முதல் வகுப்பில் வைக்கத்தக்க தகுதி பெற்ற பல புலவர்கள் போற்றித் துதிக்கும் உனது மயிலையும், கிரெளஞ்சமலையைப் பிளந்து எறிந்த உன் வேலையும், வெட்சி மாலையைப் புனைந்த உன் திருப்புயங்களையும், (கயவஞ்சி) தேவயானையையும், குறவஞ்சி வள்ளியையும், பொற்சங்கிலி, முத்துச் சலங்கை, கிண்கிணி ஆகியவை தழுவிய செக்கச் சிவந்த உனது சரணாம்புஜத்தையும் பாட்டுக்குப் பொருளாக வைத்து பெரிய பாமாலைகளைப் பாடவல்ல, கரிய மேகம் மழை பொழிவதுபோலப் பொழியும் புலவன் இவன் என்று சொல்லும்படியும், உண்மை ஞானம் உணர்ந்த தலைவன் இவன் எனக் கூறும்படியும், தக்க தர்மங்களைச் செய்யும் குணவானான சத்புருஷன் இவன் என்றும் உலகோர் கூறும்படியுமாக, மேலான பதவியைத் தரும் பிறப்பை என் ஆத்மா பெறாதோ? இவன் பொறுமைசாலி என்றும், இந்தப் பொய்யுலகைக் கண்டு அஞ்சும் துறவி என்றும், எல்லாத் திசைகளிலும் உள்ளோர் அடியேனைக் கூறுவது ஆச்சரியம் இல்லை. அறிவுக்கும் மேலான பதத்தில் சேரும் பேற்றை உன் திருவருள் தந்திடாதோ? சிறந்த மலையாகிய இமயமலைக்குப் பிறந்த கொடி போன்றவள், உலகம் முழுவதையும் ஈன்றெடுத்த திருவயிற்றை உடையவள், அழகிய தட்பத்தை (காருண்யத்தை) உடையவள், குறைவில்லாமல் முப்பத்திரண்டு அறங்களையும் முறையே புரியும் பாலாம்பிகை, நற்குணங்களைத் தரித்தவள், மந்திர யந்திரத்தில் வீரத்துடன் வீற்றிருக்கும் சங்கரி, கூட்டமான படங்களையும், ரத்தினங்களையும் உள்ள சர்ப்பங்களைக் கைகளில் வளையல்களாகத் தரித்தவள், மேரு மலையை வில்லாக வளைத்து, திரிபுரத்தைச் சினத்துடன் எரித்த வஞ்சிக் கொடி போன்றவள், நீல நிறத்தினள், தோகை மயிலின் அழகிய சாயலை உடையவள், பேரழகி, கொடிய விஷத்தைக் கழுத்திலே பொதிந்தவள், கருணை பொழியும் விழிகளை உடையவள், கேட்டவரம் நல்கும் கற்பகத் தரு, திசைகளையே ஆடைகளாய் உடைய எங்கள் தாய், அவளை நினைத்த பக்தர்களுக்கு கருணை புரியும் அம்பிகை, வேதங்களால் போற்றப்படும் முக்கண்களை (சூரியன், சந்திரன், அக்னி) உடையவள், (இத்தனை பெருமைகளை உடைய) கெளரியாகிய காமாக்ஷியின் கோயிலாகிய திருக்கோட்டத்தில் (காஞ்சீபுரத்தில்) வீற்றிருப்போனே, தேவர்களுக்கெல்லாம் தலைவர்களான இந்திரர்கள் வணங்கும் பெருமாளே.