அம்புலி நீரைச் சூடிய செம் சடை மீதில் தாவிய ஐந்தலை நாகப் பூஷணர் அருள்பாலா
அன்புடன் நாவில் பாவது பாதமும் சந்ததம் ஓதி அங்கயினால் நின் பூசையும் அணியாமல்
வம்பு அணி பாரம் பூண் முலை வஞ்சியர் மாயச் சாயலில்
வண்டு உழல் ஓதித் தாழலில் இரு காதில்
மண்டிய நீலப் பார்வையில் வெண் துகில் ஆடைச் சேர்வையில்
மங்கி எய் ஏழைப் பாவியேன் அழிவேனோ
கொம்பு அனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி
குண்டலி ஆலப் போசனி அபிராமி
கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி
குன்று அது வார் பொன் காரிகை அருள்பாலா
செம் பவளம் ஆயக் கூர் இதழ் மின் குற மானை
பூண் முலை திண் புயம் ஆரப் பூரணம் அருள்வோனே
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென் திரு வானைக்கா உறை பெருமாளே.
நிலவையும் கங்கையையும் தரித்துள்ள செஞ்சடை மேல் தாவி நிற்கும் ஐந்து தலை நாகத்தை ஆபரணமாக அணிந்துள்ள சிவ பெருமான் அருளிய குழந்தையே, அன்புடனே நாவார பாடல்களால் எப்பொழுதும் உனது பாதத்தை ஓதி, உள்ளங்கை கொண்டு உன்னைப் பூஜிக்கும் ஒழுக்கத்தை மேற் கொள்ளாமல், கச்சு அணிந்ததும் ஆபரணம் பூண்டதும் ஆகிய மார்பினை உடைய வஞ்சிக் கொடி போன்ற விலைமாதர்களின் மாய அழகிலும், வண்டுகள் திரியும் கூந்தலின் சரிவிலும், இரண்டு காதுகளிலும், நெருங்கிய கரு நிற மை பூசிய கண்களின் பார்வையிலும், வெண்ணிறத்து ஆடையின் சேர்க்கையிலும், அறிவு மயங்கிப் போய் ஏழைப் பாவியேனாகிய அடியேன் அழிந்து போவேனோ? கொம்பை ஒத்த மெல்லிய நீல நிற அழகி, தாமரை மலர் மாலையை அணியாக அணிந்தவள், சுத்த மாயையாம் சக்தி, விஷத்தை உண்டவள், பேரழகி, குலவி மகிழும் ஆகாச கங்கை போலத் தூய்மை நிறைந்தவள், சங்கரி, வேதங்கள் போற்றும் பார்வதி, இமயத்தின் நெடிய தவத்தின் பயனாக வந்த அழகிய மாது ஈன்றளித்த மகனே, சிவந்த பவள நிறமான மெல்லிய வாயிதழ்களை உடையவளும், ஒளி பொருந்தியவளும் ஆகிய குறப் பெண்ணான வள்ளியின் ஆபரணம் அணிந்த மார்பகங்களை உனது திண்ணிய புயங்களால் நன்கு அணைக்க, பூரணமான திருவருளை அவளுக்குப் பாலித்தருளியவனே, செந்தமிழ் ஞானம் உள்ள பாணர்குலப் பாவலர் (திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் திருஞான சம்பந்தர் பாடலுக்கு ஏற்ப) இசையுடன் யாழை வாசித்த அழகிய திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே.