வேலைப் போல் விழி இட்டு மருட்டிகள்
காமக் (கு)ரோதம் விளைத்திடு துட்டிகள்
வீதிக்கே திரி பப்பர மட்டைகள் முலை யானை
மேல் இட்டே பொரவிட்ட பொறிச்சிகள்
மார்பைத் தோளை அசைத்து நடப்பிகள்
வேளுக்கு ஆண்மை செலுத்து சமர்த்திகள் களி கூரும்
சோலைக் கோகிலம் ஒத்த மொழிச்சிகள்
காசு அற்றாரை இதத்தில் ஒழிச்சிகள்
தோலைப் பூசி மினுக்கி உருக்கிகள் எவரேனும்
தோயப் பாயல் அழைக்கும் அவத்திகள்
மோகப் போகம் முயக்கி மயக்கிகள்
சூறைக் காரிகள் துக்க வலைப்படல் ஒழிவேனோ
காலைக்கே முழுகிக் குண திக்கினில்
ஆதித்யாய எனப் பகர் தர்ப்பணம்
காயத்ரீ செபம் அர்ச்சனையைச் செய்யும் முநிவோர்கள்
கானத்து ஆசிரமத்தினில் உத்தம
வேள்விச் சாலை அளித்தல் பொருட்டு எதிர்
காதத் தாடகையைக் கொல் க்ருபைக் கடல் மருகோனே
ஆலைச் சாறு கொதித்து வயல் தலை
பாயச் சாலி தழைத்து இரதித்து அமுதாக
தேவர்கள் மெச்சிய செய்ப்பதி உறை வேலா
ஆழித் தேர் மறுகில் பயில் மெய்த் திரு
நீறு இட்டான் மதிள் சுற்றிய பொன் திரு
ஆனைக்காவினில் அப்பர் ப்ரியப்படு பெருமாளே.
வேலைப் போன்று கூர்மையான கண் கொண்டு மயக்குபவர்கள், காமம், கோபம் இவைகளை உண்டு பண்ணும் துஷ்டப் பெண்கள், தெருக்களில் திரியும் பயனிலிகள், யானையைப் போல விளங்கும் மார்பகத்தை மேலே எதிர்த்துப் போர் செய்ய விடுகின்ற தந்திரவாதிகள், மார்பையும், தோளையும் அசைத்து நடப்பவர்கள், மன்மதனுக்கே ஆண்மைச் சக்தியைத் தருகின்ற சாமர்த்தியசாலிகள், மகிழ்ச்சி பொங்கும் சோலைக் குயில்கள் போன்ற பேச்சை உடையவர்கள், பொருள் இல்லாதவர்களைப் பக்குவமாக நீக்குபவர்கள், உடலின் தோலைப் பொடியால் பூசி மினுக்கி (கண்டோர்) மனதை உருக்குபவர்கள், யாரோடும் சிற்றின்ப சுகத்துக்காக படுக்கைக்கு அழைக்கும் கேடு கெட்டவர்கள், மோகானுபவத்தைத் தந்து இணைந்து மயங்க வைப்பவர்கள், இத்தகைய கொள்ளைக்காரிகளான விலைமாதருடைய துன்பம் தருவதான வலைக்குள் மாட்டிக்கொள்ளுதலை நீங்கேனோ? காலை நேரத்தில் குளித்து, கிழக்கு திசையை நோக்கி சூரிய பகவானே என்று துதிக்கும் நீர்க் கடன், காயத்திரி மந்திரம், அர்ச்சனை முதலியன செய்யும் முனிவர்கள் (வாழும்) காட்டில் ஆசிரமத்தில் மேன்மை வாய்ந்த யாக சாலையை (இடையூறின்றிக்) காக்கும் பொருட்டு, எதிர்த்து வந்த கொடியவளாகிய தாடகி என்னும் அரக்கியைக் கொன்ற கருணைக் கடலான திருமாலின் மருகனே, கரும்பாலைகளின் சாறு கொதித்து, வயலிடத்தே பாய்வதால், நெற் பயிர் செழுமையாக வளர்ந்து சுவை தருவதான அமுதம் ஆகின்ற, தேவர்கள் போற்றும் வயலூரில் வீற்றிருக்கும் வேலனே, சக்கரங்கள் கொண்ட தேர் வீதியில் வருகின்ற, உண்மை விளங்கும் திருநீறிட்டான் மதிள் சுற்றிலும் உள்ள, அழகிய திருவானைக்கா என்னும் தலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் விரும்பும் பெருமாளே.
வேலைப் போல் விழி இட்டு மருட்டிகள் ... வேலைப் போன்று கூர்மையான கண் கொண்டு மயக்குபவர்கள், காமக் (கு)ரோதம் விளைத்திடு துட்டிகள் ... காமம், கோபம் இவைகளை உண்டு பண்ணும் துஷ்டப் பெண்கள், வீதிக்கே திரி பப்பர மட்டைகள் முலை யானைமேல் இட்டே பொரவிட்ட பொறிச்சிகள் ... தெருக்களில் திரியும் பயனிலிகள், யானையைப் போல விளங்கும் மார்பகத்தை மேலே எதிர்த்துப் போர் செய்ய விடுகின்ற தந்திரவாதிகள், மார்பைத் தோளை அசைத்து நடப்பிகள் ... மார்பையும், தோளையும் அசைத்து நடப்பவர்கள், வேளுக்கு ஆண்மை செலுத்து சமர்த்திகள் ... மன்மதனுக்கே ஆண்மைச் சக்தியைத் தருகின்ற சாமர்த்தியசாலிகள், களி கூரும் சோலைக் கோகிலம் ஒத்த மொழிச்சிகள் ... மகிழ்ச்சி பொங்கும் சோலைக் குயில்கள் போன்ற பேச்சை உடையவர்கள், காசு அற்றாரை இதத்தில் ஒழிச்சிகள் ... பொருள் இல்லாதவர்களைப் பக்குவமாக நீக்குபவர்கள், தோலைப் பூசி மினுக்கி உருக்கிகள் ... உடலின் தோலைப் பொடியால் பூசி மினுக்கி (கண்டோர்) மனதை உருக்குபவர்கள், எவரேனும் தோயப் பாயல் அழைக்கும் அவத்திகள் ... யாரோடும் சிற்றின்ப சுகத்துக்காக படுக்கைக்கு அழைக்கும் கேடு கெட்டவர்கள், மோகப் போகம் முயக்கி மயக்கிகள் ... மோகானுபவத்தைத் தந்து இணைந்து மயங்க வைப்பவர்கள், சூறைக் காரிகள் துக்க வலைப்படல் ஒழிவேனோ ... இத்தகைய கொள்ளைக்காரிகளான விலைமாதருடைய துன்பம் தருவதான வலைக்குள் மாட்டிக்கொள்ளுதலை நீங்கேனோ? காலைக்கே முழுகிக் குண திக்கினில் ஆதித்யாய எனப் பகர் தர்ப்பணம் காயத்ரீ செபம் அர்ச்சனையைச் செய்யும் முநிவோர்கள் ... காலை நேரத்தில் குளித்து, கிழக்கு திசையை நோக்கி சூரிய பகவானே என்று துதிக்கும் நீர்க் கடன், காயத்திரி மந்திரம், அர்ச்சனை முதலியன செய்யும் முனிவர்கள் (வாழும்) கானத்து ஆசிரமத்தினில் உத்தம வேள்விச் சாலை அளித்தல் பொருட்டு ... காட்டில் ஆசிரமத்தில் மேன்மை வாய்ந்த யாக சாலையை (இடையூறின்றிக்) காக்கும் பொருட்டு, எதிர் காதத் தாடகையைக் கொல் க்ருபைக் கடல் மருகோனே ... எதிர்த்து வந்த கொடியவளாகிய தாடகி என்னும் அரக்கியைக் கொன்ற கருணைக் கடலான திருமாலின் மருகனே, ஆலைச் சாறு கொதித்து வயல் தலை பாயச் சாலி தழைத்து இரதித்து அமுதாக ... கரும்பாலைகளின் சாறு கொதித்து, வயலிடத்தே பாய்வதால், நெற் பயிர் செழுமையாக வளர்ந்து சுவை தருவதான அமுதம் ஆகின்ற, தேவர்கள் மெச்சிய செய்ப்பதி உறை வேலா ... தேவர்கள் போற்றும் வயலூரில் வீற்றிருக்கும் வேலனே, ஆழித் தேர் மறுகில் பயில் மெய்த் திரு நீறு இட்டான் மதிள் சுற்றிய ... சக்கரங்கள் கொண்ட தேர் வீதியில் வருகின்ற, உண்மை விளங்கும் திருநீறிட்டான் மதிள் சுற்றிலும் உள்ள, பொன் திரு ஆனைக்காவினில் அப்பர் ப்ரியப்படு பெருமாளே. ... அழகிய திருவானைக்கா என்னும் தலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் விரும்பும் பெருமாளே.