கமல முகப் பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழிக் குழல் கார் போல்
கதிர் தரள் ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும்
குமரி தனத் திதலை மலைக்கு இசலி இணைக் கலசம் எனக் குவி முலை சற்று அசைய மணிக் கலன் ஆட
கொடி இடை பட்டு உடை நடை பொன் சரண மயில் கமனம் எனக் குனகி பொருள் பறி (ப்) பவருக்கு உறவாமோ
திமிலை உடுக்கு உடன் முரசு பறை திமிதித் திமிதிம் எனட் டிமி டிமி டிட் டிகுர் திமிதித் ஒலி தாளம்
செககண செக் கண கதறத் திடுதிடு எனக் கொடு முடி எண் திகை சிலை பட்டு உவரி பட
சிலை கோடித் துமிலம் உடற்று அசுரர் முடி பொடி பட ரத்தம் உள் பெருக
தொகு தசை தொட்டு அலகை உ(ண்)ணத் தொடும் வேலா
துவனி தினைப் புனம் மருவி குற மகளைக் களவு மயல் சுகமொடு அணைத்த அருண கிரிப் பெருமாளே.
தாமரை போன்ற முகமும், பிறைச் சந்திரனையும் அழகிய வில்லையும் போன்ற நெற்றியும் புருவமும், மிகவும் உறுதியான அம்பையும் நல்ல மீனைப் போன்றதும் ஆகிய அழகிய சுழலும் கண்களும், மேகம் போன்ற கூந்தலும், ஒளி பொருந்திய முத்தை ஒக்கும் பற்களும், கமுகின் கிளையை ஒத்த கழுத்தும், மூங்கிலை ஒத்த மென்மையான புயங்களும், தாமரையை ஒக்கும் கையில் கிளியின் (மூக்கை) ஒக்கும் விரலின் சிவந்த நகங்களும், பருவப் பெண்ணின் தேமல் படர்ந்த மார்பகம் மலையுடன் போட்டியிட்டு, இரண்டு குடங்கள் போல விளங்க, குவிந்துள்ள அந்த மார்பகம் சிறிது அசையவும், ரத்தின ஆபரணங்கள் ஆடவும், கொடி போன்ற இடையில் பட்டாடையுடன், அழகிய பாதங்களின் நடை மயில் செல்வது போல விளங்க, கொஞ்சிப் பேசிப் பொருளை அபகரிக்கும் பொது மகளிர்களின் கூட்டுறவு எனக்கு ஆகுமோ? திமிலை, உடுக்கை முதலிய பறை வகைகள் திமிதித் திமிதிம் என்றும் டிமி டிமி டிட் டிகுர் திமிதித் என்றும் பல விதமான தாளங்களில் ஒலிகளைச் செய்யவும், செககண செக்கண என்ற பெரும் ஒலியை எழுப்பவும், திடுதிடு என்று சிகரங்களை உடைய மலைகள் எட்டுத் திசைகளிலும் அழிபடவும், கடல் கலங்கவும், வில்லை வளைத்து, பெரிய ஆரவரத்துடன் போர் புரிந்த அசுரர்களின் தலைகள் பொடிபட, ரத்தம் போர்க்களத்தில் உள்ள இடம் எல்லாம் பெருக, விழுந்து கூடியுள்ள மாமிசங்களைக் கொத்தி பேய்கள் உண்ணும்படி வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, (பட்சி வகைகளின்) ஒலி நிறைந்த தினைப் புனத்துக்குச் சென்று, குற மகள் வள்ளியை களவு வழியில் மோக இன்பத்துடன் தழுவியனே, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
கமல முகப் பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழிக் குழல் கார் போல் ... தாமரை போன்ற முகமும், பிறைச் சந்திரனையும் அழகிய வில்லையும் போன்ற நெற்றியும் புருவமும், மிகவும் உறுதியான அம்பையும் நல்ல மீனைப் போன்றதும் ஆகிய அழகிய சுழலும் கண்களும், மேகம் போன்ற கூந்தலும், கதிர் தரள் ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும் ... ஒளி பொருந்திய முத்தை ஒக்கும் பற்களும், கமுகின் கிளையை ஒத்த கழுத்தும், மூங்கிலை ஒத்த மென்மையான புயங்களும், தாமரையை ஒக்கும் கையில் கிளியின் (மூக்கை) ஒக்கும் விரலின் சிவந்த நகங்களும், குமரி தனத் திதலை மலைக்கு இசலி இணைக் கலசம் எனக் குவி முலை சற்று அசைய மணிக் கலன் ஆட ... பருவப் பெண்ணின் தேமல் படர்ந்த மார்பகம் மலையுடன் போட்டியிட்டு, இரண்டு குடங்கள் போல விளங்க, குவிந்துள்ள அந்த மார்பகம் சிறிது அசையவும், ரத்தின ஆபரணங்கள் ஆடவும், கொடி இடை பட்டு உடை நடை பொன் சரண மயில் கமனம் எனக் குனகி பொருள் பறி (ப்) பவருக்கு உறவாமோ ... கொடி போன்ற இடையில் பட்டாடையுடன், அழகிய பாதங்களின் நடை மயில் செல்வது போல விளங்க, கொஞ்சிப் பேசிப் பொருளை அபகரிக்கும் பொது மகளிர்களின் கூட்டுறவு எனக்கு ஆகுமோ? திமிலை உடுக்கு உடன் முரசு பறை திமிதித் திமிதிம் எனட் டிமி டிமி டிட் டிகுர் திமிதித் ஒலி தாளம் ... திமிலை, உடுக்கை முதலிய பறை வகைகள் திமிதித் திமிதிம் என்றும் டிமி டிமி டிட் டிகுர் திமிதித் என்றும் பல விதமான தாளங்களில் ஒலிகளைச் செய்யவும், செககண செக் கண கதறத் திடுதிடு எனக் கொடு முடி எண் திகை சிலை பட்டு உவரி பட ... செககண செக்கண என்ற பெரும் ஒலியை எழுப்பவும், திடுதிடு என்று சிகரங்களை உடைய மலைகள் எட்டுத் திசைகளிலும் அழிபடவும், கடல் கலங்கவும், சிலை கோடித் துமிலம் உடற்று அசுரர் முடி பொடி பட ரத்தம் உள் பெருக ... வில்லை வளைத்து, பெரிய ஆரவரத்துடன் போர் புரிந்த அசுரர்களின் தலைகள் பொடிபட, ரத்தம் போர்க்களத்தில் உள்ள இடம் எல்லாம் பெருக, தொகு தசை தொட்டு அலகை உ(ண்)ணத் தொடும் வேலா ... விழுந்து கூடியுள்ள மாமிசங்களைக் கொத்தி பேய்கள் உண்ணும்படி வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, துவனி தினைப் புனம் மருவி குற மகளைக் களவு மயல் சுகமொடு அணைத்த அருண கிரிப் பெருமாளே. ... (பட்சி வகைகளின்) ஒலி நிறைந்த தினைப் புனத்துக்குச் சென்று, குற மகள் வள்ளியை களவு வழியில் மோக இன்பத்துடன் தழுவியனே, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.