கமல(ம்) அரு சோகு ஆம்பர(ம்) முடி நடு ஏய் பூங்கணை
கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீதே களை அற மீது ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி
கன இய வார் ஏந்தின இள நீர் தோய்ந்து எமது உயிர் நீல அஞ்சன மதர் விழியால் வாங்கிய இவளுடன் மால் கூர்ந்திடும் அநுபோகம் இனி விட
வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இத(ம்) இய பாத அம்புயம் அருள்வாயே
அமகர ஆசாம்பர அதுகர ஏக ஆம்பரம் அதுல
அ(ன்)ன நீல அம்பரம் அறியாத அநகர நாள அங்கிதர் தமை
உமையாள் சேர்ந்து அருள் அறம் உறு சீ(ர்) காஞ்சியில் உறைவோனே
விமல கிராத அங்கனை தன கிரி தோய் காங்கெய
வெடி படு தேவேந்திர நகர் வாழ் விரி கடல் தீ மூண்டிட நிசிசரர் வேர் மாண்டிட வினை அற வேல் வாங்கிய பெருமாளே.
(மன்மதனுடைய ஐந்து மலர்ப் பாணங்களில் முதல் கணையாகிய) தாமரை மலர், அருமையான (இடைக் கணையாகிய) அசோக மலர், (கடைக் கணையாகிய) நீலோற்பல மலர், இவற்றிற்கு இடை இடையே உள்ள மாம்பூ, முல்லை (ஆகிய மலர்ப் பாணங்களின் தொழில் ஆற்றலால்) கலகப் போரில் ஈடுபட்டு, படுக்கையின் மேல் சோர்வு நீங்க என் மீது தாக்கி எழுகின்ற காம தாகம் நீங்கும்படி, கனத்ததும், கச்சு தாங்கியதும், இளநீர் போன்றதுமான மார்பகங்களைத் தழுவி என்னுடைய உயிரை கரிய மை தீட்டப்பட்ட, செழிப்புள்ள கண்ணால் கவர்ந்த இந்தப் பெண் மீது மோகம் மிக்கு எழும் இன்ப நுகர்ச்சியை இனி விட்டு ஒழிப்பதற்கு, வேத முடிவான, பரம சுகம் தருவதான, முக்திப் பொருளாகிய, இன்பம் தருவதான பாதத் தாமரைகளைத் தந்து அருளுக. அ, ம, கர, (ஓங்கார) என்னும் பிரணவாகரமானவரும், திகம்பரரும், அது என்று அஃறிணை நிலையிலும் போற்றப்படக் கூடியவரும், ஒருவராய் மாமரத்தின் கீழ் வீற்றிருப்பவரும், ஒப்பற்ற தன்மை உடையவரும், அன்ன ரூபம் கொண்ட பிரமன் நீல நிறமுள்ள ஆகாயத்தில் முடியைத் தேடி காண முடியாதவரும், பாபத்தை ஒழிப்பவரும், (தேவியின்) அழகிய மார்பின் காம்பின் தழும்பை உடையவரும் ஆகிய சிவபெருமானை, உமா தேவி தவம் செய்து பெற்றதும், முப்பத்திரண்டு அறங்கள் நிகழ்வதுமான திருக் காஞ்சி நகரில் வாழ்பவனே, பரிசுத்தமானவனே, வேடப் பெண் வள்ளியின் தன மலைகளைத் தழுவுகின்ற கங்கையின் புத்திரனே, நறுமணம் கமழ்கின்ற பொன்னுலகத்தில் தேவர்கள் வாழும் பொருட்டு, பரந்த கடல் நெருப்புப் பற்றி எழவும், அசுரர்கள் வேரோடு மாளவும், தீவினைகள் நீங்கவும் வேலைச் செலுத்திய பெருமாளே.
கமல(ம்) அரு சோகு ஆம்பர(ம்) முடி நடு ஏய் பூங்கணை ... (மன்மதனுடைய ஐந்து மலர்ப் பாணங்களில் முதல் கணையாகிய) தாமரை மலர், அருமையான (இடைக் கணையாகிய) அசோக மலர், (கடைக் கணையாகிய) நீலோற்பல மலர், இவற்றிற்கு இடை இடையே உள்ள மாம்பூ, முல்லை (ஆகிய மலர்ப் பாணங்களின் தொழில் ஆற்றலால்) கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீதே களை அற மீது ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி ... கலகப் போரில் ஈடுபட்டு, படுக்கையின் மேல் சோர்வு நீங்க என் மீது தாக்கி எழுகின்ற காம தாகம் நீங்கும்படி, கன இய வார் ஏந்தின இள நீர் தோய்ந்து எமது உயிர் நீல அஞ்சன மதர் விழியால் வாங்கிய இவளுடன் மால் கூர்ந்திடும் அநுபோகம் இனி விட ... கனத்ததும், கச்சு தாங்கியதும், இளநீர் போன்றதுமான மார்பகங்களைத் தழுவி என்னுடைய உயிரை கரிய மை தீட்டப்பட்ட, செழிப்புள்ள கண்ணால் கவர்ந்த இந்தப் பெண் மீது மோகம் மிக்கு எழும் இன்ப நுகர்ச்சியை இனி விட்டு ஒழிப்பதற்கு, வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இத(ம்) இய பாத அம்புயம் அருள்வாயே ... வேத முடிவான, பரம சுகம் தருவதான, முக்திப் பொருளாகிய, இன்பம் தருவதான பாதத் தாமரைகளைத் தந்து அருளுக. அமகர ஆசாம்பர அதுகர ஏக ஆம்பரம் அதுல ... அ, ம, கர, (ஓங்கார) என்னும் பிரணவாகரமானவரும், திகம்பரரும், அது என்று அஃறிணை நிலையிலும் போற்றப்படக் கூடியவரும், ஒருவராய் மாமரத்தின் கீழ் வீற்றிருப்பவரும், ஒப்பற்ற தன்மை உடையவரும், அ(ன்)ன நீல அம்பரம் அறியாத அநகர நாள அங்கிதர் தமை ... அன்ன ரூபம் கொண்ட பிரமன் நீல நிறமுள்ள ஆகாயத்தில் முடியைத் தேடி காண முடியாதவரும், பாபத்தை ஒழிப்பவரும், (தேவியின்) அழகிய மார்பின் காம்பின் தழும்பை உடையவரும் ஆகிய சிவபெருமானை, உமையாள் சேர்ந்து அருள் அறம் உறு சீ(ர்) காஞ்சியில் உறைவோனே ... உமா தேவி தவம் செய்து பெற்றதும், முப்பத்திரண்டு அறங்கள் நிகழ்வதுமான திருக் காஞ்சி நகரில் வாழ்பவனே, விமல கிராத அங்கனை தன கிரி தோய் காங்கெய ... பரிசுத்தமானவனே, வேடப் பெண் வள்ளியின் தன மலைகளைத் தழுவுகின்ற கங்கையின் புத்திரனே, வெடி படு தேவேந்திர நகர் வாழ் விரி கடல் தீ மூண்டிட நிசிசரர் வேர் மாண்டிட வினை அற வேல் வாங்கிய பெருமாளே. ... நறுமணம் கமழ்கின்ற பொன்னுலகத்தில் தேவர்கள் வாழும் பொருட்டு, பரந்த கடல் நெருப்புப் பற்றி எழவும், அசுரர்கள் வேரோடு மாளவும், தீவினைகள் நீங்கவும் வேலைச் செலுத்திய பெருமாளே.