காவிப் பூவை ஏவை இகல்வன
நீலத்து ஆலகால நிகர்வன
காதிப் போக மோகம் அருள்வன
இரு தோடார் காதில் காதி மோதி உழல் க(ண்)ண
மாயத்தார்கள் தேக பரிசன காம க்ரோத லோப மதம் இவை சிதையாத பாவிக்கு
ஆயு வாயு வலம் வர லாலிப்பார்கள் போத கரும உபாயத்தான ஞான நெறி தனை
இனி மேல் அன்பா (இ)லக்கு ஆ(க்)க யோக ஜெப தப நேசித்து
ஆரவார பரிபுரம் பாதத்து ஆளுமாறு திரு உள(ம்) நினையாதோ
கூவிக் கோழி வாழி என மயில் ஆலித்து ஆலகாலம் என உயர்
கூளிச் சேனை வான மிசை தனில் விளையாட
கோரத் தீர சூரனுடை வினை பாற
சீறல் ஏனபதி தனை கோலக்காலமாக அமர் செய்த வடிவேலா
ஆவிச் சேல்கள் பூகம் மடல் இள பாளைத் தாறு கூறுபட
உயர் ஆலைச் சோலை மேலை வயலியில் உறைவோனே
ஆசைத் தோகைமார்கள் இசை உடன் ஆடிப் பாடி நாடி வரு
திரு ஆனைக் காவில் மேவி அருளிய பெருமாளே.
கருங்குவளைப் பூவுடனும், அம்புடனும் ஒத்திருந்தும் மாறுபடுவன. கருநீல ஆலகால விஷத்தை ஒப்பன. கொல்லும் தன்மையதாய் இன்பத்தையும் காம மயக்கத்தையும் கொடுப்பன. இரண்டு தோடுகளை அணிந்துள்ள காதுகளை வெட்டுவன போலப் போய் மோதித் திரியும் கண்களைக் கொண்டு, மாயக்காரிகள் (ஆகிய வேசையர்களின்) தேகத்தைத் தொடுதற்குள்ள ஆசை, கோபம், ஈயாமை, செருக்கு இவை அழியாத பாவியாகிய எனக்கு, ஆயுளும், பிராணவாயுவும் வலிமை வரும்படி அன்பு வைத்தவர்களுடைய அறிவோடு கூடிய தொழில்களின் உபாயத்தைக் காட்டும் ஞான வழியை, இனி மேல் என் மீது அன்பு வைத்து, (அந்த வழியே) குறியாக வைத்துக் கொண்டு, ஜெப தபம் இவைகளில் அன்பு வரும்படிச் செய்து, பேரொலி செய்யும் சிலம்பு அணிந்த உன் திருவடியில் என்னை ஆண்டு கொண்டு ஆளுமாறு நினைந்து அருளக் கூடாதோ? கோழியானது கூவி வாழிய என்று வாழ்த்தி, மயில் ஆரவாரம் செய்து விஷம் போல உயர்ந்து விளங்க, சிவ கணங்களாகிய பூதகணச் சேனைகள் வானில் விளையாட, அச்சம் தருபவனும் தீரனுமான சூரனுடைய முயற்சி சிந்தி அழிய, சீறிப் பெருங் கோபத்துடன் வந்த ஆதிவராகத்தை கூச்சலிட்டு அடங்க போர் செய்த கூரிய வேலனே, குளத்தில் உள்ள சேல் மீன்கள் கமுக மரத்தின் ஏடுகளாகிய இளம் பாளைகளின் குலைகள் பிளவுபடும்படி, உயர்ந்து பாயும் கரும்புகள் நிறைந்த சோலையைக் கொண்ட, மேலை வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, ஆசை நிரம்பிய பெண்கள் இசைபாடிக் கொண்டு விரும்பி வந்து வணங்குகின்ற திருவானைக்கா என்னும் ஊரில் விருப்புடன் வீற்றிருக்கும் பெருமாளே.
காவிப் பூவை ஏவை இகல்வன ... கருங்குவளைப் பூவுடனும், அம்புடனும் ஒத்திருந்தும் மாறுபடுவன. நீலத்து ஆலகால நிகர்வன ... கருநீல ஆலகால விஷத்தை ஒப்பன. காதிப் போக மோகம் அருள்வன ... கொல்லும் தன்மையதாய் இன்பத்தையும் காம மயக்கத்தையும் கொடுப்பன. இரு தோடார் காதில் காதி மோதி உழல் க(ண்)ண ... இரண்டு தோடுகளை அணிந்துள்ள காதுகளை வெட்டுவன போலப் போய் மோதித் திரியும் கண்களைக் கொண்டு, மாயத்தார்கள் தேக பரிசன காம க்ரோத லோப மதம் இவை சிதையாத பாவிக்கு ... மாயக்காரிகள் (ஆகிய வேசையர்களின்) தேகத்தைத் தொடுதற்குள்ள ஆசை, கோபம், ஈயாமை, செருக்கு இவை அழியாத பாவியாகிய எனக்கு, ஆயு வாயு வலம் வர லாலிப்பார்கள் போத கரும உபாயத்தான ஞான நெறி தனை ... ஆயுளும், பிராணவாயுவும் வலிமை வரும்படி அன்பு வைத்தவர்களுடைய அறிவோடு கூடிய தொழில்களின் உபாயத்தைக் காட்டும் ஞான வழியை, இனி மேல் அன்பா (இ)லக்கு ஆ(க்)க யோக ஜெப தப நேசித்து ... இனி மேல் என் மீது அன்பு வைத்து, (அந்த வழியே) குறியாக வைத்துக் கொண்டு, ஜெப தபம் இவைகளில் அன்பு வரும்படிச் செய்து, ஆரவார பரிபுரம் பாதத்து ஆளுமாறு திரு உள(ம்) நினையாதோ ... பேரொலி செய்யும் சிலம்பு அணிந்த உன் திருவடியில் என்னை ஆண்டு கொண்டு ஆளுமாறு நினைந்து அருளக் கூடாதோ? கூவிக் கோழி வாழி என மயில் ஆலித்து ஆலகாலம் என உயர் ... கோழியானது கூவி வாழிய என்று வாழ்த்தி, மயில் ஆரவாரம் செய்து விஷம் போல உயர்ந்து விளங்க, கூளிச் சேனை வான மிசை தனில் விளையாட ... சிவ கணங்களாகிய பூதகணச் சேனைகள் வானில் விளையாட, கோரத் தீர சூரனுடை வினை பாற ... அச்சம் தருபவனும் தீரனுமான சூரனுடைய முயற்சி சிந்தி அழிய, சீறல் ஏனபதி தனை கோலக்காலமாக அமர் செய்த வடிவேலா ... சீறிப் பெருங் கோபத்துடன் வந்த ஆதிவராகத்தை கூச்சலிட்டு அடங்க போர் செய்த கூரிய வேலனே, ஆவிச் சேல்கள் பூகம் மடல் இள பாளைத் தாறு கூறுபட ... குளத்தில் உள்ள சேல் மீன்கள் கமுக மரத்தின் ஏடுகளாகிய இளம் பாளைகளின் குலைகள் பிளவுபடும்படி, உயர் ஆலைச் சோலை மேலை வயலியில் உறைவோனே ... உயர்ந்து பாயும் கரும்புகள் நிறைந்த சோலையைக் கொண்ட, மேலை வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, ஆசைத் தோகைமார்கள் இசை உடன் ஆடிப் பாடி நாடி வரு ... ஆசை நிரம்பிய பெண்கள் இசைபாடிக் கொண்டு விரும்பி வந்து வணங்குகின்ற திரு ஆனைக் காவில் மேவி அருளிய பெருமாளே. ... திருவானைக்கா என்னும் ஊரில் விருப்புடன் வீற்றிருக்கும் பெருமாளே.