அப்பு இடை வாய்ந்து நீடு குலாவிய பதும ஆதியை நீந்து உற்பல ஓடையில் மீதினில் ஊர்ந்து நீடிய உகள் சேலை
வார்ந்துப் பகழீ எதிர் ஆகி மை கூர்ந்துப் பரியா(க) வரி சேர் அவை சேர்ந்துக் குழையோடு ஊசல் ஆடிய விழியாலே
சாய்ந்துப் பனை ஊண் அவர் ஆன பொல் ஆய்ந்துப் ப(பா)ணினார் இரு தாளினில் வீழ்ந்து
இப் படி மீதினிலே சிறிது அறிவாலே சாந்து அப்பிய மா மலை நேர் முலை சேர்ந்துப்படி வீணினி லேயுயிர் மாய்ந்து இப்படிப் போகினும் ஓர் மொழி மறவேனே
சார்ந்தப் பெரு நீர் வெ(ள்)ளமாகவே பாய்ந்த அப் பொழுது ஆரும் இல்லாமலெ காந்தப் பெரு நாதனும் ஆகிய மதராலே
தாந்தக்கிட தாகிட தாகிட தோந்திக்கிட தோதிமி தோதிமி சேஞ்செக்கண சேகெண சேகெண ...... வெனதாளம்
காந்தப் பத(ம்) மாறி உலாவு உயர் ஆந்தன் குரு நாதனும் ஆகியெ போந்தப் பெருமான முருகா ஒரு பெரியோனே
காந்தக் க(ல்)லும் ஊசியுமே என ஆய்ந்துத் தமிழ் ஓதிய சீர் பெறு(ம்)
காஞ்சிப் பதி மா நகர் மேவிய பெருமாளே.
நீரில் நிலை நின்று நீண்ட நாள் விளங்கிய தாமரையாகிய முதன்மையான பொருளை, (தனது அழகால்) கடந்து விளங்கும் நீலோற்பல மலர் உள்ள ஓடையில் நெடுந்தூரம் பாய வல்ல சேல் மீனை நேர் ஒத்து, அம்புக்குப் போட்டியாக எதிர்த்து, அஞ்சனம் மிகவும் பூசப்பட்டு, அந்த மையைத் தாங்குவதாகி, ரேகைகள் பொருந்த, கூர்மை கொண்டு, (காதில் உள்ள) குண்டலத்தோடு ஊஞ்சலாடிய கண்களால், (என் ஒழுக்கம்) தளர்ந்து, பழைய பனங் கள்ளை உண்டவர் மயக்கம் கொண்டது போல் மயங்கிச் சிறிது ஓய்ந்து, இசை பாடும் பொதுமகளிருடைய இரண்டு பாதங்களிலும் விழுந்து கிடந்து, இந்தப் பூமியின் மீது அற்ப அறிவு காரணமாக, சந்தனம் பூசப்பட்ட பெரிய மலை போன்ற மார்பைச் சேர்ந்துப் படிந்து, வீணாகக் காலம் கழித்து, உயிர் அழிந்து இவ்வாறு கெட்டுப் போனாலும், (நீ சொன்ன) ஒப்பற்ற உபதேச மொழியை மறக்க மாட்டேன். பெருகிவந்த நீர் வெள்ளமாகவே பாய்ந்து பரக்கும் அந்த வேளையில் (ஊழிக் காலத்தில்), ஓர் உயிரும் இல்லாமல் ஒளி வீசும் பெரிய கால மூர்த்தியாகிய சிவபெருமான் களிப்பினால், (இவ்வாறு) தாளங்கள் ஒலிக்க, அழகிய திருவடிகளை மாற்றி மாற்றி நடன உலாவை மிகச் செய்யும் (எல்லாவற்றுக்கும்) முடிவானவனாகிய சம்ஹார மூர்த்தியாகிய சிவபெருமானுக்கு குரு நாதனாக வந்துள்ள பெருமானாகிய முருகனே, ஒப்பற்ற பெரியோனே, காந்தக் கல்லும் ஊசியும் போல, ஆசிரியரும் மாணவருமாக ஒருமித்து தமிழை ஓதுகின்ற மேன்மை பொருந்திய காஞ்சி என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.
அப்பு இடை வாய்ந்து நீடு குலாவிய பதும ஆதியை நீந்து உற்பல ஓடையில் மீதினில் ஊர்ந்து நீடிய உகள் சேலை ... நீரில் நிலை நின்று நீண்ட நாள் விளங்கிய தாமரையாகிய முதன்மையான பொருளை, (தனது அழகால்) கடந்து விளங்கும் நீலோற்பல மலர் உள்ள ஓடையில் நெடுந்தூரம் பாய வல்ல சேல் மீனை வார்ந்துப் பகழீ எதிர் ஆகி மை கூர்ந்துப் பரியா(க) வரி சேர் அவை சேர்ந்துக் குழையோடு ஊசல் ஆடிய விழியாலே ... நேர் ஒத்து, அம்புக்குப் போட்டியாக எதிர்த்து, அஞ்சனம் மிகவும் பூசப்பட்டு, அந்த மையைத் தாங்குவதாகி, ரேகைகள் பொருந்த, கூர்மை கொண்டு, (காதில் உள்ள) குண்டலத்தோடு ஊஞ்சலாடிய கண்களால், சாய்ந்துப் பனை ஊண் அவர் ஆன பொல் ஆய்ந்துப் ப(பா)ணினார் இரு தாளினில் வீழ்ந்து ... (என் ஒழுக்கம்) தளர்ந்து, பழைய பனங் கள்ளை உண்டவர் மயக்கம் கொண்டது போல் மயங்கிச் சிறிது ஓய்ந்து, இசை பாடும் பொதுமகளிருடைய இரண்டு பாதங்களிலும் விழுந்து கிடந்து, இப் படி மீதினிலே சிறிது அறிவாலே சாந்து அப்பிய மா மலை நேர் முலை சேர்ந்துப்படி வீணினி லேயுயிர் மாய்ந்து இப்படிப் போகினும் ஓர் மொழி மறவேனே ... இந்தப் பூமியின் மீது அற்ப அறிவு காரணமாக, சந்தனம் பூசப்பட்ட பெரிய மலை போன்ற மார்பைச் சேர்ந்துப் படிந்து, வீணாகக் காலம் கழித்து, உயிர் அழிந்து இவ்வாறு கெட்டுப் போனாலும், (நீ சொன்ன) ஒப்பற்ற உபதேச மொழியை மறக்க மாட்டேன். சார்ந்தப் பெரு நீர் வெ(ள்)ளமாகவே பாய்ந்த அப் பொழுது ஆரும் இல்லாமலெ காந்தப் பெரு நாதனும் ஆகிய மதராலே ... பெருகிவந்த நீர் வெள்ளமாகவே பாய்ந்து பரக்கும் அந்த வேளையில் (ஊழிக் காலத்தில்), ஓர் உயிரும் இல்லாமல் ஒளி வீசும் பெரிய கால மூர்த்தியாகிய சிவபெருமான் களிப்பினால், தாந்தக்கிட தாகிட தாகிட தோந்திக்கிட தோதிமி தோதிமி சேஞ்செக்கண சேகெண சேகெண ...... வெனதாளம் ... (இவ்வாறு) தாளங்கள் ஒலிக்க, காந்தப் பத(ம்) மாறி உலாவு உயர் ஆந்தன் குரு நாதனும் ஆகியெ போந்தப் பெருமான முருகா ஒரு பெரியோனே ... அழகிய திருவடிகளை மாற்றி மாற்றி நடன உலாவை மிகச் செய்யும் (எல்லாவற்றுக்கும்) முடிவானவனாகிய சம்ஹார மூர்த்தியாகிய சிவபெருமானுக்கு குரு நாதனாக வந்துள்ள பெருமானாகிய முருகனே, ஒப்பற்ற பெரியோனே, காந்தக் க(ல்)லும் ஊசியுமே என ஆய்ந்துத் தமிழ் ஓதிய சீர் பெறு(ம்) ... காந்தக் கல்லும் ஊசியும் போல, ஆசிரியரும் மாணவருமாக ஒருமித்து தமிழை ஓதுகின்ற மேன்மை பொருந்திய காஞ்சிப் பதி மா நகர் மேவிய பெருமாளே. ... காஞ்சி என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.