எனக்குக் கொஞ்சம், உனக்குக் கொஞ்சம் என்று கூச்சல் இடுகின்ற அந்த விலைமாதர்களுக்கு விரும்பும் பொருளைத் தங்கத் தட்டில் வைத்துத் தருகின்ற ஆபத்தைக் கொண்ட இந்த உடம்பு உயிர் மாயமாய் மறைந்ததும் விறகுக் கட்டைகளுக்கு இடையிலே வைக்கப்பட்டு நெருப்பால் சுடப்பட்டு மறைந்து போவதற்கும் மீண்டும் உயிர் பிறப்பதற்கும், இந்த உலகில் புகுந்து அழிந்து போவதற்கும் முன்னரே, - ( பின் தொடர்கிறது). தினைப்புனத்தில், அழகிய மழலைமொழி பேசும் குறப்பெண்ணாகிய கிளி போன்ற வள்ளியின் மார்பை அழகு பெற உன் வெட்சி மாலையணிந்த புயத்தில் ஏற்றுக் கொண்டு தழுவுவோனே, ( முன் தொடர்ச்சி) - அகந்தை கொண்டு, சற்றுக் கோபித்துப் பேசுபவர்களும், நன்னெறியிலிருந்து தவறியவர்களுமான துஷ்டர்களிடமிருந்து தப்பி, அந்தக் கூட்டத்தினின்று விலகி, உன் திருவடியைப் புகழும் ஆற்றலைத் தந்தருள்வாயாக. பனைமரம் போன்ற தும்பிக்கை உடையவனும், கொக்குப் போன்று காத்திருந்து தாக்கும் குணத்தை உடையவனுமான தாரகாசுரனை, தடைபட்டு அழியுமாறு வேலினால் குத்தி அவன் இறந்து படவும், ஆதிசேஷனின் ஆயிரம் பட முடிகள் அஞ்சிடவும், கடல் அஞ்சிடவும் போர் செய்த வேலனே, பேராசையின்றி, லோபத்தனம் இன்றி, நடுக்கம் இன்றி, மயக்கம் ஒழிந்து, இத்தகைய நலன்கள் உண்டாகும்படியாக அடியார்களுக்கு ஏற்படுத்தித் தந்து அருள் புரியும் செல்வமே, (சிவபெருமானிடமிருந்து) கனி பெறுவதற்காக திக்குக்கள் யாவும் படர்ந்த உலகத்தைச் சுற்ற, பச்சை நிறமுள்ள பெருமைவாய்ந்த பக்ஷியாகும் மயிலின் மீது ஏறி அமர்ந்து மகிழ்ச்சியுடன் வலம் வந்தவனே, இந்தக் கலியுகத்தில் நிகரில்லாத தெய்வமாய் நின்று, கொஞ்சமும் சலிக்காது மோக்ஷ இன்பத்தைத் தர ஒப்புக்கொண்டவனே, எழில்மிகு சக்தியாகிய காமாக்ஷிதேவி எழுந்தருளியுள்ள, கடல்போல் எப்போதும் ஓம் என்று ஒலிக்கும் கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே.
எனக்குச்சற்று உனக்குச்சற்றெனக் கத்து அத்தவர்க்கு ... எனக்குக் கொஞ்சம், உனக்குக் கொஞ்சம் என்று கூச்சல் இடுகின்ற அந்த விலைமாதர்களுக்கு இச்சைப் பொருட்பொற் தட்டு இடு இக்கைக்குக் குடில் ... விரும்பும் பொருளைத் தங்கத் தட்டில் வைத்துத் தருகின்ற ஆபத்தைக் கொண்ட இந்த உடம்பு மாயம் எனக்கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனற்சுட்டிட்டு அடக்கைக்கு ... உயிர் மாயமாய் மறைந்ததும் விறகுக் கட்டைகளுக்கு இடையிலே வைக்கப்பட்டு நெருப்பால் சுடப்பட்டு மறைந்து போவதற்கும் பிறக்கைக்குத் தலத்திற்புக்கு இடியாமுன் ... மீண்டும் உயிர் பிறப்பதற்கும், இந்த உலகில் புகுந்து அழிந்து போவதற்கும் முன்னரே, - ( பின் தொடர்கிறது). தினைக்குட் சித்திரக் கொச்சைக் குறத் தத்தைத் தனத்தை ... தினைப்புனத்தில், அழகிய மழலைமொழி பேசும் குறப்பெண்ணாகிய கிளி போன்ற வள்ளியின் மார்பை பொற் பெறச்செச்சைப் புயத்து ஒப்பித்து அணிவோனே ... அழகு பெற உன் வெட்சி மாலையணிந்த புயத்தில் ஏற்றுக் கொண்டு தழுவுவோனே, செருக்கிச்சற்று உறுக்கிச்சொற் பிரட்ட ... ( முன் தொடர்ச்சி) - அகந்தை கொண்டு, சற்றுக் கோபித்துப் பேசுபவர்களும், நன்னெறியிலிருந்து தவறியவர்களுமான துட்டரைத்தப்பித் திரள் தப்பி ... துஷ்டர்களிடமிருந்து தப்பி, அந்தக் கூட்டத்தினின்று விலகி, கழற்செப்பத் திறல்தாராய் ... உன் திருவடியைப் புகழும் ஆற்றலைத் தந்தருள்வாயாக. பனைக்கைக் கொக்கனை ... பனைமரம் போன்ற தும்பிக்கை உடையவனும், கொக்குப் போன்று காத்திருந்து தாக்கும் குணத்தை உடையவனுமான தாரகாசுரனை, தட்டுப் படக்குத்திப் பட ... தடைபட்டு அழியுமாறு வேலினால் குத்தி அவன் இறந்து படவும், சற்பப் பணத் துட்கக் கடல துட்கப் பொரும்வேலா ... ஆதிசேஷனின் ஆயிரம் பட முடிகள் அஞ்சிடவும், கடல் அஞ்சிடவும் போர் செய்த வேலனே, பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்று ... பேராசையின்றி, லோபத்தனம் இன்றி, நடுக்கம் இன்றி, மயக்கம் ஒழிந்து, பலிப்பப் பத்தருக்கு ஒப்பித்தருள்வாழ்வே ... இத்தகைய நலன்கள் உண்டாகும்படியாக அடியார்களுக்கு ஏற்படுத்தித் தந்து அருள் புரியும் செல்வமே, கனிக்குத் திக்கனைத்துச் சுற்றிட ... (சிவபெருமானிடமிருந்து) கனி பெறுவதற்காக திக்குக்கள் யாவும் படர்ந்த உலகத்தைச் சுற்ற, பச்சைக் கனப்பக்ஷிக்கு இடைப்புக்குக் களிப்புக்குத் திரிவோனே ... பச்சை நிறமுள்ள பெருமைவாய்ந்த பக்ஷியாகும் மயிலின் மீது ஏறி அமர்ந்து மகிழ்ச்சியுடன் வலம் வந்தவனே, கலிக்கு ஒப்பிற் சலிப்பற்றுக் கதிக்கு ஒத்திட்டு ... இந்தக் கலியுகத்தில் நிகரில்லாத தெய்வமாய் நின்று, கொஞ்சமும் சலிக்காது மோக்ஷ இன்பத்தைத் தர ஒப்புக்கொண்டவனே, எழிற்சத்திக் கடற்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே. ... எழில்மிகு சக்தியாகிய காமாக்ஷிதேவி எழுந்தருளியுள்ள, கடல்போல் எப்போதும் ஓம் என்று ஒலிக்கும் கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே.