விந்துப் புளகித இன்புற்று உருகிட சிந்திக் கருவினில் உண்ப அச் சிறு துளி விரித்த கமல மேல் தரித்து உள் ஒரு சுழி இரத்த குளிகையோடு உதித்து
வளர் மதி விள் துற்று அருள் பதி அருள் கொடு மிண்டிச் செயலில் நிரம்பித் துருவொடு மெழுக்கில் உரு என வலித்து எழு மதி கழித்து வயி(று) குடம் உகுப்ப
ஒரு ப(த்)தில் விஞ்சைச் செயல் கொடு கஞ்சச் சல வழி வந்துப் புவி மிசை பண்டைச் செயல் கொடு கவிழ்த்து விழுது அழுது உகுப்ப அனைவரும் அருள் கூர
மென பற்று உருகி முகந்திட்டு அ(ன்)னை முலை உண்டித் தர கொ(ண்)டு உண்கிச் சொ(ல்)லி வளர்
வளத்தோடு அளை மல சலத்தோடு உழைகிடை துடித்து தவழ் நடை வளர்த்தி என தகு வெண்டைப் பரிபுரம் தண்டைச் சர வடமும் கட்டி இயல் முடி படி பண்பித்து இயல் கொடு விதித்த முறை படி படித்து
மயல் கொ(ள்)ள தெருக்களினில் வரு(ம்) வியப்ப இள முலை விந்தைக் கயல் விழி கொண்டல் குழல் மதி துண்டக் கர வளை கொஞ்சக் குயில் மொழி விடுப்ப துதை கலை நெகிழ்த்தி மயில் என நடித்தவர்கள் மயல் பிடித்து
அவர் வரு வழியே போய் சந்தித்து உறவோடு பஞ்சிட்டு அணை மிசை கொஞ்சிப் பல பல விஞ்சைச் சரசமோடு அணைத்து மலர் இதழ் கடித்து
இரு கரம் அடர்த்த குவி முலை அழுத்தி உரம் மிட(று) சங்குத் தொனியோடு பொங்கக் குழல் மலர் சிந்திக் கொடி இடை தங்கிச் சுழலிட சர தொடிகள் வயில் எறிப்ப
மதி நுதல் வியர்ப்ப பரிபுரம் ஒலிப்ப எழு மத சம்பத்து இது செயல் இன்பத்து இருள் கொ(ண்)டு வம்பில் பொருள்கள் வழங்கி
இற்று இது பி(ன்)னை சலித்து வெகு துயர் இளைப்போடு உடல் பிணி பிடித்திடும் அனைவரும் நகைப்ப கரு மயிர் நரை மேவி
தன் கைத் தடி கொடு குந்திக் கவி என உந்திக்கு அசனம் மறந்திட்டு உ(ள்)ளம் மிக சலித்து உடல் சலம் மிகுத்து மதி செவி விழிப்பும் மறை பட கிடத்தி
மனையவள் சம்பத்து உறை முறை அண்டைக் கொ(ள்)ளுகையில் சண்டக் கரு நமன் அண்டிக் கொ(ள்)ளு கயிறு எடுத்து விசை கொடு பிடித்து உயிர் தனை பதைப்ப தனி வழி அடித்து கொண்டு செ(ல்)ல
சந்தித்து அவர் அவர் பங்குக்கு அழுது இரங்கப் பிணம் எடும் என்று இட்ட அறை பறை தடிப்ப சுடலையில் இறக்க விறகொடு கொளுத்தி ஒரு பிடி பொடிக்கும் இலை எனும் உடல் ஆமோ
திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி என்ப
துடிகள் தவுண்டை கிடுபிடி பம்பை ச(ல்)லிகைகள் சங்க பறை வளை திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு டிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு செம் பொன் குட முழவும் தப்புடன் மணி பொங்க
சுரர் மலர் சிந்தப் பதம் மிசை செழித்த மறை சிலர் துதிப்ப முநிவர்கள் களித்து வகை ம(ன்)னி முழக்க
அசுரர்கள் களம் மீதே சிந்தக் குருதிகள் அண்டச் சுவர் அகம் ரம்பக் கிரியோடு பொங்கிப் பெருகியே சிவப்ப அதில் கரி மதர்த்த புரவிகள் சிரத்தொடு இரதமும் மிதப்ப
நிணமொடு செம் புள் கழுகுகள் உண்பத் தலைகள் ததும்பக் கருடன் நடம் கொட்டிட கொடிமறைப்ப நரிகணம் மிகுப்ப குறளிகள் நடிக்க
இருள் மலை கொளுத்தி அலை கடல் செம் பொன் பவளமும் அடங்கிக் கமர் விட வெந்திட்டு இக மலை விண்டுத் துகள் பட
சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா
தொந்தத் தொகுகுட என்பக் கழல் ஒலி பொங்கப் பரிபுரம் செம் பொன் பதம் அணி சுழற்றி நடம் இடு நிருத்தர்
அயன் முடி கரத்தர் அரி கரி உரித்த கடவுள் மெய் தொண்டர்க்கு அருள்பவர் வெந்தத் துகள் அணி கங்கைப் பணி மதி கொன்றைச் சடையினர்
தொடுத்த மதன் உரு பொடித்த விழியினர் மிகுத்த புரம் அதை எரித்த நகையினர் தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர் தொந்திக் கடவுளை தந்திட்டவர்
இட சுகத்தி மழு உழை கரத்தி மரகத நிறத்தி முயலக பதத்தி அருளிய முருகோனே
துண்டச் சசி நுதல் சம்பைக் கொடி இடை ரம்பைக்கு அரசி எனும் உம்பல் தரு மகள் சுகிப்ப மண அறை களிக்க அணை அறு முகத்தொடு உற மயல் செழித்த திரு புய
செம்பொன் கர கமலம் பத்திரு தலம் பொன் சசி எழ சந்தப் பல படை செறித்த கதிர் முடி கடப்ப மலர் தொடை சிறப்போடு ஒரு குடில் மருத்து வன மகள் தொந்தப் புணர் செயல் கண்டுற்று
அடியென் இடைஞ்சல் பொடி பட முன்புற்று அருள் அயில் தொடுத்தும் இள நகை பரப்பி மயில் மிசை நடித்து அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே.
சுக்கிலம் புளகாங்கிதத்தால் இன்ப நிலை அடைந்து, வெளி வந்து ஒழுக, கருவில் உட்கொள்ளப்பட்ட (அதன்) சிறிய துளியானது விரிந்துள்ள தாமரை போன்ற கருப்பையில் தங்கி, அங்கு உள்ள ஒரு சுழற்சியில் மாத்திரை அளவான சுரோணிதத்தோடு கலத்தலால் கரு உதித்து, மாதங்கள் ஏற ஏற, (வயிறு பெருத்து) வெளிப்பட, தந்தை இதைக் கண்டு அன்பு பூண, வலி, ஆட்டம், அசைவு நிரம்ப ஏற்பட்டு குற்றங்களுக்கு ஆளாகி, மெழுக்கில் வளர்த்த உருவம் போல உருவம் நன்கு பொருந்தி, ஏழு மாதங்கள் முற்றிய பின் வயிறு குடம் போல் வெளிக்காட்ட, ஒரு பத்தாவது மாதத்தில் மாய வித்தை போன்ற செயலால், தாமரை உருவமுள்ள சலத் துவார வழியே (குழந்தையாக) வெளி வந்து, பூமியின் மேல் பழைய வினைச் செயல்கள் உடன் தொடருதலால் அசுத்த நிலையோடு, உடல், தலை, அழுக்கு, மலம் முதலியவை மூட, கவிழ்ந்து வெளியே தள்ளப்பட்டு அழ, எல்லோரும் அது கண்டு மகிழ, ஆசை மிகக் கொள்ள, மெதுவாக பாசத்தினால் உள்ளம் உருகி தாங்கி எடுத்து, தாய் முலைப்பாலைத் தர அதனை உட்கொண்டு, மேனி பளபளத்து வளர்ந்து, வளப்பத்தோடு துழாவுகின்ற மலத்திலும், சலத்திலும் அளைந்து கிடந்து துடித்தும், தவழ்கின்ற நடையுடன் தக்கபடி வளர்கின்றது என்று சொல்லும்படி, வெண்டையம் என்னும் காலணியும், சிலம்பும், கிண்கிணியும், மணி வடமாகிய கழுத்தணியும் அணிவித்து, தக்கபடி தலைமயிரை வாரி சீர்திருத்தி, ஒழுக்கத்துடன் விதித்துள்ள முறைப்படி நூல்களைக் கற்று, (வயது ஏறுவதால்) காம மயக்கம் உண்டாக, வீதிகளில் வரும் வியக்கத் தக்க இளங் கொங்கைகள், விசித்திரமான மீன் போன்ற கண்கள், கருமேகம் போன்ற கரிய கூந்தல், சந்திரன் போன்ற முகம், கைவளையல்கள் ஒலிக்க, குயில் போன்ற சொற்கள் வெளிவர, நெருங்கிய ஆடையைத் தளர்த்தி, மயில் போல நடித்த அந்தப் பொது மகளிர் மேல் ஆசை கொண்டு, அம்மகளிர் வரும் வழியில் போய் அவர்களை நட்போடு சந்தித்து, பஞ்சிட்ட படுக்கையின் மேல் கொஞ்சி, பல விசித்திரமான காம லீலைகளுடன் அணைத்து, மலர் போல மென்மையான வாயிதழைக் கடித்து, இரண்டு கைகளால் நெருங்கிய குவிந்த தனத்தை மார்போடு அழுத்தி, கண்டத்திலிருந்து சங்குத் தொனி போலப் புட்குரல் எழும்ப, கூந்தலிலிருந்த பூக்கள் சிந்த, (வஞ்சிக் கொடி) போன்ற இடை நிதானமான சுழற்சி உற, மணி வடமும் தோள் வளையும் ஒளி வீச, பிறை போன்ற நெற்றி வியர்வு தர, காலில் சிலம்பு ஒலிக்க, உண்டாகும் காம மயக்கம் என்னும் செல்வத்தின் இந்தச் செயலால் சிற்றின்பமாகிய இருளைக் கொண்டு வீணாக பொருள்களை வாரி வழங்கிச் செலவிட்டும், இங்ஙனம் செலவழித்த பின்னர், மனம் சலித்துப் போய் மிக்க துயரமும் சோர்வும் கொண்டு, உடலும் நோய் வாய்ப்பட, எல்லோரும் பரிகசித்துச் சிரிக்க, கரிய மயிரும் நரைத்து வெளுத்து, தன்னுடைய கைத்தடியோடு குரங்கு போல் குந்தி நடந்து, வயிற்றுக்கு உணவையும் மறந்து போய், மனம் மிகவும் அலுத்து, உடலில் நீர் அதிகமாகச் சேர்ந்து, அறிவும், காதும், கண் பார்வையும் குறைவு பட்டு, படுக்கையில் கிடத்தி, மனைவியும், செல்வம் நிறைந்த சுற்றத்தார்களும் பக்கத்தில் வந்து சேரும் போது, கோபம் கொண்ட கரிய யமன் நெருங்கிவந்து (தான்) கொண்டு வந்த பாசக் கயிற்றை எடுத்து வேகத்துடன் பிடித்து இழுத்து உயிரை அது பதைக்கும்படி (திரும்பி வாராத) தனி வழியில் அடித்து கொண்டு செல்ல, (துக்கம் விசாரிக்கச்) சந்திப்பவர்கள் அவரவர் பங்குக்கு அழுதும், இரக்கம் காட்டியும், பிணத்தை எடுங்கள் என்று கூறி, ஒலிக்கின்ற பறைகள் மிக்கெழ சுடுகாட்டுக்குக் கொண்டு போய் இறக்கி, விறகு இட்டுக் கொளுத்தி, ஒரு பிடி சாம்பல் பொடி கூட இல்லை என்று சொல்லத் தக்க இந்தப் பிறவி எடுத்தல் நன்றோ? மேற்கண்ட தாளத்திற்கு ஏற்ப, உடுக்கைகள், பேருடுக்கை, வட்ட வடிவமான கிடுபிடி என்ற ஓர் வகை வாத்தியம், (முல்லை நிலங்களுக்கு உரித்தான) பம்பை என்னும் பறை, சல்லிகை என்னும் உத்தமத் தோற் கருவி, கூட்டமான பறை, சங்கு ஆகிய வாத்தியங்கள், திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு என்று இடி இடிப்பதைப் போல் ஒலிக்கும் உடுக்கை, முரசு, சிவந்த அழகிய குடமுழவு, தப்பு என்று ஒலிக்கும் பறை இவைகளோடு மணி முதலிய வாத்தியக் கருவிகள் பேரொலி எழுப்ப, தேவர்கள் திருவடி மீது பூக்களைச் சொரிய, செழிப்புள்ள மறை மொழிகளை சிலர் சொல்லித் துதிக்க, முனிவர்கள் மகிழ்ந்து முறையுடன் பொருந்தி அம்மறைகளை முழங்க, அசுரர்கள் போர்க் களத்தில் சிதறி விழுந்து, அவர்களுடைய இரத்தம் அருகிலிருந்த சுவர் அளவும் நிரம்ப மலை போலப் பொங்கி எழுந்துப் பெருகிச் சிவப்ப, அந்த இரத்த வெள்ளத்தில் யானைகளும், கொழுப்புள்ள குதிரைகளும், அறுபட்ட தலைகளும், தேர்களும் மிதக்க, மாமிசத்தைத் தின்று சிவந்த பறவைக் கூட்டமாகிய கழுகுகள் உண்ண, (உண்ட மயக்கத்தால்) அவைகளுடைய தலைகள் அசைய, கருடன்கள் நடனத்துடன் வட்டமிட, காக்கைகள் மறைந்து போய் நரிக் கூட்டங்கள் மிகச் சேர, (மாய வித்தை செய்யும்) பேய்கள் கூத்தாட, இருண்ட கிரவுஞ்ச மலையைக் கொளுத்தி அலை வீசும் கடல் (தன்னகத்தில் உள்ள) பவளங்கள் சுருங்கி பிளவு பட, வெந்து போய் இங்குள்ள மலைகள் நொறுங்கித் தூளாக, (பூமியைத்) தாங்கும் ஆதிசேஷனும் கூச்சலிட்டு, விஷமுள்ள படங்களைக் கொண்டுள்ள நூற்றுக் கணக்கான தனது முடிகள் நடுக்கம் கொண்டு அலைபடும்படியாகச் செலுத்திய வேலனே, தொந்தத் தொகுகுட என்ற ஒலிகளைச் செய்யும் கழலின் ஒலி மிக்கெழ, சிலம்பு அணிந்துள்ள செவ்விய அழகிய பாதத்தை அழகாகச் சுழற்றி நடனம் செய்யும் கூத்தப் பிரான் ஆகிய சிவ பெருமான், பிரமனது முடியைக் கையில் கொண்டவர், சிங்கத்தையும் யானையையும் தோல் உரித்த கடவுள், உண்மையான அடியார்களுக்கு அருள் புரிபவர், வெந்த நீறு அணிபவர், கங்கை, பாம்பு, சந்திரன், கொன்றை இவைகளை அணிந்த சடையைக் கொண்டவர், (மலர்ப் பாணங்களைத்) தொடுத்த மன்மதனின் உருவை எரித்த நெற்றிக் கண்ணினர், ஆணவம் மிக்கிருந்த திரிபுரங்களை எரித்த புன்னகை உடையவர், தும்பை மலர் மாலையை உடையவர், கழுத்தில் கரிய (ஆலகால விஷத்தின்) அடையாளத்தை உடையவர், தொந்திக் கணபதியைப் பெற்றவர், அத்தகைய சிவபெருமானின் இடது பாகத்தில் உறையும் சுகத்தியாகிய பார்வதி, மழுவாயுதத்தையும், மானையும் கையில் ஏந்திய பச்சை வடிவம் உடையவள், அரக்கன் முயலகனை மிதித்த திருவடியினள் ஆகிய உமை பெற்றருளிய முருகனே, பிறைத் துண்டம் போன்ற நெற்றியையும், மின்னல் கொடி போன்ற இடையையும் உடையவள், ரம்பைக்கும் அரசி என்னும்படியான, (ஐராவதம்) என்னும் யானை வளர்த்த மகளாகிய தேவயானை சுகம் பெற அவளுடைய மண அறையில் இன்பமாக அவளை அணைந்தவனும், ஆறு திருமுகங்களுடன் சேர்ந்து காதல் மிகக் கொண்ட அழகிய புயங்களை உடையவனே, செவ்விய அழகிய தாமரை போன்ற திருக்கரங்கள் பன்னிரண்டும், அழகிய ஒளி வீசும் சந்திரனைப் போல ஒளியைப் பரப்பி, அழகிய பல படைகள் (ஆயுதங்கள்) கைகளில் விளங்க, ஒளி மணிகள் பதிக்கப்பட்ட கிரீடம், கடப்ப மலர் மாலை முதலிய சிறப்புக்களுடன், (தினைப்புனத்தில் இருந்த) ஒப்பற்ற பரணிலிருந்து மூலிகைகள் மிகுந்த செழிப்பான காட்டில் வாழும் வள்ளியுடன் சம்பந்தப்பட்டு, அவளுடன் இணைந்த செயலைப் புரிந்துகொண்டு, அடியேனுடைய துன்பங்கள் பொடியாக என் முன்னே வந்து காட்சி அளித்து, கருணைமயமான வேலைச் செலுத்தியும், புன்னகை புரிந்தும், மயில் மீது நடனம் செய்தும், நெருப்பு மலையாகிய திருவண்ணாமலை ஊருக்குள் வீற்றிருக்கும் பெருமாளே.
விந்துப் புளகித இன்புற்று உருகிட சிந்திக் கருவினில் உண்ப அச் சிறு துளி விரித்த கமல மேல் தரித்து உள் ஒரு சுழி இரத்த குளிகையோடு உதித்து ... சுக்கிலம் புளகாங்கிதத்தால் இன்ப நிலை அடைந்து, வெளி வந்து ஒழுக, கருவில் உட்கொள்ளப்பட்ட (அதன்) சிறிய துளியானது விரிந்துள்ள தாமரை போன்ற கருப்பையில் தங்கி, அங்கு உள்ள ஒரு சுழற்சியில் மாத்திரை அளவான சுரோணிதத்தோடு கலத்தலால் கரு உதித்து, வளர் மதி விள் துற்று அருள் பதி அருள் கொடு மிண்டிச் செயலில் நிரம்பித் துருவொடு மெழுக்கில் உரு என வலித்து எழு மதி கழித்து வயி(று) குடம் உகுப்ப ... மாதங்கள் ஏற ஏற, (வயிறு பெருத்து) வெளிப்பட, தந்தை இதைக் கண்டு அன்பு பூண, வலி, ஆட்டம், அசைவு நிரம்ப ஏற்பட்டு குற்றங்களுக்கு ஆளாகி, மெழுக்கில் வளர்த்த உருவம் போல உருவம் நன்கு பொருந்தி, ஏழு மாதங்கள் முற்றிய பின் வயிறு குடம் போல் வெளிக்காட்ட, ஒரு ப(த்)தில் விஞ்சைச் செயல் கொடு கஞ்சச் சல வழி வந்துப் புவி மிசை பண்டைச் செயல் கொடு கவிழ்த்து விழுது அழுது உகுப்ப அனைவரும் அருள் கூர ... ஒரு பத்தாவது மாதத்தில் மாய வித்தை போன்ற செயலால், தாமரை உருவமுள்ள சலத் துவார வழியே (குழந்தையாக) வெளி வந்து, பூமியின் மேல் பழைய வினைச் செயல்கள் உடன் தொடருதலால் அசுத்த நிலையோடு, உடல், தலை, அழுக்கு, மலம் முதலியவை மூட, கவிழ்ந்து வெளியே தள்ளப்பட்டு அழ, எல்லோரும் அது கண்டு மகிழ, ஆசை மிகக் கொள்ள, மென பற்று உருகி முகந்திட்டு அ(ன்)னை முலை உண்டித் தர கொ(ண்)டு உண்கிச் சொ(ல்)லி வளர் ... மெதுவாக பாசத்தினால் உள்ளம் உருகி தாங்கி எடுத்து, தாய் முலைப்பாலைத் தர அதனை உட்கொண்டு, மேனி பளபளத்து வளர்ந்து, வளத்தோடு அளை மல சலத்தோடு உழைகிடை துடித்து தவழ் நடை வளர்த்தி என தகு வெண்டைப் பரிபுரம் தண்டைச் சர வடமும் கட்டி இயல் முடி படி பண்பித்து இயல் கொடு விதித்த முறை படி படித்து ... வளப்பத்தோடு துழாவுகின்ற மலத்திலும், சலத்திலும் அளைந்து கிடந்து துடித்தும், தவழ்கின்ற நடையுடன் தக்கபடி வளர்கின்றது என்று சொல்லும்படி, வெண்டையம் என்னும் காலணியும், சிலம்பும், கிண்கிணியும், மணி வடமாகிய கழுத்தணியும் அணிவித்து, தக்கபடி தலைமயிரை வாரி சீர்திருத்தி, ஒழுக்கத்துடன் விதித்துள்ள முறைப்படி நூல்களைக் கற்று, மயல் கொ(ள்)ள தெருக்களினில் வரு(ம்) வியப்ப இள முலை விந்தைக் கயல் விழி கொண்டல் குழல் மதி துண்டக் கர வளை கொஞ்சக் குயில் மொழி விடுப்ப துதை கலை நெகிழ்த்தி மயில் என நடித்தவர்கள் மயல் பிடித்து ... (வயது ஏறுவதால்) காம மயக்கம் உண்டாக, வீதிகளில் வரும் வியக்கத் தக்க இளங் கொங்கைகள், விசித்திரமான மீன் போன்ற கண்கள், கருமேகம் போன்ற கரிய கூந்தல், சந்திரன் போன்ற முகம், கைவளையல்கள் ஒலிக்க, குயில் போன்ற சொற்கள் வெளிவர, நெருங்கிய ஆடையைத் தளர்த்தி, மயில் போல நடித்த அந்தப் பொது மகளிர் மேல் ஆசை கொண்டு, அவர் வரு வழியே போய் சந்தித்து உறவோடு பஞ்சிட்டு அணை மிசை கொஞ்சிப் பல பல விஞ்சைச் சரசமோடு அணைத்து மலர் இதழ் கடித்து ... அம்மகளிர் வரும் வழியில் போய் அவர்களை நட்போடு சந்தித்து, பஞ்சிட்ட படுக்கையின் மேல் கொஞ்சி, பல விசித்திரமான காம லீலைகளுடன் அணைத்து, மலர் போல மென்மையான வாயிதழைக் கடித்து, இரு கரம் அடர்த்த குவி முலை அழுத்தி உரம் மிட(று) சங்குத் தொனியோடு பொங்கக் குழல் மலர் சிந்திக் கொடி இடை தங்கிச் சுழலிட சர தொடிகள் வயில் எறிப்ப ... இரண்டு கைகளால் நெருங்கிய குவிந்த தனத்தை மார்போடு அழுத்தி, கண்டத்திலிருந்து சங்குத் தொனி போலப் புட்குரல் எழும்ப, கூந்தலிலிருந்த பூக்கள் சிந்த, (வஞ்சிக் கொடி) போன்ற இடை நிதானமான சுழற்சி உற, மணி வடமும் தோள் வளையும் ஒளி வீச, மதி நுதல் வியர்ப்ப பரிபுரம் ஒலிப்ப எழு மத சம்பத்து இது செயல் இன்பத்து இருள் கொ(ண்)டு வம்பில் பொருள்கள் வழங்கி ... பிறை போன்ற நெற்றி வியர்வு தர, காலில் சிலம்பு ஒலிக்க, உண்டாகும் காம மயக்கம் என்னும் செல்வத்தின் இந்தச் செயலால் சிற்றின்பமாகிய இருளைக் கொண்டு வீணாக பொருள்களை வாரி வழங்கிச் செலவிட்டும், இற்று இது பி(ன்)னை சலித்து வெகு துயர் இளைப்போடு உடல் பிணி பிடித்திடும் அனைவரும் நகைப்ப கரு மயிர் நரை மேவி ... இங்ஙனம் செலவழித்த பின்னர், மனம் சலித்துப் போய் மிக்க துயரமும் சோர்வும் கொண்டு, உடலும் நோய் வாய்ப்பட, எல்லோரும் பரிகசித்துச் சிரிக்க, கரிய மயிரும் நரைத்து வெளுத்து, தன் கைத் தடி கொடு குந்திக் கவி என உந்திக்கு அசனம் மறந்திட்டு உ(ள்)ளம் மிக சலித்து உடல் சலம் மிகுத்து மதி செவி விழிப்பும் மறை பட கிடத்தி ... தன்னுடைய கைத்தடியோடு குரங்கு போல் குந்தி நடந்து, வயிற்றுக்கு உணவையும் மறந்து போய், மனம் மிகவும் அலுத்து, உடலில் நீர் அதிகமாகச் சேர்ந்து, அறிவும், காதும், கண் பார்வையும் குறைவு பட்டு, படுக்கையில் கிடத்தி, மனையவள் சம்பத்து உறை முறை அண்டைக் கொ(ள்)ளுகையில் சண்டக் கரு நமன் அண்டிக் கொ(ள்)ளு கயிறு எடுத்து விசை கொடு பிடித்து உயிர் தனை பதைப்ப தனி வழி அடித்து கொண்டு செ(ல்)ல ... மனைவியும், செல்வம் நிறைந்த சுற்றத்தார்களும் பக்கத்தில் வந்து சேரும் போது, கோபம் கொண்ட கரிய யமன் நெருங்கிவந்து (தான்) கொண்டு வந்த பாசக் கயிற்றை எடுத்து வேகத்துடன் பிடித்து இழுத்து உயிரை அது பதைக்கும்படி (திரும்பி வாராத) தனி வழியில் அடித்து கொண்டு செல்ல, சந்தித்து அவர் அவர் பங்குக்கு அழுது இரங்கப் பிணம் எடும் என்று இட்ட அறை பறை தடிப்ப சுடலையில் இறக்க விறகொடு கொளுத்தி ஒரு பிடி பொடிக்கும் இலை எனும் உடல் ஆமோ ... (துக்கம் விசாரிக்கச்) சந்திப்பவர்கள் அவரவர் பங்குக்கு அழுதும், இரக்கம் காட்டியும், பிணத்தை எடுங்கள் என்று கூறி, ஒலிக்கின்ற பறைகள் மிக்கெழ சுடுகாட்டுக்குக் கொண்டு போய் இறக்கி, விறகு இட்டுக் கொளுத்தி, ஒரு பிடி சாம்பல் பொடி கூட இல்லை என்று சொல்லத் தக்க இந்தப் பிறவி எடுத்தல் நன்றோ? திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி என்ப ... மேற்கண்ட தாளத்திற்கு ஏற்ப, துடிகள் தவுண்டை கிடுபிடி பம்பை ச(ல்)லிகைகள் சங்க பறை வளை திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு டிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு செம் பொன் குட முழவும் தப்புடன் மணி பொங்க ... உடுக்கைகள், பேருடுக்கை, வட்ட வடிவமான கிடுபிடி என்ற ஓர் வகை வாத்தியம், (முல்லை நிலங்களுக்கு உரித்தான) பம்பை என்னும் பறை, சல்லிகை என்னும் உத்தமத் தோற் கருவி, கூட்டமான பறை, சங்கு ஆகிய வாத்தியங்கள், திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு என்று இடி இடிப்பதைப் போல் ஒலிக்கும் உடுக்கை, முரசு, சிவந்த அழகிய குடமுழவு, தப்பு என்று ஒலிக்கும் பறை இவைகளோடு மணி முதலிய வாத்தியக் கருவிகள் பேரொலி எழுப்ப, சுரர் மலர் சிந்தப் பதம் மிசை செழித்த மறை சிலர் துதிப்ப முநிவர்கள் களித்து வகை ம(ன்)னி முழக்க ... தேவர்கள் திருவடி மீது பூக்களைச் சொரிய, செழிப்புள்ள மறை மொழிகளை சிலர் சொல்லித் துதிக்க, முனிவர்கள் மகிழ்ந்து முறையுடன் பொருந்தி அம்மறைகளை முழங்க, அசுரர்கள் களம் மீதே சிந்தக் குருதிகள் அண்டச் சுவர் அகம் ரம்பக் கிரியோடு பொங்கிப் பெருகியே சிவப்ப அதில் கரி மதர்த்த புரவிகள் சிரத்தொடு இரதமும் மிதப்ப ... அசுரர்கள் போர்க் களத்தில் சிதறி விழுந்து, அவர்களுடைய இரத்தம் அருகிலிருந்த சுவர் அளவும் நிரம்ப மலை போலப் பொங்கி எழுந்துப் பெருகிச் சிவப்ப, அந்த இரத்த வெள்ளத்தில் யானைகளும், கொழுப்புள்ள குதிரைகளும், அறுபட்ட தலைகளும், தேர்களும் மிதக்க, நிணமொடு செம் புள் கழுகுகள் உண்பத் தலைகள் ததும்பக் கருடன் நடம் கொட்டிட கொடிமறைப்ப நரிகணம் மிகுப்ப குறளிகள் நடிக்க ... மாமிசத்தைத் தின்று சிவந்த பறவைக் கூட்டமாகிய கழுகுகள் உண்ண, (உண்ட மயக்கத்தால்) அவைகளுடைய தலைகள் அசைய, கருடன்கள் நடனத்துடன் வட்டமிட, காக்கைகள் மறைந்து போய் நரிக் கூட்டங்கள் மிகச் சேர, (மாய வித்தை செய்யும்) பேய்கள் கூத்தாட, இருள் மலை கொளுத்தி அலை கடல் செம் பொன் பவளமும் அடங்கிக் கமர் விட வெந்திட்டு இக மலை விண்டுத் துகள் பட ... இருண்ட கிரவுஞ்ச மலையைக் கொளுத்தி அலை வீசும் கடல் (தன்னகத்தில் உள்ள) பவளங்கள் சுருங்கி பிளவு பட, வெந்து போய் இங்குள்ள மலைகள் நொறுங்கித் தூளாக, சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா ... (பூமியைத்) தாங்கும் ஆதிசேஷனும் கூச்சலிட்டு, விஷமுள்ள படங்களைக் கொண்டுள்ள நூற்றுக் கணக்கான தனது முடிகள் நடுக்கம் கொண்டு அலைபடும்படியாகச் செலுத்திய வேலனே, தொந்தத் தொகுகுட என்பக் கழல் ஒலி பொங்கப் பரிபுரம் செம் பொன் பதம் அணி சுழற்றி நடம் இடு நிருத்தர் ... தொந்தத் தொகுகுட என்ற ஒலிகளைச் செய்யும் கழலின் ஒலி மிக்கெழ, சிலம்பு அணிந்துள்ள செவ்விய அழகிய பாதத்தை அழகாகச் சுழற்றி நடனம் செய்யும் கூத்தப் பிரான் ஆகிய சிவ பெருமான், அயன் முடி கரத்தர் அரி கரி உரித்த கடவுள் மெய் தொண்டர்க்கு அருள்பவர் வெந்தத் துகள் அணி கங்கைப் பணி மதி கொன்றைச் சடையினர் ... பிரமனது முடியைக் கையில் கொண்டவர், சிங்கத்தையும் யானையையும் தோல் உரித்த கடவுள், உண்மையான அடியார்களுக்கு அருள் புரிபவர், வெந்த நீறு அணிபவர், கங்கை, பாம்பு, சந்திரன், கொன்றை இவைகளை அணிந்த சடையைக் கொண்டவர், தொடுத்த மதன் உரு பொடித்த விழியினர் மிகுத்த புரம் அதை எரித்த நகையினர் தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர் தொந்திக் கடவுளை தந்திட்டவர் ... (மலர்ப் பாணங்களைத்) தொடுத்த மன்மதனின் உருவை எரித்த நெற்றிக் கண்ணினர், ஆணவம் மிக்கிருந்த திரிபுரங்களை எரித்த புன்னகை உடையவர், தும்பை மலர் மாலையை உடையவர், கழுத்தில் கரிய (ஆலகால விஷத்தின்) அடையாளத்தை உடையவர், தொந்திக் கணபதியைப் பெற்றவர், இட சுகத்தி மழு உழை கரத்தி மரகத நிறத்தி முயலக பதத்தி அருளிய முருகோனே ... அத்தகைய சிவபெருமானின் இடது பாகத்தில் உறையும் சுகத்தியாகிய பார்வதி, மழுவாயுதத்தையும், மானையும் கையில் ஏந்திய பச்சை வடிவம் உடையவள், அரக்கன் முயலகனை மிதித்த திருவடியினள் ஆகிய உமை பெற்றருளிய முருகனே, துண்டச் சசி நுதல் சம்பைக் கொடி இடை ரம்பைக்கு அரசி எனும் உம்பல் தரு மகள் சுகிப்ப மண அறை களிக்க அணை அறு முகத்தொடு உற மயல் செழித்த திரு புய ... பிறைத் துண்டம் போன்ற நெற்றியையும், மின்னல் கொடி போன்ற இடையையும் உடையவள், ரம்பைக்கும் அரசி என்னும்படியான, (ஐராவதம்) என்னும் யானை வளர்த்த மகளாகிய தேவயானை சுகம் பெற அவளுடைய மண அறையில் இன்பமாக அவளை அணைந்தவனும், ஆறு திருமுகங்களுடன் சேர்ந்து காதல் மிகக் கொண்ட அழகிய புயங்களை உடையவனே, செம்பொன் கர கமலம் பத்திரு தலம் பொன் சசி எழ சந்தப் பல படை செறித்த கதிர் முடி கடப்ப மலர் தொடை சிறப்போடு ஒரு குடில் மருத்து வன மகள் தொந்தப் புணர் செயல் கண்டுற்று ... செவ்விய அழகிய தாமரை போன்ற திருக்கரங்கள் பன்னிரண்டும், அழகிய ஒளி வீசும் சந்திரனைப் போல ஒளியைப் பரப்பி, அழகிய பல படைகள் (ஆயுதங்கள்) கைகளில் விளங்க, ஒளி மணிகள் பதிக்கப்பட்ட கிரீடம், கடப்ப மலர் மாலை முதலிய சிறப்புக்களுடன், (தினைப்புனத்தில் இருந்த) ஒப்பற்ற பரணிலிருந்து மூலிகைகள் மிகுந்த செழிப்பான காட்டில் வாழும் வள்ளியுடன் சம்பந்தப்பட்டு, அவளுடன் இணைந்த செயலைப் புரிந்துகொண்டு, அடியென் இடைஞ்சல் பொடி பட முன்புற்று அருள் அயில் தொடுத்தும் இள நகை பரப்பி மயில் மிசை நடித்து அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே. ... அடியேனுடைய துன்பங்கள் பொடியாக என் முன்னே வந்து காட்சி அளித்து, கருணைமயமான வேலைச் செலுத்தியும், புன்னகை புரிந்தும், மயில் மீது நடனம் செய்தும், நெருப்பு மலையாகிய திருவண்ணாமலை ஊருக்குள் வீற்றிருக்கும் பெருமாளே.