தலையை மழித்துச் சிவந்த துணியை அரைக்குப் புனைந்து
சடையை வளர்த்துப் புரிந்து புலி ஆடை
சதிரொடு உவப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து
தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு கலையை மிகுத்திட்டு அணிந்து
கரண வலைக்குள் புகுந்து
கதறு(ம்) நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே
கனக(ம்) இயற்றித் திரிந்து துவளும் எனைச் சற்று அறிந்து
கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே
அலை கடலில் கொக்கு அரிந்தும்
அரு வரையைப் பொட்டு எறிந்தும்
அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை
அருளொடு கைப்பற்றி வந்தும் அருண கிரி புக்கிருந்தும்
அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே
மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து
வறிது நகைத்திட்டு இருந்த சிவனார் தம் மதலை
புனத்தில் புகுந்து நர வடிவு உற்றுத் திரிந்து
மறமயிலைச் சுற்றிவந்த பெருமாளே.
தலையை மொட்டை அடித்தும், காவித் துணியை இடுப்பில் அணிந்தும், சடையை வளர்த்துக் கொண்டும், புலியின் தோல் ஆடையை பெருமையாக மகிழ்ச்சியோடு அணிந்தும், சாமர்த்தியமாக புதுப்புது கலைகளைக் கற்கத் தொடங்கியும், தவம் என்பதை அந்தச் சொல்லின் சப்தமளவே அறிந்தும் (சிறிதும் தவநிலை இல்லாமல்), விபூதியை உடல் முழுக்க மிகுத்துப் பூசியும், இந்திரியங்கள் விரித்த வலைக்குள் வேண்டுமென்றே அகப்பட்டும், கதறி வேதனைப்படும் நிலைக்கு உண்டான அழகுடனே (பொன் வேண்டி) இரச வாதத்தால் பொன்னை ஆக்கித் திரிந்து சோர்வடையும் என்னைக் கொஞ்சம் கவனித்து, என் கவலையை ஒழிக்க வேண்டி என் மேல் இரக்கம் கொண்டு அருள் புரிவாயாக. அலை வீசும் கடலில் மாமரமாகி நின்ற சூரனைப் பிளந்தும், அரிய கிரெளஞ்ச மலையைத் தூளாக்கியும், தேவர்கள் உலகத்தில் புகுந்தும், பெருமை வாய்ந்த தேவயானையை அருள் பாலித்து அவளைக் கைப்பற்றியும், திருவண்ணாமலையில் புகுந்து வீற்றிருந்தும், ஞானம் உள்ள பக்தர்களுக்கு இரங்கி அருள் செய்யும் இளையோனே, (மேரு) மலையை வில்லாக வளைத்து, பறக்கின்ற சக்தி வாய்ந்த திரிபுரங்களின் மீது கோபித்து, சற்றே சிரித்தவண்ணம் இருந்து (திரிபுரத்தை எரித்திட்ட) சிவபெருமானுடைய குழந்தையே, தினைப் புனத்தில் புகுந்து, அங்கே மனித உருவம் பெற்று, காதலனாகத் திரிந்து வேடர்கள் வளர்த்த மயில் போன்ற பெண்ணான வள்ளியை வளைத்து அபகரித்துக் கொண்டுவந்த பெருமாளே.
தலையை மழித்துச் சிவந்த துணியை அரைக்குப் புனைந்து ... தலையை மொட்டை அடித்தும், காவித் துணியை இடுப்பில் அணிந்தும், சடையை வளர்த்துப் புரிந்து புலி ஆடை ... சடையை வளர்த்துக் கொண்டும், புலியின் தோல் ஆடையை சதிரொடு உவப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து ... பெருமையாக மகிழ்ச்சியோடு அணிந்தும், சாமர்த்தியமாக புதுப்புது கலைகளைக் கற்கத் தொடங்கியும், தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு கலையை மிகுத்திட்டு அணிந்து ... தவம் என்பதை அந்தச் சொல்லின் சப்தமளவே அறிந்தும் (சிறிதும் தவநிலை இல்லாமல்), விபூதியை உடல் முழுக்க மிகுத்துப் பூசியும், கரண வலைக்குள் புகுந்து ... இந்திரியங்கள் விரித்த வலைக்குள் வேண்டுமென்றே அகப்பட்டும், கதறு(ம்) நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே ... கதறி வேதனைப்படும் நிலைக்கு உண்டான அழகுடனே கனக(ம்) இயற்றித் திரிந்து துவளும் எனைச் சற்று அறிந்து ... (பொன் வேண்டி) இரச வாதத்தால் பொன்னை ஆக்கித் திரிந்து சோர்வடையும் என்னைக் கொஞ்சம் கவனித்து, கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே ... என் கவலையை ஒழிக்க வேண்டி என் மேல் இரக்கம் கொண்டு அருள் புரிவாயாக. அலை கடலில் கொக்கு அரிந்தும் ... அலை வீசும் கடலில் மாமரமாகி நின்ற சூரனைப் பிளந்தும், அரு வரையைப் பொட்டு எறிந்தும் ... அரிய கிரெளஞ்ச மலையைத் தூளாக்கியும், அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை ... தேவர்கள் உலகத்தில் புகுந்தும், பெருமை வாய்ந்த தேவயானையை அருளொடு கைப்பற்றி வந்தும் அருண கிரி புக்கிருந்தும் ... அருள் பாலித்து அவளைக் கைப்பற்றியும், திருவண்ணாமலையில் புகுந்து வீற்றிருந்தும், அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே ... ஞானம் உள்ள பக்தர்களுக்கு இரங்கி அருள் செய்யும் இளையோனே, மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து ... (மேரு) மலையை வில்லாக வளைத்து, பறக்கின்ற சக்தி வாய்ந்த திரிபுரங்களின் மீது கோபித்து, வறிது நகைத்திட்டு இருந்த சிவனார் தம் மதலை ... சற்றே சிரித்தவண்ணம் இருந்து (திரிபுரத்தை எரித்திட்ட) சிவபெருமானுடைய குழந்தையே, புனத்தில் புகுந்து நர வடிவு உற்றுத் திரிந்து ... தினைப் புனத்தில் புகுந்து, அங்கே மனித உருவம் பெற்று, காதலனாகத் திரிந்து மறமயிலைச் சுற்றிவந்த பெருமாளே. ... வேடர்கள் வளர்த்த மயில் போன்ற பெண்ணான வள்ளியை வளைத்து அபகரித்துக் கொண்டுவந்த பெருமாளே.