அலைகள் தாவித் தாவிச் சென்று ஓர் ஒழுங்கு முறையில் ஒலி செய்கின்ற கரிய நிறக் கடலாலும், (கிரகணத்தின் போது ராகு கேது எனப்படும்) பாம்பால் பிடி படுதல் என்னும் ஆபத்தில் அகப்பட்டு, கெடுதல் உற்று தடை படுகின்ற அந்தச் சந்திரனாலும், மனதில் மோக வெறி கொண்டு, அதன் அதிகமான நிலையை இந்த அழகிய கொடி போன்ற பெண் அடைந்து அழிந்து போகாமல், (உனது) செவ்வையானதும், வீரத்துக்கு அறிகுறியானதும், தொழில் திறம் காட்டுவதும், வரிசையாக அமைந்துள்ளதுமான வெட்சி மாலையைத் தந்தருள வேண்டும். நிறைந்துள்ள பத்துத் திக்குகளிலும் புகுந்து, வேலால் குத்தி, கிரெளஞ்ச மலையைப் போரில் வென்ற வேலனே, மிழற்றும் பேச்சைப் பேசுபவளும், காடு மலைகளில் இருப்பவளும், அழகிய பச்சை நிறம் கொண்டவளும் ஆகிய குறப் பெண் வள்ளிக்கு இனியவனே, பரிசுத்தமான, பக்தியில் உயர்ந்த அன்பர்களுக்கு மனதில் உள்ள துயரங்களை ஒழிக்கும் வீரனே, தேவ உலகுக்கு ஒப்பான கச்சி எனப்படும் அழகிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.
தத்தித் தத்திச் சட்டப்பட்டுச் சத்தப்படு மைக் கடலாலே ... அலைகள் தாவித் தாவிச் சென்று ஓர் ஒழுங்கு முறையில் ஒலி செய்கின்ற கரிய நிறக் கடலாலும், சர்ப்பத் தத்தில் பட்டுக் கெட்டுத் தட்டுப்படும் அப் பிறையாலே ... (கிரகணத்தின் போது ராகு கேது எனப்படும்) பாம்பால் பிடி படுதல் என்னும் ஆபத்தில் அகப்பட்டு, கெடுதல் உற்று தடை படுகின்ற அந்தச் சந்திரனாலும், சித்தத்துக்குப் பித்து உற்று உச்சச் சித்ரக் கொடி உற்று அழியாதே ... மனதில் மோக வெறி கொண்டு, அதன் அதிகமான நிலையை இந்த அழகிய கொடி போன்ற பெண் அடைந்து அழிந்து போகாமல், செப்பக் கொற்ற(ம்) சிற்ப(ம்) பத்திச் செச்சைத் தொடையைத் தர வேணும் ... (உனது) செவ்வையானதும், வீரத்துக்கு அறிகுறியானதும், தொழில் திறம் காட்டுவதும், வரிசையாக அமைந்துள்ளதுமான வெட்சி மாலையைத் தந்தருள வேண்டும். கொத்துத் திக்குப் பத்துள் புக்கு குத்திக் கிரியைப் பொரும் வேலா ... நிறைந்துள்ள பத்துத் திக்குகளிலும் புகுந்து, வேலால் குத்தி, கிரெளஞ்ச மலையைப் போரில் வென்ற வேலனே, கொச்சைப் பொச்சைப் பொற்பில் பச்சைக் கொச்சைக் குறவிக்கு இனியோனே ... மிழற்றும் பேச்சைப் பேசுபவளும், காடு மலைகளில் இருப்பவளும், அழகிய பச்சை நிறம் கொண்டவளும் ஆகிய குறப் பெண் வள்ளிக்கு இனியவனே, சுத்தப் பத்த அத்தர்க்குச் சித்த துக்கத்தை ஒழித்திடும் வீரா ... பரிசுத்தமான, பக்தியில் உயர்ந்த அன்பர்களுக்கு மனதில் உள்ள துயரங்களை ஒழிக்கும் வீரனே, சொர்க்கத்துக்கு ஒப்பு உற்றக் கச்சிச் சொக்கப் பதியில் பெருமாளே. ... தேவ உலகுக்கு ஒப்பான கச்சி எனப்படும் அழகிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.