செம் சொல் பண்(பு) பெற்றிடு குட மா முலை கும்பத் தந்திக் குவடு என வாலிய
தெந்தப் பந்தித் தரளம் அதாம் என இடர் ஆவி சிந்திக் கந்தித்து இடு களையாம் உனது அங்கத்து அம் பொற்பு எது என ஓதுவ(து)
திண் துப்பும் தித்திடு கனி தானும் உன் இதழாமோ
மஞ்சு ஒக்கும் கொத்து அளகம் எனா மிடை கஞ்சத்து இன்புற்று இரு திருவே இள வஞ்சிக் கொம்பு ஒப்பு எனு(ம்) மயிலே
என முறை ஏய வந்தித்து இந்தப் படி மடவாரொடு கொஞ்சிக் கெஞ்சித் தினம் அவர் தாள் தொழு மந்தப் புந்திக் கசடன் எ(ந்)நாள் உனது அடி சேர்வேன்
நஞ்சைக் கண்டத்து இடுபவர் ஆரொடு திங்கள் பிஞ்சு அக்கு அரவு அணி வேணியர் நம்பர்
செம் பொன் பெயர் அசுரேசனை உகிராலே நந்தக் கொந்திச் சொரி குடல் சோர் வர கம்பத்து நந்தி எழு நர கேசரி நஞ்சக் குண்டைக்கு ஒரு வழி ஏது என மிக நாடி
வெஞ்சச் சிம்புள் சொருபம் அது ஆனவர் பங்கில் பெண் கற்புடைய பெண் நாயகி விந்தைச் செம் கைப் பொலி சுத
வேடுவர் புன(ம்) மீதே வெண்டித் தங்கித் திரி கிழவா
அதி துங்கத் துங்கக் கிரி அருணாபுரி வெம் கண் சிங்கத்து அடி மயில் ஏறிய பெருமாளே.
(முதல் 11 வரிகள் வேசைகளை வர்ணிப்பது கூறப்படுகிறது). செம்மையான சொற்களின் தகுதியைப் பெற்றுள்ள குடம் போன்ற பருத்த மார்பகம் ஒப்பிடுங்கால் கும்ப கலசம், யானை, மலை என விளங்கியும், வெண்மை நிறம் கொண்ட பற்களின் வரிசை முத்துப் போல் விளங்கியும், துன்பத்தில் என் உயிரை எடுத்து, மணம் வீச வல்ல களை வாய்ந்தனவாய் உள்ள உன்னுடைய அங்கங்களின் அழகிய பொலிவுக்கு எதை நான் உவமையாகக் கூறுவது? திண்மையான பவளமும், தித்திப்பு உள்ள பழமும் உன் வாயிதழுக்கு நிகர் ஆகுமோ? மேகத்தை ஒக்கும் திரண்டு நிறைந்துள்ள கூந்தல் என்றெல்லாம் கூறி, நெருங்கிய தாமரையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் லக்ஷ்மியே, இளமை வாய்ந்த வஞ்சிக் கொடிக்கு ஒப்பான மயில் போன்றவளே, என்றெல்லாம் முறை பொருந்த வந்தனைப் பேச்சுக்கள் பேசி, இவ்வாறு விலைமாதர்களுடன் கொஞ்சியும், கெஞ்சிப் பேசியும், தினமும் அவர்களின் திருவடியைத் தொழுகின்ற மழுங்கின அறிவுடைய குற்றமுள்ளவனாகிய நான் உனது திருவடியை என்று சேர்வேன்? விஷத்தைக் கழுத்தில் தரிப்பவர், ஆத்தி மாலையோடு, இளம் பிறையையும், எலும்பையும், பாம்பையும் அணிந்துள்ள சடையினர் ஆகிய நம் சிவபெருமான், இரணியன் என்னும் பெயருள்ள அசுரனை நகத்தாலே அழிந்து போகும்படி குத்திக் கிழித்து, ரத்தம் சொரிந்து விழும் குடல் தளர்ச்சி உறும்படியாக தூணிலே தோன்றி வெளி வந்த நரசிம்ம மூர்த்தியின் வெறி நைந்து அடங்கிக் குறுகுவதற்கு வழி யாதென்று மிகவும் யோசித்து, கடுமை கொண்டவராய் சரபப் பட்சியின் வடிவம் கொண்டவராகிய சிவபிரானின் இடப் பாகத்தில் இடம் கொண்டவளும், கற்பு நிறைந்த பெண்களின் நாயகியுமாகிய பார்வதியின் அழகிய செங்கையில் விளங்கும் குழந்தையே, வேடர்களின் தினைப் புனத்தில் களைப்பு உற்று தங்கித் திரிகின்ற கிழவனே, மிக உயர்ந்ததும், பரிசுத்தமானதுமான மலை உள்ள திருஅண்ணாமலை என்னும் ஊரில், விரும்பத்தக்க கண்களை உடைய சிங்காசனம் போன்ற மயிலின் மேல் ஏறிய பெருமாளே.
(முதல் 11 வரிகள் வேசைகளை வர்ணிப்பது கூறப்படுகிறது). செம் சொல் பண்(பு) பெற்றிடு குட மா முலை கும்பத் தந்திக் குவடு என வாலிய ... செம்மையான சொற்களின் தகுதியைப் பெற்றுள்ள குடம் போன்ற பருத்த மார்பகம் ஒப்பிடுங்கால் கும்ப கலசம், யானை, மலை என விளங்கியும், தெந்தப் பந்தித் தரளம் அதாம் என இடர் ஆவி சிந்திக் கந்தித்து இடு களையாம் உனது அங்கத்து அம் பொற்பு எது என ஓதுவ(து) ... வெண்மை நிறம் கொண்ட பற்களின் வரிசை முத்துப் போல் விளங்கியும், துன்பத்தில் என் உயிரை எடுத்து, மணம் வீச வல்ல களை வாய்ந்தனவாய் உள்ள உன்னுடைய அங்கங்களின் அழகிய பொலிவுக்கு எதை நான் உவமையாகக் கூறுவது? திண் துப்பும் தித்திடு கனி தானும் உன் இதழாமோ ... திண்மையான பவளமும், தித்திப்பு உள்ள பழமும் உன் வாயிதழுக்கு நிகர் ஆகுமோ? மஞ்சு ஒக்கும் கொத்து அளகம் எனா மிடை கஞ்சத்து இன்புற்று இரு திருவே இள வஞ்சிக் கொம்பு ஒப்பு எனு(ம்) மயிலே ... மேகத்தை ஒக்கும் திரண்டு நிறைந்துள்ள கூந்தல் என்றெல்லாம் கூறி, நெருங்கிய தாமரையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் லக்ஷ்மியே, இளமை வாய்ந்த வஞ்சிக் கொடிக்கு ஒப்பான மயில் போன்றவளே, என முறை ஏய வந்தித்து இந்தப் படி மடவாரொடு கொஞ்சிக் கெஞ்சித் தினம் அவர் தாள் தொழு மந்தப் புந்திக் கசடன் எ(ந்)நாள் உனது அடி சேர்வேன் ... என்றெல்லாம் முறை பொருந்த வந்தனைப் பேச்சுக்கள் பேசி, இவ்வாறு விலைமாதர்களுடன் கொஞ்சியும், கெஞ்சிப் பேசியும், தினமும் அவர்களின் திருவடியைத் தொழுகின்ற மழுங்கின அறிவுடைய குற்றமுள்ளவனாகிய நான் உனது திருவடியை என்று சேர்வேன்? நஞ்சைக் கண்டத்து இடுபவர் ஆரொடு திங்கள் பிஞ்சு அக்கு அரவு அணி வேணியர் நம்பர் ... விஷத்தைக் கழுத்தில் தரிப்பவர், ஆத்தி மாலையோடு, இளம் பிறையையும், எலும்பையும், பாம்பையும் அணிந்துள்ள சடையினர் ஆகிய நம் சிவபெருமான், செம் பொன் பெயர் அசுரேசனை உகிராலே நந்தக் கொந்திச் சொரி குடல் சோர் வர கம்பத்து நந்தி எழு நர கேசரி நஞ்சக் குண்டைக்கு ஒரு வழி ஏது என மிக நாடி ... இரணியன் என்னும் பெயருள்ள அசுரனை நகத்தாலே அழிந்து போகும்படி குத்திக் கிழித்து, ரத்தம் சொரிந்து விழும் குடல் தளர்ச்சி உறும்படியாக தூணிலே தோன்றி வெளி வந்த நரசிம்ம மூர்த்தியின் வெறி நைந்து அடங்கிக் குறுகுவதற்கு வழி யாதென்று மிகவும் யோசித்து, வெஞ்சச் சிம்புள் சொருபம் அது ஆனவர் பங்கில் பெண் கற்புடைய பெண் நாயகி விந்தைச் செம் கைப் பொலி சுத ... கடுமை கொண்டவராய் சரபப் பட்சியின் வடிவம் கொண்டவராகிய சிவபிரானின் இடப் பாகத்தில் இடம் கொண்டவளும், கற்பு நிறைந்த பெண்களின் நாயகியுமாகிய பார்வதியின் அழகிய செங்கையில் விளங்கும் குழந்தையே, வேடுவர் புன(ம்) மீதே வெண்டித் தங்கித் திரி கிழவா ... வேடர்களின் தினைப் புனத்தில் களைப்பு உற்று தங்கித் திரிகின்ற கிழவனே, அதி துங்கத் துங்கக் கிரி அருணாபுரி வெம் கண் சிங்கத்து அடி மயில் ஏறிய பெருமாளே. ... மிக உயர்ந்ததும், பரிசுத்தமானதுமான மலை உள்ள திருஅண்ணாமலை என்னும் ஊரில், விரும்பத்தக்க கண்களை உடைய சிங்காசனம் போன்ற மயிலின் மேல் ஏறிய பெருமாளே.