அஞ்சன வேல் விழி இட்டு அழைக்கவும்
இங்கிதமாக நகைத்து உருக்கவும்
அம்புயல் நேர் குழலைக் குலைக்கவும்
நகரேகை அங்கையின் மூலம் வெளிப்படுத்தவும்
மந்தர மாமுலை சற்று அசைக்கவும்
அம்பரம் வீணில் அவிழ்த்து உடுக்கவும்
இளைஞோர்கள் நெஞ்சினில் ஆசை நெருப்பு எழுப்பவும்
வம்பு உரை கூறி வளைத்து இணக்கவும்
மன்று இடை ஆடி மருள் கொடுக்கவும்
எவரேனும் நிந்தை செ(ய்)யாது பொருள் பறிக்கவும்
இங்கு வ(ல்)லார்கள் கையில் பிணிப்பு அற
நின் பத சேவை அநுக்ரகிப்பதும் ஒரு நாளே
குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர் கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன்
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன் நக்கர் பெற்று அருள் குன்றைய ரூபக கற்பக பி(ள்)ளை இளையோனே
துஞ்சல் இலாத சட அக்ஷரப் பிரபந்த சடானன துஷ்ட நிக்ரக
தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா
துங்க கஜாரணியத்தில் உத்தம
சம்பு தாடகம் அடுத்த தக்ஷிண சுந்தர மாறன் மதில் புறத்து உறை பெருமாளே.
மை தீட்டிய வேல் போன்ற கண்ணைக் கொண்டு அழைக்கவும், இன்பகரமாக சிரித்து மனதை உருக்கவும், மேகம் போன்ற கூந்தலைக் கலைத்து அவிழ்க்கவும், நகக் குறி இட்டு அழகிய கைகளால் தங்கள் காம எண்ணங்களை வெளியிடவும், மந்தர மலையைப் போன்ற மார்பகத்தைச் சிறிது அசைக்கவும், சேலையை அனாவசியமாக நெகிழ்த்தி, பின்பு உடுக்கவும், வாலிபர்கள் மனதில் காமத் தீயை எழுப்பவும், வீண் வார்த்தைகளைப் பேசி அவர்களை வளைத்து வசப்படுத்தவும், சபையில் நடனம் ஆடி காம மயக்கத்தைக் கொடுக்கவும், யாராயிருந்த போதிலும் இகழ்ச்சி இன்றி அவர்களிடமிருந்து பொருளை அபகரிக்கவும், இங்கு வல்லவர்களாகிய (பொது மகளிரின்) கையில் அகப்பட்டுக் கொண்ட கட்டு நீங்க, உன்னுடைய திருவடி சேவையை நீ தந்து அருளுவது கூடும் ஒரு நாள் உண்டாகுமோ? யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விக்ன விநாயகன் என்னும் பெரியோன், (சினத்தை அடக்கும்) அங்குசம், (காமத்தை அடக்கும்) பாசம் இரண்டும் கையில் கொண்ட பிரசித்தி பெற்றவன், ஒற்றைக் கொம்பன், பெரு வயிற்றன், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய) முக்கண்ணன், வலிமை வாய்ந்தவன், கணபதி, துதிப்பவர்களுடைய வினைகளையும் ஆசையையும் தீர்ப்பவன், எங்கள் விநாயக மூர்த்தி, திகம்பரரான சிவபெருமான் பெற்றருளிய மலை போன்ற உருவத்தை உடையவன், ஆகிய கற்பக விநாயகப் பிள்ளைக்குத் தம்பியே, அழிவு இல்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்தின் பெருமை கூறும் நூல்களுக்கு உரியவனே, ஆறு திருமுகத்தனே, துஷ்டர்களை அழிப்பவனே, (மதுரையில் சொக்கநாதர் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள அஷ்ட) கஜங்கள் தாங்கும் மணி மண்டபத்தில் (இயல், இசை, நாடகம் என்ற) முத்தமிழை ஆதரித்து வளர்த்தவனே, உயர்வு பெற்ற திருவானைக்காவில் வீற்றிருக்கும் உத்தமனே, சம்பு தீர்த்தத்துக்கு அடுத்துத் தெற்கே உள்ள சுந்தர (உக்கர) பாண்டியன் மதிலின் வெளிப்புறத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
அஞ்சன வேல் விழி இட்டு அழைக்கவும் ... மை தீட்டிய வேல் போன்ற கண்ணைக் கொண்டு அழைக்கவும், இங்கிதமாக நகைத்து உருக்கவும் ... இன்பகரமாக சிரித்து மனதை உருக்கவும், அம்புயல் நேர் குழலைக் குலைக்கவும் ... மேகம் போன்ற கூந்தலைக் கலைத்து அவிழ்க்கவும், நகரேகை அங்கையின் மூலம் வெளிப்படுத்தவும் ... நகக் குறி இட்டு அழகிய கைகளால் தங்கள் காம எண்ணங்களை வெளியிடவும், மந்தர மாமுலை சற்று அசைக்கவும் ... மந்தர மலையைப் போன்ற மார்பகத்தைச் சிறிது அசைக்கவும், அம்பரம் வீணில் அவிழ்த்து உடுக்கவும் ... சேலையை அனாவசியமாக நெகிழ்த்தி, பின்பு உடுக்கவும், இளைஞோர்கள் நெஞ்சினில் ஆசை நெருப்பு எழுப்பவும் ... வாலிபர்கள் மனதில் காமத் தீயை எழுப்பவும், வம்பு உரை கூறி வளைத்து இணக்கவும் ... வீண் வார்த்தைகளைப் பேசி அவர்களை வளைத்து வசப்படுத்தவும், மன்று இடை ஆடி மருள் கொடுக்கவும் ... சபையில் நடனம் ஆடி காம மயக்கத்தைக் கொடுக்கவும், எவரேனும் நிந்தை செ(ய்)யாது பொருள் பறிக்கவும் ... யாராயிருந்த போதிலும் இகழ்ச்சி இன்றி அவர்களிடமிருந்து பொருளை அபகரிக்கவும், இங்கு வ(ல்)லார்கள் கையில் பிணிப்பு அற ... இங்கு வல்லவர்களாகிய (பொது மகளிரின்) கையில் அகப்பட்டுக் கொண்ட கட்டு நீங்க, நின் பத சேவை அநுக்ரகிப்பதும் ஒரு நாளே ... உன்னுடைய திருவடி சேவையை நீ தந்து அருளுவது கூடும் ஒரு நாள் உண்டாகுமோ? குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர் கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன் ... யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விக்ன விநாயகன் என்னும் பெரியோன், (சினத்தை அடக்கும்) அங்குசம், (காமத்தை அடக்கும்) பாசம் இரண்டும் கையில் கொண்ட பிரசித்தி பெற்றவன், ஒற்றைக் கொம்பன், பெரு வயிற்றன், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய) முக்கண்ணன், வலிமை வாய்ந்தவன், கணபதி, கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன் நக்கர் பெற்று அருள் குன்றைய ரூபக கற்பக பி(ள்)ளை இளையோனே ... துதிப்பவர்களுடைய வினைகளையும் ஆசையையும் தீர்ப்பவன், எங்கள் விநாயக மூர்த்தி, திகம்பரரான சிவபெருமான் பெற்றருளிய மலை போன்ற உருவத்தை உடையவன், ஆகிய கற்பக விநாயகப் பிள்ளைக்குத் தம்பியே, துஞ்சல் இலாத சட அக்ஷரப் பிரபந்த சடானன துஷ்ட நிக்ரக ... அழிவு இல்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்தின் பெருமை கூறும் நூல்களுக்கு உரியவனே, ஆறு திருமுகத்தனே, துஷ்டர்களை அழிப்பவனே, தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா ... (மதுரையில் சொக்கநாதர் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள அஷ்ட) கஜங்கள் தாங்கும் மணி மண்டபத்தில் (இயல், இசை, நாடகம் என்ற) முத்தமிழை ஆதரித்து வளர்த்தவனே, துங்க கஜாரணியத்தில் உத்தம ... உயர்வு பெற்ற திருவானைக்காவில் வீற்றிருக்கும் உத்தமனே, சம்பு தாடகம் அடுத்த தக்ஷிண சுந்தர மாறன் மதில் புறத்து உறை பெருமாளே. ... சம்பு தீர்த்தத்துக்கு அடுத்துத் தெற்கே உள்ள சுந்தர (உக்கர) பாண்டியன் மதிலின் வெளிப்புறத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.