்டு தியானிக்கும் அடியார்களுக்கு பதவிகளைத் தந்து அருளும் கெளரி அம்மையின் திருக்கோயிலில் (காஞ்சீபுரத்துக்) குமரக்கோட்டத்தில் அமர்ந்திருக்கும் இறைவா, தேவேந்திரனின் தலைவனே.
சல மலம் விட்டத் தடம் பெரும் குடில் ... சலம், மலம் இவைகளை வெளியேற்றுகின்ற மிகப் பெரிய குடிசையில், சகல வினைக் கொத்து இருந்திடும்படி ... எல்லா வினைகளும் ஒன்று சேர்ந்து அமையும்படி, சதிர உறுப்புச் சமைந்து வந்த ஒரு தந்தை தாயும் தர வரு பொய்க்குள் கிடந்த கந்தலில் ... அழகாகப் பொறுத்தப்பட்ட அவயவங்கள் சேர்ந்த மனக் களிப்புடன் தந்தையும் தாயும் கலந்து அளிக்க உண்டாகின்ற, பொய்யிலே கிடந்த கிழிபட்ட துணிபோல் அழிந்து போகும் உடலில், உறையும் உயிர்ப்பை சமன் துரந்து ஒரு தனியில் இழுக்கப்படும் தரங்கமும் வந்திடா முன் ... இருக்கும் உயிரை யமன் ஓட்டிச் செலுத்தி ஒரு தனியான வகையில் இழுக்கும் மனக் கலக்கமும் வந்து கூடுவதற்கு முன், பல உருவத்தைப் பொருந்தி அன்று உயர் படியு(ம்) நெளிக்கப் படர்ந்த ... பல வித நிறங்களைப் பொருந்தியதும், அன்று (போர்க் களத்தில்) சிறந்த பூமியும் நெளியும்படியாக நடந்து சென்றதுமான, வன் கண பட மயில் புக்குத் துரந்து கொண்டு இகல் வென்றி வேலா ... வலிமை வாய்ந்த, பீலிக் கண்களை உடைய தோகையை உடைய மயிலில் ஏறி, அதனைச் செலுத்திச் சென்று போரினை வென்ற வேலனே, பரிமள மிக்கச் சிவந்த நின் கழல்பழுது அற நல் சொல் தெரிந்து அன்பொடு பகர்வது இனி சற்று உகந்து தந்திட வந்திடாயோ ... நறு மணம் மிகுந்து, சிவந்த உனது திருவடியை, எவ்வகைக் குற்றமும் இல்லாத நல்ல சொற்கள் கொண்டு அறிந்து, அன்புடன் சொல்லும்படியான பாக்கியத்தை இனிச் சற்று நீ மகிழ்ந்து தந்துதவ வர மாட்டாயோ? சிலையும் எனப் பொன் சிலம்பை முன் கொடு சிவ மயம் அற்றுத் திடம் குலைந்தவர் திரி புரம் அத்தை சுடும் தினம் ... வில் என்னும்படி பொன் மலையாகிய மேருவை (சிவபிரான்) முன் கையில் கொண்டு, சிவ வழிபாட்டைக் கைவிட்டவர்களும் தமது சக்தி குலைந்தவர்களுமாகிய அசுரர்களையும் திரி புரங்களையும் எரித்த தினத்தில் தரி திண் கையாளி திரு மகள் கச்சுப் பொருந்திடும் தன தெரிவை இரக்கத்துடன் பிறந்தவள் ... அந்த வில்லைத் தாங்கிய திண்ணிய திருக் கரத்தைக் கொண்டவள், அழகிய தேவி, கச்சு அணிந்த மார்பகங்களைக் கொண்ட மாது, கருணையுடன் தோன்றியவள், திசைகளில் ஒக்கப் படர்ந்து இடம் பொருகின்ற ஞானக் கலைகள் அணை கொத்து அடர்ந்து ... திசைகள் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கொண்ட ஞான நூல்கள் உட்பட்ட திரண்ட கலை நூல்கள் அனைத்தையும் நிரம்பக் கற்றவள், வம்பு அலர் நதி கொள் அகத்தில் பயந்து கம்பர் மெய் கருக இடத்தில் கலந்து இருந்தவள் ... புது மலர்களைத் தன்னுள்ளே கொண்ட கம்பை நதிக் கரையில் (காமாக்ஷி சிவனை வழிபடும்போது), (நதியின் வெள்ளத்தைக் கண்டு) பயந்து ஏகாம்பர நாதருடைய சிவந்த உடல் கரு நிறம் கொள்ளுமாறு அவருடைய இடப் பாகத்தில் கலந்திருந்தவள், கஞ்ச பாதம் கருணை மிகுத்துக் கசிந்த உளம் கொடு கருதும் அவர்க்குப் பதங்கள் தந்து அருள் கவுரி ... தனது தாமரைத் திருவடியை அன்பு மேலிட்டு கனிந்த மனம் கொண்டு தியானிக்கும் அடியார்களுக்கு பதவிகளைத் தந்து அருளும் கெளரி அம்மையின் திருக் கொட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே. ... திருக்கோயிலில் (காஞ்சீபுரத்துக்) குமரக்கோட்டத்தில் அமர்ந்திருக்கும் இறைவா, தேவேந்திரனின் தலைவனே.