மகுடக் கொப்பு ஆடக் காதினில் நுதலில் பொட்டு ஊரக் கோதிய மயிரில் சுற்று ஓலைப் பூவோடு வண்டு பாட
வகை முத்துச் சோரச் சேர் நகை இதழில் சொல் சாதிப்பார் இயல் மதனச் சொல் பாடுக் கோகில ரம்பை மாதர்
பகடிச் சொல் கூறிப் போர் மயல் முக இச்சைப் பேசிச் சீர் இடை பவளப் பட்டாடைத் தோள் இரு கொங்கை மேலா
பண(ம்) மெத்தப் பேசித் தூது இடும் இதயச் சுத்த ஈனச் சோலிகள் பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ
தகுடத்தத் தானத் தானன திகுடத்தித் தீதித் தோதிமி தடுட்டுடுட் டாடப் பேரிகை சங்கு வீணை தடம் இட்டு
பாவக்கார் கிரி பொடி பட்டுப் போகச் சூரர்கள் தலை இற்று இட்டு ஆடப் போர் புரிகின்ற வேலா
திகிரிப் பொன் பாணிப் பாலனை மறை கல் புத்தேள் அப் பூம(ன்)னை சினம் உற்றுச் சேடில் சாடிய கந்த வேளே
தினை உற்றுக் காவல் காரியை மணம் உற்றுத் தேவ பூவொடு திகழ் கச்சித் தேவக் கோன் மகிழ் தம்பிரானே.
சல்லடைக் கொப்பு என்னும் காதணியும், கொப்பு எனப்படும் காதணியும் காதில் ஆட, நெற்றியில் திலகம் பரவி விளங்க, சிக்கெடுக்கப்பட்டு சீவி வாரப்பட்ட மயிரில் சுற்றி வைத்துள்ள தாழம்பூவில் வண்டு பாட, நல்ல தரமான முத்தும் இழிவுபடும்படி விளங்கும் பற்களைக் காட்டி, வாயிதழ்களால் தாங்கள் பேசும் சொற்களையே சாதிப்பவர்கள். பொருந்திய காம லீலைப் பாடல்களைப் பாடுகின்ற குயில் போன்ற, ரம்பையை ஒத்த விலைமாதர்கள். பரிகாசப் பேச்சுக்களைப் பேசி காமப் போர் (மனதில் கிளம்பும்படி) முகத்தில் விருப்பத்தைக் காட்டிப் பேசி, அழகிய இடையில் செந்நிறப் பட்டாடையை தோள் மீதும் இரு மார்பகங்களின் மீதும் இறுக்க அணிந்து, பணம் நிரம்பத் தரும்படி பேசி (அதன் பொருட்டு) தூது அனுப்புகின்ற மனத்தை உடைய மிக்க இழிவான தொழிலைப் பூண்டவர்கள். பல பேர்களின் எச்சிலுக்கும் ஆசைப்படும் இவ்வேசிகளின் தொடர்பு நல்லதாகுமா? தகுடத்தத் தானத் தானன திகுடத்தித் தீதித் தோதிமி தடுட்டுடுட் டாட இவ்வாறான ஒலிகளை எழுப்பி பேரிகை, சங்கு, வீணை (ஆகியவைகள்) ஒலித்து வழியைக் காட்டி, (வருபவர்களை உள்ளே மடக்கி) பாவங்களைச் செய்த (கிரவுஞ்சன் என்னும் அசுரனாகிய) மலை தூளாகும்படிப் போக, சூரர்களுடைய தலைகள் அறுந்து வீழ்ந்து ஆடும்படி சண்டை செய்கின்ற வேலனே, சக்கரம் ஏந்திய அழகிய திருக்கரத்தை உடைய திருமாலின் பிள்ளையும், வேதங்களைக் கற்ற தேவனும், அழகிய தாமரையில் வீற்றிருப்பவனுமாகிய பிரமன் மீது கோபம் கொண்டு அவனது திரட்சியான தலையில் குட்டிய கந்தப் பெருமானே, தினைப் புனத்திலிருந்து காவல் புரிந்த வள்ளி நாயகியை திருமணம் செய்து கொண்டு, தேவருலகில் வாழ்ந்த பூ அனைய தேவயானையுடன் சேர்ந்து, விளங்கும் காஞ்சீபுரத்தில் வீற்றிருந்து, தேவர்கள் தலைவனான இந்திரன் மகிழும் தம்பிரானே.
மகுடக் கொப்பு ஆடக் காதினில் நுதலில் பொட்டு ஊரக் கோதிய மயிரில் சுற்று ஓலைப் பூவோடு வண்டு பாட ... சல்லடைக் கொப்பு என்னும் காதணியும், கொப்பு எனப்படும் காதணியும் காதில் ஆட, நெற்றியில் திலகம் பரவி விளங்க, சிக்கெடுக்கப்பட்டு சீவி வாரப்பட்ட மயிரில் சுற்றி வைத்துள்ள தாழம்பூவில் வண்டு பாட, வகை முத்துச் சோரச் சேர் நகை இதழில் சொல் சாதிப்பார் இயல் மதனச் சொல் பாடுக் கோகில ரம்பை மாதர் ... நல்ல தரமான முத்தும் இழிவுபடும்படி விளங்கும் பற்களைக் காட்டி, வாயிதழ்களால் தாங்கள் பேசும் சொற்களையே சாதிப்பவர்கள். பொருந்திய காம லீலைப் பாடல்களைப் பாடுகின்ற குயில் போன்ற, ரம்பையை ஒத்த விலைமாதர்கள். பகடிச் சொல் கூறிப் போர் மயல் முக இச்சைப் பேசிச் சீர் இடை பவளப் பட்டாடைத் தோள் இரு கொங்கை மேலா ... பரிகாசப் பேச்சுக்களைப் பேசி காமப் போர் (மனதில் கிளம்பும்படி) முகத்தில் விருப்பத்தைக் காட்டிப் பேசி, அழகிய இடையில் செந்நிறப் பட்டாடையை தோள் மீதும் இரு மார்பகங்களின் மீதும் இறுக்க அணிந்து, பண(ம்) மெத்தப் பேசித் தூது இடும் இதயச் சுத்த ஈனச் சோலிகள் பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ ... பணம் நிரம்பத் தரும்படி பேசி (அதன் பொருட்டு) தூது அனுப்புகின்ற மனத்தை உடைய மிக்க இழிவான தொழிலைப் பூண்டவர்கள். பல பேர்களின் எச்சிலுக்கும் ஆசைப்படும் இவ்வேசிகளின் தொடர்பு நல்லதாகுமா? தகுடத்தத் தானத் தானன திகுடத்தித் தீதித் தோதிமி தடுட்டுடுட் டாடப் பேரிகை சங்கு வீணை தடம் இட்டு ... தகுடத்தத் தானத் தானன திகுடத்தித் தீதித் தோதிமி தடுட்டுடுட் டாட இவ்வாறான ஒலிகளை எழுப்பி பேரிகை, சங்கு, வீணை (ஆகியவைகள்) ஒலித்து வழியைக் காட்டி, பாவக்கார் கிரி பொடி பட்டுப் போகச் சூரர்கள் தலை இற்று இட்டு ஆடப் போர் புரிகின்ற வேலா ... (வருபவர்களை உள்ளே மடக்கி) பாவங்களைச் செய்த (கிரவுஞ்சன் என்னும் அசுரனாகிய) மலை தூளாகும்படிப் போக, சூரர்களுடைய தலைகள் அறுந்து வீழ்ந்து ஆடும்படி சண்டை செய்கின்ற வேலனே, திகிரிப் பொன் பாணிப் பாலனை மறை கல் புத்தேள் அப் பூம(ன்)னை சினம் உற்றுச் சேடில் சாடிய கந்த வேளே ... சக்கரம் ஏந்திய அழகிய திருக்கரத்தை உடைய திருமாலின் பிள்ளையும், வேதங்களைக் கற்ற தேவனும், அழகிய தாமரையில் வீற்றிருப்பவனுமாகிய பிரமன் மீது கோபம் கொண்டு அவனது திரட்சியான தலையில் குட்டிய கந்தப் பெருமானே, தினை உற்றுக் காவல் காரியை மணம் உற்றுத் தேவ பூவொடு திகழ் கச்சித் தேவக் கோன் மகிழ் தம்பிரானே. ... தினைப் புனத்திலிருந்து காவல் புரிந்த வள்ளி நாயகியை திருமணம் செய்து கொண்டு, தேவருலகில் வாழ்ந்த பூ அனைய தேவயானையுடன் சேர்ந்து, விளங்கும் காஞ்சீபுரத்தில் வீற்றிருந்து, தேவர்கள் தலைவனான இந்திரன் மகிழும் தம்பிரானே.