ஆனை வரிக் கோடு இள நீரப் பார முலைச் சார் அசை பட்டு ஆடை மறைத்து ஆடும் மலர்க் குழலார்கள்
ஆர வடத் தோடு அலையப் பேசி நகைத்து ஆசை பொருட்டு யாரையும் மெத்தாக மயக்கிடும் மோகர்
சோனை மழைப் பார விழித் தோகை மயில் சாதியர் கைத் தூது விடுத்தே பொருளைப் பறி மாதர் தோதகம் உற்று
ஏழ் நரகில் சேரும் அழற் காயனை உட் சோதி ஒளிப் பாதம் அளித்து அருள்வாயே
தானதனத்தீ திமிலை பேரிகை கொட்ட சம் மலைச் சாய கடல் சூரை வதைத்திடுவோனே
தாள இயல் சோதி நிறக் காலின் எழக் கோலி எடுத்(து) தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ஒரு சேயே
தேனின் இரசக் கோவை இதழ்ப் பூவை குறப் பாவை தனத்தே உருகிச் சேரும் அணிக் கதிர் வேலா
சீர் அருணைக் கோபுரம் உற்று ஆன புனத் தோகையும் மெய் தேவ மகட்கு ஓர் கருணைப் பெருமாளே.
யானையின் கோடுகள் உள்ள தந்தத்தையும், இளநீரையும் ஒத்த கனமான மார்பகங்களைச் சார்ந்து அசைகின்ற பட்டு ஆடையால் மறைத்து ஆடுகின்ற, மலர் அணிந்த கூந்தல் உடையவர்கள், முத்து மாலையும் தோடும் மிக அசையப் பேசியும், இனிதாகச் சிரித்தும், பொன்னைப் பெற வேண்டி எவரையும் வஞ்சனையுடன் மயக்குவிக்கும் காமிகள், பெரும் மழைமேகம் போன்ற அடர்ந்த கூந்தலும், அழகிய விழியும் கொண்ட தோகை மயில் போன்ற சாதியர், தம் இடத்தே உள்ள தூதுவர்களை அனுப்பி, பொருளை அபகரிக்கும் விலைமாதர்களின் வஞ்சகத்தில் பட்டு, ஏழு நரகத்தில் சேருதற்கு உரியவனும், தீக்கு இரையாகும் உடலை எடுத்தவனும் ஆகிய என்னை, ஜோதியுள் ஜோதியாய் விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிக. தானதனத்தீ என்று ஒலிக்கும் பறை வகைகள் முழங்க, நன்றாகக் கிரெளஞ்ச மலை அழிய, கடலில் ஒளிந்து நின்ற சூரனை வதைத்தவனே, தாளத்தின் இலக்கண விளக்கமானது ஒளி பொருந்திய தனது திருவடியின் மூலம் உண்டாகும்படி, ஒரு பாதத்தை வளைத்து எடுத்தும், மற்றொரு திருவடியைப் பூமியில் வைத்தும் நடமிடும் சிவபெருமானுடைய ஒப்பற்ற குழந்தையே, தேனின் சாறு போல் இனிக்கும், கொவ்வைப் பழம் போலச் சிவந்தும் உள்ள வாயிதழைக் கொண்ட, நாகணவாய்ப் புள் போன்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்புக்கு மனம் உருகி அவளிடம் சேர்ந்து, அழகிய ஒளி வீசும் வேலை உடையவனே, அழகிய திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருந்து, உன் மனதுக்கு உகந்த தினப் புன மயிலாகிய வள்ளிக்கும், (உன்னிடம்) மெய்யன்பு கொண்டிருக்கும் தேவயானைக்கும் ஒப்பற்ற கருணையைக் காட்டிய பெருமாளே.
ஆனை வரிக் கோடு இள நீரப் பார முலைச் சார் அசை பட்டு ஆடை மறைத்து ஆடும் மலர்க் குழலார்கள் ... யானையின் கோடுகள் உள்ள தந்தத்தையும், இளநீரையும் ஒத்த கனமான மார்பகங்களைச் சார்ந்து அசைகின்ற பட்டு ஆடையால் மறைத்து ஆடுகின்ற, மலர் அணிந்த கூந்தல் உடையவர்கள், ஆர வடத் தோடு அலையப் பேசி நகைத்து ஆசை பொருட்டு யாரையும் மெத்தாக மயக்கிடும் மோகர் ... முத்து மாலையும் தோடும் மிக அசையப் பேசியும், இனிதாகச் சிரித்தும், பொன்னைப் பெற வேண்டி எவரையும் வஞ்சனையுடன் மயக்குவிக்கும் காமிகள், சோனை மழைப் பார விழித் தோகை மயில் சாதியர் கைத் தூது விடுத்தே பொருளைப் பறி மாதர் தோதகம் உற்று ... பெரும் மழைமேகம் போன்ற அடர்ந்த கூந்தலும், அழகிய விழியும் கொண்ட தோகை மயில் போன்ற சாதியர், தம் இடத்தே உள்ள தூதுவர்களை அனுப்பி, பொருளை அபகரிக்கும் விலைமாதர்களின் வஞ்சகத்தில் பட்டு, ஏழ் நரகில் சேரும் அழற் காயனை உட் சோதி ஒளிப் பாதம் அளித்து அருள்வாயே ... ஏழு நரகத்தில் சேருதற்கு உரியவனும், தீக்கு இரையாகும் உடலை எடுத்தவனும் ஆகிய என்னை, ஜோதியுள் ஜோதியாய் விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிக. தானதனத்தீ திமிலை பேரிகை கொட்ட சம் மலைச் சாய கடல் சூரை வதைத்திடுவோனே ... தானதனத்தீ என்று ஒலிக்கும் பறை வகைகள் முழங்க, நன்றாகக் கிரெளஞ்ச மலை அழிய, கடலில் ஒளிந்து நின்ற சூரனை வதைத்தவனே, தாள இயல் சோதி நிறக் காலின் எழக் கோலி எடுத்(து) தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ஒரு சேயே ... தாளத்தின் இலக்கண விளக்கமானது ஒளி பொருந்திய தனது திருவடியின் மூலம் உண்டாகும்படி, ஒரு பாதத்தை வளைத்து எடுத்தும், மற்றொரு திருவடியைப் பூமியில் வைத்தும் நடமிடும் சிவபெருமானுடைய ஒப்பற்ற குழந்தையே, தேனின் இரசக் கோவை இதழ்ப் பூவை குறப் பாவை தனத்தே உருகிச் சேரும் அணிக் கதிர் வேலா ... தேனின் சாறு போல் இனிக்கும், கொவ்வைப் பழம் போலச் சிவந்தும் உள்ள வாயிதழைக் கொண்ட, நாகணவாய்ப் புள் போன்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்புக்கு மனம் உருகி அவளிடம் சேர்ந்து, அழகிய ஒளி வீசும் வேலை உடையவனே, சீர் அருணைக் கோபுரம் உற்று ஆன புனத் தோகையும் மெய் தேவ மகட்கு ஓர் கருணைப் பெருமாளே. ... அழகிய திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருந்து, உன் மனதுக்கு உகந்த தினப் புன மயிலாகிய வள்ளிக்கும், (உன்னிடம்) மெய்யன்பு கொண்டிருக்கும் தேவயானைக்கும் ஒப்பற்ற கருணையைக் காட்டிய பெருமாளே.