சுத்தச் சித்தத்து தொல் பத்தர்க்குச் சுத்தப் பட்டு இட்டம் உறாதே
தொக்கப் பொக்கம் சில் கட்சிக்குள் சொல் குற்றத்துத் துறை நாடி
பித்தத்தைப் பற்றித் தைத் தற்று உற்று ஒத்துக் கித்திப் பிணி மாதர்
பெட்டில் கட்டுத் தட்டுப்பட்டு பிற்பட்டு இட்டுத் தளர்வேனோ
அத் தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த அத்திக்கு அத்துப் பலம் ஈவாய்
அர்ச்சித்துப் பொன் செக்கக் கொச்சை தத்திக்குச் செச்சைத் தொடை சூழ்வாய்
கத்து அத்தித் தத்து அத்தில் கொக்கைக் கைத்தச் சத்திப் படை ஏவும்
கற்பச் சத்திப் பொற்புச் சத்தி கச்சிச் சொக்கப் பெருமாளே.
தூய்மையான உள்ளத்தை உடைய பழைய அடியார்களுக்கு சுத்த மனத்துடன் நட்பு வைக்காமல், மிகுந்த பொய்கள் கலந்த சில கட்சிகளைச் சேர்ந்து சொற் குற்றங்களுக்கு இடம் தரும் வழிகளை நாடியும், மயக்கத்தில் கட்டுண்டு, தை தை என்ற தாளக்கட்டுக்கு ஒத்ததான கித்தி என்ற ஒருவகை நடனத்தால் வசப்படுத்துகின்ற பொது மாதர்களுடைய பசப்பு வார்த்தையில் அகப்பட்டு தடுமாற்றம் அடைந்து, வாழ்வில் முன்னேற்றம் இல்லாமல் கீழ் நிலைக்கு ஆளாகி, தளர்ச்சி உறுவேனோ? அந்த மனக் கவலை கொண்டிருந்த, ஐராவதம் என்ற யானைக்குத் தலைவனாகிய இந்திரனுக்கும், (தவம் செய்து) இளைத்துப் போயிருந்த அந்த (திருமாலாகிய) யானைக்கும் சித்திக்கும்படியான பலம் அளித்தவனே, வள்ளியைப் பூஜித்து, அழகிய செம்மை வாய்ந்த திருந்தாப் பேச்சைப் பேசும் கிளிபோன்ற அந்த வள்ளிக்கு வெட்சி மாலையைச் சூட்டியவனே, ஒலிக்கின்ற கடலில் ஆபத்தான நிலையில் இருந்த மாமரமாகிய சூரன் மீது கையில் இருந்த சக்தி வேலைச் செலுத்தியும், கற்புக்கு அணிகலமாகிய பார்வதி அளித்த அழகிய சக்தி வேற்படையை ஏந்தியும், காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே.
சுத்தச் சித்தத்து தொல் பத்தர்க்குச் சுத்தப் பட்டு இட்டம் உறாதே ... தூய்மையான உள்ளத்தை உடைய பழைய அடியார்களுக்கு சுத்த மனத்துடன் நட்பு வைக்காமல், தொக்கப் பொக்கம் சில் கட்சிக்குள் சொல் குற்றத்துத் துறை நாடி ... மிகுந்த பொய்கள் கலந்த சில கட்சிகளைச் சேர்ந்து சொற் குற்றங்களுக்கு இடம் தரும் வழிகளை நாடியும், பித்தத்தைப் பற்றித் தைத் தற்று உற்று ஒத்துக் கித்திப் பிணி மாதர் ... மயக்கத்தில் கட்டுண்டு, தை தை என்ற தாளக்கட்டுக்கு ஒத்ததான கித்தி என்ற ஒருவகை நடனத்தால் வசப்படுத்துகின்ற பொது மாதர்களுடைய பெட்டில் கட்டுத் தட்டுப்பட்டு பிற்பட்டு இட்டுத் தளர்வேனோ ... பசப்பு வார்த்தையில் அகப்பட்டு தடுமாற்றம் அடைந்து, வாழ்வில் முன்னேற்றம் இல்லாமல் கீழ் நிலைக்கு ஆளாகி, தளர்ச்சி உறுவேனோ? அத் தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த அத்திக்கு அத்துப் பலம் ஈவாய் ... அந்த மனக் கவலை கொண்டிருந்த, ஐராவதம் என்ற யானைக்குத் தலைவனாகிய இந்திரனுக்கும், (தவம் செய்து) இளைத்துப் போயிருந்த அந்த (திருமாலாகிய) யானைக்கும் சித்திக்கும்படியான பலம் அளித்தவனே, அர்ச்சித்துப் பொன் செக்கக் கொச்சை தத்திக்குச் செச்சைத் தொடை சூழ்வாய் ... வள்ளியைப் பூஜித்து, அழகிய செம்மை வாய்ந்த திருந்தாப் பேச்சைப் பேசும் கிளிபோன்ற அந்த வள்ளிக்கு வெட்சி மாலையைச் சூட்டியவனே, கத்து அத்தித் தத்து அத்தில் கொக்கைக் கைத்தச் சத்திப் படை ஏவும் ... ஒலிக்கின்ற கடலில் ஆபத்தான நிலையில் இருந்த மாமரமாகிய சூரன் மீது கையில் இருந்த சக்தி வேலைச் செலுத்தியும், கற்பச் சத்திப் பொற்புச் சத்தி கச்சிச் சொக்கப் பெருமாளே. ... கற்புக்கு அணிகலமாகிய பார்வதி அளித்த அழகிய சக்தி வேற்படையை ஏந்தியும், காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே.