ஆரம் அணி வாரைப் பீறி அற மேலிட்டு ஆடவர்கள் வாட
துறவோரை ஆசை மடல் ஊர்வித்து ஆளும் அதி பாரப் பாளித படீரத் தன மானார்
கார் அளக(ம்) நீழல் காது அளவும் ஓடிக் காதும் அபிராமக் கயல் போலக்
காலன் உடல் போடத் தேடி வரு நாளில் காலை மறவாமல் புகல்வேனோ
பார் அடைய வாழ்வித்த ஆரபதி பாசச் சாமள கலாபப் பரி ஏறி
பாய் மத கபோலத்தானொடு இகலா(ம்) முன் பாடி வரும் ஏழைச் சிறியோனே
சூரர் புர சூறைக்கார சுரர் காவற்கார
இள ஏனல் புன(ம்) மேவும் தோகை திரு வேளைக்கார
தமிழ் வேதச் சோதி வளர் காவைப் பெருமாளே.
மணி வடம் அணிந்துள்ள மார்க்கச்சைக் கிழித்துக் கொண்டு, மிகவும் வெளித் தோன்றி ஆண்களை வாட்டியும், துறவிகளையும் காமத்தில் ஆழ்த்தி, மடல் ஏறும்படிச் செய்து ஆள வல்லதாய், அதிக கனம் கொண்டதாய், பச்சைக் கற்பூரமும் சந்தனமும் அணிந்ததான மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கருமேகம் போன்ற கூந்தலின் நிழலிலே, செவி வரைக்கும் ஓடி, கொல்லும் தொழிலை மேற்கொண்ட அழகிய கயல் மீன் போன்ற கண்கள் போலக் (கொலைத் தொழிலைக் கொண்ட) யமன் உடலை விட்டு என் உயிரைப் பிரிப்பதற்காகத் தேடி வருகின்ற தினத்தில், உன் திருவடிகளை மறக்காமல் சொல்லும் பாக்கியத்தைப் பெறுவேனோ? உலகம் முழுவதும் வாழ்விக்கும் சர்ப்பராஜன் ஆதிசேஷனையும் தன் கால்களில் கட்டவல்ல பசுந் தோகை வாகனமான மயிலாகிய குதிரை மேல் ஏறி, முன்பொரு காலத்தில் மதம் கொண்ட மத்தகத்தை உடைய விநாயகரோடு மாறுபட்டு, வளைந்தோடி வருகின்ற பாடி ஓட்டம் ஆகிய விளையாட்டை ஆடிய ஏழை இளையவனே, சூரர்களுடைய ஊர்களைச் சூறையாடி அழித்தவனே, தேவர்களுக்குக் காவற்காரனாய் விளங்குபவனே, பசுமையான தினைப் புனத்தில் இருந்த மயில் போன்ற அழகிய வள்ளியுடன் பொழுது போக்கிக் காவல் இருப்பவனே, தமிழ் மறையாகிய தேவாரத்தை (திருஞானசம்பந்தராகத் தோன்றி) அருளிய ஜோதி மூர்த்தியே, வளரும் திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே.
ஆரம் அணி வாரைப் பீறி அற மேலிட்டு ஆடவர்கள் வாட ... மணி வடம் அணிந்துள்ள மார்க்கச்சைக் கிழித்துக் கொண்டு, மிகவும் வெளித் தோன்றி ஆண்களை வாட்டியும், துறவோரை ஆசை மடல் ஊர்வித்து ஆளும் அதி பாரப் பாளித படீரத் தன மானார் ... துறவிகளையும் காமத்தில் ஆழ்த்தி, மடல் ஏறும்படிச் செய்து ஆள வல்லதாய், அதிக கனம் கொண்டதாய், பச்சைக் கற்பூரமும் சந்தனமும் அணிந்ததான மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கார் அளக(ம்) நீழல் காது அளவும் ஓடிக் காதும் அபிராமக் கயல் போலக் ... கருமேகம் போன்ற கூந்தலின் நிழலிலே, செவி வரைக்கும் ஓடி, கொல்லும் தொழிலை மேற்கொண்ட அழகிய கயல் மீன் போன்ற கண்கள் போலக் (கொலைத் தொழிலைக் கொண்ட) காலன் உடல் போடத் தேடி வரு நாளில் காலை மறவாமல் புகல்வேனோ ... யமன் உடலை விட்டு என் உயிரைப் பிரிப்பதற்காகத் தேடி வருகின்ற தினத்தில், உன் திருவடிகளை மறக்காமல் சொல்லும் பாக்கியத்தைப் பெறுவேனோ? பார் அடைய வாழ்வித்த ஆரபதி பாசச் சாமள கலாபப் பரி ஏறி ... உலகம் முழுவதும் வாழ்விக்கும் சர்ப்பராஜன் ஆதிசேஷனையும் தன் கால்களில் கட்டவல்ல பசுந் தோகை வாகனமான மயிலாகிய குதிரை மேல் ஏறி, பாய் மத கபோலத்தானொடு இகலா(ம்) முன் பாடி வரும் ஏழைச் சிறியோனே ... முன்பொரு காலத்தில் மதம் கொண்ட மத்தகத்தை உடைய விநாயகரோடு மாறுபட்டு, வளைந்தோடி வருகின்ற பாடி ஓட்டம் ஆகிய விளையாட்டை ஆடிய ஏழை இளையவனே, சூரர் புர சூறைக்கார சுரர் காவற்கார ... சூரர்களுடைய ஊர்களைச் சூறையாடி அழித்தவனே, தேவர்களுக்குக் காவற்காரனாய் விளங்குபவனே, இள ஏனல் புன(ம்) மேவும் தோகை திரு வேளைக்கார ... பசுமையான தினைப் புனத்தில் இருந்த மயில் போன்ற அழகிய வள்ளியுடன் பொழுது போக்கிக் காவல் இருப்பவனே, தமிழ் வேதச் சோதி வளர் காவைப் பெருமாளே. ... தமிழ் மறையாகிய தேவாரத்தை (திருஞானசம்பந்தராகத் தோன்றி) அருளிய ஜோதி மூர்த்தியே, வளரும் திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே.