சிவம் என்கின்ற தலைவியுடன் இன்ப நுகர்ச்சி கொண்டவனாக, சிவஞானம் என்ற அமுதத்தை உண்டு அதனால் அறிவுப் பசி தீர்ந்து, விளங்கும் தலைவன் - தலைவி என்ற ஈருருவமும் ஒரே உருவமாய் எட்டுத் திசையிலுள்ளவர் சுகித்து உணர்பவன் இவன்தான் என்று திருமால், பிரமன், தேவர்கள் அனைவரும் கூறி, இவன் இளையவன் (முருகன்) என வியந்து கூற, வேதமும் அவ்வாறே என்று ஆமோதித்துக் கூற, சிவபிரானிடத்தில் வேண்டி, யான் (உன்னைப் போல்) விளையாடுவதற்காக அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக. மிகவும் உலகங்கள் யாவும் இது முறையாகுமா என்று ஓலமிட, நெருப்பை வீசும் வேலுடன் சென்று அசுரர்களின் தலைகள் பொடிபடும்படி, ஏழு கடல்களும் தூள்படும்படி, சிறந்த தவத்தினர் வாழ்வுறுமாறு அந்த வேலைச் செலுத்தியவனே, மனம் கவரும் மலரின் அழகுடையவளும், குறப்பெண்ணும் ஆகிய வள்ளியிடம் ஆசை கொள்வது உன் கடமை என்று அவளை அணைந்த மார்பனே, கடைப்பட்டவனாகிய என் துன்பம் தூள்படவும், என் நோய் தொலையவும் (அருளி), அக்கினிப் பெருமலையாம் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.