இறுகு மணி முலை மருவு தரளமும் எரியும் உமிழ் மதி நிலவாலே
இர(ரா)வி எனது உயிர் கவர வரு குழல் இசையில் உறு கடல் அலையாலே
தறுகண் ரதி பதி மதனன் விடு கொடு சரமில் எளியெனும் அழியாதே
தருணம் மணி பொழில் அருணை நகர் உறை சயிலம் மிசையினில் வரவேணும்
முறுகு திரி புரம் முறுகு கனல் எழ முறுவல் உடையவர் குரு நாதா
முடிய கொடு முடி அசுரர் பொடிபட முடுகு மரகத மயில் வீரா
குறவர் மட மகள் அமுத கனதன குவடு படும் ஒரு திரு மார்பா
கொடிய சுடர் இலை தனையும் எழு கடல் குறுக விடவல பெருமாளே.
நெருங்கி அழுத்தமாயுள்ள அழகிய மார்பின் மீதுள்ள முத்து மாலை கூட தீயை உமிழும்படி காய்கின்ற சந்திரனுடைய நிலா ஒளியாலும், என்னை வருத்தி அறுத்து எனது உயிரை அபகரிக்க எழுகின்ற புல்லாங்குழலின் இசையாலும், ஒலிக்கும் கடலின் அலையாலும், கொடியவனும், ரதியின் கணவனும் ஆகிய மன்மதன் செலுத்திய கொடிய பாணத்தாலும், எளியவளாகிய நான் அழிந்து போகாமல், தக்க சமயத்தில், அழகிய சோலைகளை உடைய திரு அண்ணாமலை நகரிலுள்ள மலை மீது வந்தருள வேண்டும். கடுமை வாய்ந்த திரிபுரங்களின் தெருக்களில் நெருப்பு எழும்படி புன் சிரிப்புச் சிரித்த சிவபெருமானுக்கு குரு நாதனே, எல்லா மலை உச்சிகளிலும் வாசம் செய்த அசுரர்கள் பொடிபட்டு அழியும்படி செலுத்திய பச்சை நிறம் கொண்ட மயில் வீரனே, வேடர்களின் கபடமற்ற மகளாகிய வள்ளியின் அமுதம் பொதிந்த மார்பகங்களாகிய மலைகள் தாக்கும் ஒப்பற்ற அழகிய மார்பனே, உக்கிரமான, ஒளி வாய்ந்த இலை ஒத்த வேலை ஏழு கடல்களும் வற்றும்படிச் செலுத்த வல்ல பெருமாளே.
இறுகு மணி முலை மருவு தரளமும் எரியும் உமிழ் மதி நிலவாலே ... நெருங்கி அழுத்தமாயுள்ள அழகிய மார்பின் மீதுள்ள முத்து மாலை கூட தீயை உமிழும்படி காய்கின்ற சந்திரனுடைய நிலா ஒளியாலும், இர(ரா)வி எனது உயிர் கவர வரு குழல் இசையில் உறு கடல் அலையாலே ... என்னை வருத்தி அறுத்து எனது உயிரை அபகரிக்க எழுகின்ற புல்லாங்குழலின் இசையாலும், ஒலிக்கும் கடலின் அலையாலும், தறுகண் ரதி பதி மதனன் விடு கொடு சரமில் எளியெனும் அழியாதே ... கொடியவனும், ரதியின் கணவனும் ஆகிய மன்மதன் செலுத்திய கொடிய பாணத்தாலும், எளியவளாகிய நான் அழிந்து போகாமல், தருணம் மணி பொழில் அருணை நகர் உறை சயிலம் மிசையினில் வரவேணும் ... தக்க சமயத்தில், அழகிய சோலைகளை உடைய திரு அண்ணாமலை நகரிலுள்ள மலை மீது வந்தருள வேண்டும். முறுகு திரி புரம் முறுகு கனல் எழ முறுவல் உடையவர் குரு நாதா ... கடுமை வாய்ந்த திரிபுரங்களின் தெருக்களில் நெருப்பு எழும்படி புன் சிரிப்புச் சிரித்த சிவபெருமானுக்கு குரு நாதனே, முடிய கொடு முடி அசுரர் பொடிபட முடுகு மரகத மயில் வீரா ... எல்லா மலை உச்சிகளிலும் வாசம் செய்த அசுரர்கள் பொடிபட்டு அழியும்படி செலுத்திய பச்சை நிறம் கொண்ட மயில் வீரனே, குறவர் மட மகள் அமுத கனதன குவடு படும் ஒரு திரு மார்பா ... வேடர்களின் கபடமற்ற மகளாகிய வள்ளியின் அமுதம் பொதிந்த மார்பகங்களாகிய மலைகள் தாக்கும் ஒப்பற்ற அழகிய மார்பனே, கொடிய சுடர் இலை தனையும் எழு கடல் குறுக விடவல பெருமாளே. ... உக்கிரமான, ஒளி வாய்ந்த இலை ஒத்த வேலை ஏழு கடல்களும் வற்றும்படிச் செலுத்த வல்ல பெருமாளே.