போக கற்பக் கடவுள் பூருகத்தைப் புயலைப் பாரியைப் பொன் குவை உச்சிப் பொழுதில் ஈயும் போது உடைப் புத்திரரைப் போல ஒப்பிட்டு
உலகத்தோரை மெச்சிப் பிரியப் பட்டு மிடி போகத் த்யாக மெத்தத் தருதற்கு
ஆசு நல் சித்திர வித்தாரம் உள்பட்ட திருட்டுக் கவிகள் பாடித் தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு
அவர்கண் சேல் வலைப் பட்டு அடிமைப்பட்டு விடலாமோ
ஆகமப் பத்தரும் மற்று ஆரணச் சுத்தரும் உற்று ஆதரிக்கைக்கு
அருணைத் துப்பு மதில் சூழும் ஆடகச் சித்ர மணிக் கோபுரத்து உத்தர திக்காக வெற்றிக் கலபக் கற்கி அமர்வோனே
தோகையைப் பெற்ற இடப் பாகர் ஒற்றைப் பகழித் தூணி முட்டச் சுவற
திக்கில் எழு பாரச் சோதி வெற்பு எட்டும் உதிர்த்(து) தூளிதப் பட்டு அமிழச் சூரனைப் பட்டு உருவத் தொட்ட பெருமாளே.
விருப்பமான போகத்தை அளிக்கும் கற்பகமாகிய தெய்வ மரத்தையும், மேகத்தையும், பாரி வள்ளலையும், பொன் குவியலை உச்சி வேளையில் கொடுத்து வந்த தெய்வ மலரை வைத்திருந்த பிள்ளை (கர்ணனையும்) நிகர்ப்பாய் நீ என்று உவமை கூறி ஒப்பிட்டு, உலக மக்களை மெச்சி, அவர்கள் மீது அன்பைக் காட்டி, என் தரித்திரம் ஒழியும் பொருட்டு, கொடை பெரிதாக அவர்கள் தருவதற்காக, ஆசு கவிகள், நல்ல சித்திரக் கவிகள், வித்தாரக் கவிகள் ஆகிய திருட்டுக் கவிதைகள் அவர்கள் மீது பாடி, அங்ஙனம் பொருள் தேடி, பிடித்தமான அழகிய மாதர்களுக்குத் தந்து, அவர்களுடைய சேல் மீன் போன்ற கண் வலையில் பட்டு நான் அடிமைப்பட்டு விடலாமோ? ஆகமங்களைக் கற்ற பக்தர்களும், வேதங்களைப் பயின்ற பரிசுத்தர்களும் ஒருங்கு கூடி விரும்பிப் பணி செய்ய, திருஅண்ணாமலையில் பொலிவுள்ள மதில்கள் சூழும் பொன் மயமான விசித்திரமான அழகிய கோபுரத்தின் வடக்குப் பக்கத்தில், வெற்றி விளங்கும் தோகைக் குதிரையாகிய மயில் மீது வீற்றிருப்பவனே, மயில் போன்ற பார்வதியை இடப் பாகத்தில் கொண்ட சிவ பெருமானுக்கு (திரிபுர சம்ஹாரத்தின் போது) ஒரு அம்பாயிருந்த திருமாலின் அம்பறாத்தூணியாகிய கடல் அடியோடு வற்றும்படியும், திசைகளில் எழுந்துள்ள கனமான, ஒளி வீசும் எட்டு மலைகளும் உதிர்ந்து தூளாகி அமிழும்படியும், சூரன் மீது பட்டு உருவும்படியும் வேலைச் செலுத்திய பெருமாளே.
போக கற்பக் கடவுள் பூருகத்தைப் புயலைப் பாரியைப் பொன் குவை உச்சிப் பொழுதில் ஈயும் போது உடைப் புத்திரரைப் போல ஒப்பிட்டு ... விருப்பமான போகத்தை அளிக்கும் கற்பகமாகிய தெய்வ மரத்தையும், மேகத்தையும், பாரி வள்ளலையும், பொன் குவியலை உச்சி வேளையில் கொடுத்து வந்த தெய்வ மலரை வைத்திருந்த பிள்ளை (கர்ணனையும்) நிகர்ப்பாய் நீ என்று உவமை கூறி ஒப்பிட்டு, உலகத்தோரை மெச்சிப் பிரியப் பட்டு மிடி போகத் த்யாக மெத்தத் தருதற்கு ... உலக மக்களை மெச்சி, அவர்கள் மீது அன்பைக் காட்டி, என் தரித்திரம் ஒழியும் பொருட்டு, கொடை பெரிதாக அவர்கள் தருவதற்காக, ஆசு நல் சித்திர வித்தாரம் உள்பட்ட திருட்டுக் கவிகள் பாடித் தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு ... ஆசு கவிகள், நல்ல சித்திரக் கவிகள், வித்தாரக் கவிகள் ஆகிய திருட்டுக் கவிதைகள் அவர்கள் மீது பாடி, அங்ஙனம் பொருள் தேடி, பிடித்தமான அழகிய மாதர்களுக்குத் தந்து, அவர்கண் சேல் வலைப் பட்டு அடிமைப்பட்டு விடலாமோ ... அவர்களுடைய சேல் மீன் போன்ற கண் வலையில் பட்டு நான் அடிமைப்பட்டு விடலாமோ? ஆகமப் பத்தரும் மற்று ஆரணச் சுத்தரும் உற்று ஆதரிக்கைக்கு ... ஆகமங்களைக் கற்ற பக்தர்களும், வேதங்களைப் பயின்ற பரிசுத்தர்களும் ஒருங்கு கூடி விரும்பிப் பணி செய்ய, அருணைத் துப்பு மதில் சூழும் ஆடகச் சித்ர மணிக் கோபுரத்து உத்தர திக்காக வெற்றிக் கலபக் கற்கி அமர்வோனே ... திருஅண்ணாமலையில் பொலிவுள்ள மதில்கள் சூழும் பொன் மயமான விசித்திரமான அழகிய கோபுரத்தின் வடக்குப் பக்கத்தில், வெற்றி விளங்கும் தோகைக் குதிரையாகிய மயில் மீது வீற்றிருப்பவனே, தோகையைப் பெற்ற இடப் பாகர் ஒற்றைப் பகழித் தூணி முட்டச் சுவற ... மயில் போன்ற பார்வதியை இடப் பாகத்தில் கொண்ட சிவ பெருமானுக்கு (திரிபுர சம்ஹாரத்தின் போது) ஒரு அம்பாயிருந்த திருமாலின் அம்பறாத்தூணியாகிய கடல் அடியோடு வற்றும்படியும், திக்கில் எழு பாரச் சோதி வெற்பு எட்டும் உதிர்த்(து) தூளிதப் பட்டு அமிழச் சூரனைப் பட்டு உருவத் தொட்ட பெருமாளே. ... திசைகளில் எழுந்துள்ள கனமான, ஒளி வீசும் எட்டு மலைகளும் உதிர்ந்து தூளாகி அமிழும்படியும், சூரன் மீது பட்டு உருவும்படியும் வேலைச் செலுத்திய பெருமாளே.