கமல மொட்டைக் கட்டு அழித்துக் குமிழியை நிலை குலைத்துப் பொன் குடத்தைத் தமனிய கலச வர்க்கத்தைத் தகர்த்து
குலை அற இளநீரைக் கறுவி வட்டைப் பின் துரத்திப் பொருது அபசயம் விளைத்துச் செப்பு அடித்துக் குலவிய கரி மருப்பைப் புக்கு ஒடித்து
திறல் மதன் அபிஷேகம் அமலர் நெற்றிக் கண் தழற்குள் பொடி செய்து அதிக சக்ரப் புள் பறக்கக் கொடுமையில் அடல் படைத்து அச்சப்படுத்தி
சபதமொடு இரு தாளம் அறைதல் கற்பித்துப் பொருப்பைப் பரவிய சிறகு அறுப்பித்துக் கதிர்த்துப் புடைபடும் அபிநவ சித்ரத் தனத்துத் திருடிகள் உறவு ஆமோ
தமரம் மிக்குத் திக்கு அதிர்க்கப் பல பறை தொகுதொகுக் குத்தொத் தொகுக்குத் தொகுதொகு தரிகிடத் தத்தத் தரிக்கத் தரிகிட என ஓதி
சவடு உறப் பக்கப் பழு ஒத்திப் புகை எழ விழிகள் உள் செக்கச் சிவத்துக் குறளிகள் தசைகள் பட்சித்துக் களித்துக் கழுதொடு கழுகு ஆட
அமலை உற்றுக் கொக்கரித்துப் படுகள அசுர ரத்தத்தில் குளித்துத் திமி என அடி நடித்திட்டு இட்டு இடித்துப் பொருதிடு மயிலோனே
அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியில் உலவு மெய் ப்ரத்யக்ஷ நல் சற் குருபர
அருணையில் சித்தித்து எனக்குத் தெளிவு அருள் பெருமாளே.
தாமரையின் மொட்டை அழகை இழக்கச் செய்து, நீர்க் குமிழியை நிலை குலைந்து உருவு இழக்கச் செய்து, தங்கக் குடத்தையும் பொன்னாலாகிய கலசக் கூட்டங்களையும் நொறுங்கச் செய்து, குலை குலையாயிருக்கும் அழகு ஒழியும்படி இளநீரைக் கோபித்து, சூதாடும் சொக்கட்டான் காய்களைப் பின்னாலே துரத்தி சண்டை செய்து தோல்வி உறச் செய்து, சிமிழை வேலைப்பாடு செய்பவர்கள் அடித்து உருவாக்கி, விளங்கிய யானையின் தந்தத்தைப் போய் ஒடித்து, சக்தி வாய்ந்த மன்மதனுடைய மகுடத்தை சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணின் நெருப்பில் பொடி செய்து, அதிக தூரத்தில் உள்ள சக்ரவாகப் பறவை பறந்து போகும்படி செய்து, கடுமையான வலிமை கொண்ட அதனைப் பயப்படும்படி செய்து, சப்தத்துடனே இரண்டு தாளங்கள் அறைந்து மோதிக்கொள்ளும்படிச் செய்து, மலைகளின் பரந்த இறகுகளை அறும்படிச் செய்து, வளர்ச்சி உற்ற பக்கத்து இடமெல்லாம் பரவி புதுமையும் அழகு உள்ளதுமான தனங்களை உடைய வஞ்சனை உடைய விலைமாதர்களின் உறவு நல்லதாகுமா? ஒலி மிகுத்த திசைகள் அதிரும்படி பல வகையான பறைகள் தொகுதொகுக் குத்தொத் தொகுக்குத் தொகுதொகு தரிகிடத் தத்தத் தரிக்கத் தரிகிட என்று ஒலி செய்ய, பக்கத்து விலா எலும்புகள் நெரிய முடக்கிய கைகளை தாக்கிக் கூத்தாடி, புகை எழும்படி கண்கள் உள்ளே மிகச் சிவந்து மாய வித்தைச் செய்யும் பேய் வகைகள் மாமிசத்தை உண்டு மகிழ்ச்சி அடைய, பேய்களும் கழுகுகளும் ஆட, ஆரவாரம் செய்து கொக்கரித்தும் போர்க் களத்தில் அசுரர்களின் ரத்தங்களில் குளித்தும் திமி என்ற ஒலியுடன் பாதங்களை வைத்து நடனம் செய்து இடித்துத் தகர்த்தும் சண்டையிடும் மயில் மீது அமர்ந்தவனே, மிக அழகு உடைய அலங்காரமான பச்சை நிறமான மயிலின் மீது உலவுகின்ற, சத்தியம் வெளிப்படையாக விளங்கும் நல்ல சற் குருநாதனே, திருவண்ணா மலையில் நான் நற் கதி கூடி அனுகூலம் அடையும்படி எனக்கு ஞானத்தை அருளிய பெருமாளே.
கமல மொட்டைக் கட்டு அழித்துக் குமிழியை நிலை குலைத்துப் பொன் குடத்தைத் தமனிய கலச வர்க்கத்தைத் தகர்த்து ... தாமரையின் மொட்டை அழகை இழக்கச் செய்து, நீர்க் குமிழியை நிலை குலைந்து உருவு இழக்கச் செய்து, தங்கக் குடத்தையும் பொன்னாலாகிய கலசக் கூட்டங்களையும் நொறுங்கச் செய்து, குலை அற இளநீரைக் கறுவி வட்டைப் பின் துரத்திப் பொருது அபசயம் விளைத்துச் செப்பு அடித்துக் குலவிய கரி மருப்பைப் புக்கு ஒடித்து ... குலை குலையாயிருக்கும் அழகு ஒழியும்படி இளநீரைக் கோபித்து, சூதாடும் சொக்கட்டான் காய்களைப் பின்னாலே துரத்தி சண்டை செய்து தோல்வி உறச் செய்து, சிமிழை வேலைப்பாடு செய்பவர்கள் அடித்து உருவாக்கி, விளங்கிய யானையின் தந்தத்தைப் போய் ஒடித்து, திறல் மதன் அபிஷேகம் அமலர் நெற்றிக் கண் தழற்குள் பொடி செய்து அதிக சக்ரப் புள் பறக்கக் கொடுமையில் அடல் படைத்து அச்சப்படுத்தி ... சக்தி வாய்ந்த மன்மதனுடைய மகுடத்தை சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணின் நெருப்பில் பொடி செய்து, அதிக தூரத்தில் உள்ள சக்ரவாகப் பறவை பறந்து போகும்படி செய்து, கடுமையான வலிமை கொண்ட அதனைப் பயப்படும்படி செய்து, சபதமொடு இரு தாளம் அறைதல் கற்பித்துப் பொருப்பைப் பரவிய சிறகு அறுப்பித்துக் கதிர்த்துப் புடைபடும் அபிநவ சித்ரத் தனத்துத் திருடிகள் உறவு ஆமோ ... சப்தத்துடனே இரண்டு தாளங்கள் அறைந்து மோதிக்கொள்ளும்படிச் செய்து, மலைகளின் பரந்த இறகுகளை அறும்படிச் செய்து, வளர்ச்சி உற்ற பக்கத்து இடமெல்லாம் பரவி புதுமையும் அழகு உள்ளதுமான தனங்களை உடைய வஞ்சனை உடைய விலைமாதர்களின் உறவு நல்லதாகுமா? தமரம் மிக்குத் திக்கு அதிர்க்கப் பல பறை தொகுதொகுக் குத்தொத் தொகுக்குத் தொகுதொகு தரிகிடத் தத்தத் தரிக்கத் தரிகிட என ஓதி ... ஒலி மிகுத்த திசைகள் அதிரும்படி பல வகையான பறைகள் தொகுதொகுக் குத்தொத் தொகுக்குத் தொகுதொகு தரிகிடத் தத்தத் தரிக்கத் தரிகிட என்று ஒலி செய்ய, சவடு உறப் பக்கப் பழு ஒத்திப் புகை எழ விழிகள் உள் செக்கச் சிவத்துக் குறளிகள் தசைகள் பட்சித்துக் களித்துக் கழுதொடு கழுகு ஆட ... பக்கத்து விலா எலும்புகள் நெரிய முடக்கிய கைகளை தாக்கிக் கூத்தாடி, புகை எழும்படி கண்கள் உள்ளே மிகச் சிவந்து மாய வித்தைச் செய்யும் பேய் வகைகள் மாமிசத்தை உண்டு மகிழ்ச்சி அடைய, பேய்களும் கழுகுகளும் ஆட, அமலை உற்றுக் கொக்கரித்துப் படுகள அசுர ரத்தத்தில் குளித்துத் திமி என அடி நடித்திட்டு இட்டு இடித்துப் பொருதிடு மயிலோனே ... ஆரவாரம் செய்து கொக்கரித்தும் போர்க் களத்தில் அசுரர்களின் ரத்தங்களில் குளித்தும் திமி என்ற ஒலியுடன் பாதங்களை வைத்து நடனம் செய்து இடித்துத் தகர்த்தும் சண்டையிடும் மயில் மீது அமர்ந்தவனே, அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியில் உலவு மெய் ப்ரத்யக்ஷ நல் சற் குருபர ... மிக அழகு உடைய அலங்காரமான பச்சை நிறமான மயிலின் மீது உலவுகின்ற, சத்தியம் வெளிப்படையாக விளங்கும் நல்ல சற் குருநாதனே, அருணையில் சித்தித்து எனக்குத் தெளிவு அருள் பெருமாளே. ... திருவண்ணா மலையில் நான் நற் கதி கூடி அனுகூலம் அடையும்படி எனக்கு ஞானத்தை அருளிய பெருமாளே.