கங்குலின் கார் குழல் முகம் சசி மஞ்சளின் புயத்தார் சரம் பெறு கண்கள் கொந்தளக் காதுகொஞ்சுக
செம் பொன் ஆரம் கந்தரம் தரித்து ஆடு கொங்கைகள் உம்பலின் குவட்டு ஆம் எனும் கிரிகந்தமும் சிறு தேமலும் பட சம்பை போல அங்கு அமைந்து இடை
பாளிதம் கொடு குந்தியின் குறைக் கால் மறைந்திட அண் சிலம்பு ஒலிப் பாடகம் சரி கொஞ்ச மேவும்
அஞ்சுகம் குயில் பூவையின் குரல் அம் கை பொன் பறிக்கார பெண்கள் ஓடு அண்டி மண்டையர்க்கு ஊழியம் செய்வது என்று போமோ
சங்கு பொன் தவில் காளமும் துரியங்கள் துந்துமிக் காடு அதிர்ந்திட சந்த செம் தமிழ்ப் பாணர் கொஞ்சிட
அண்ட கோசம் சந்திரன் பதத்தோர் வணங்கிட இந்திரன் குலத்தார் பொழிந்திட தந்திரம் புயத்தார் புகழ்ந்திட வந்த சூரை
செம் கையும் சிரத்தோடு பங்கு எழ அந்தகன் புரத்து ஏற வஞ்சகர் செம் சரம் தொடுத்தே நடம் புரி கந்தவேளே
திங்கள் ஒண் முகக் காமர் கொண்ட வன் கொங்கை மென் குறப் பாவையும் கொடு செம் பொன் அம்பலத்தே சிறந்து அருள் தம்பிரானே.
இருண்ட மேகம் போன்று கறு நிறமான கூந்தலை உடையவர்கள். சந்திரன் போன்ற முகம் உடையவர்கள். மஞ்சள் விளங்கும் கை உடையவர்கள். அம்பு போன்ற கண்களை உடையவர்கள். தலை மயிற் சுருள் காதைக் கொஞ்சும்படி அமைந்தவர்கள். செம் பொன் மாலை கழுத்தில் அணிந்து, அசைந்தாடும் மார்பகங்கள் யானை போலும் திரட்சி கொண்டதைப் போன்ற மலையாய், அகில் நறு மணமும் சிறிய தேமலும் தோன்ற, மின்னல் போல இடையானது அங்கு அமையப் பெற்று, பட்டு ஆடை கொண்டு குதிக்கால் மறையும்படி உடுத்து, அடுத்துள்ள சிலம்பும், பாடகம் என்ற காலணியும், கை வளையுடன் (ஒத்து) ஒலிக்க உள்ளவர்களாய், கிளி, குயில், நாகணவாய்ப்புள் ஆகியவற்றின் குரலை உடையவர்களாய், அழகிய கையில் பொன்னை அபகரிக்கின்ற விலைமாதருடன் நெருங்கி, அத்தகைய வேசிகளுக்கு சேவக வேலை செய்வது என்றைக்குத் தொலையுமோ? சங்குகளும், அழகிய மேளங்களும், ஊது கொம்பும், முரசப் பறைகளும், பேரிகைகளும் கூட்டமாக அதிர்ச்சி செய்து ஒலிக்க, அழகிய செந்தமிழ்ப் பாடல்களைப் பாடவல்ல பாணர்கள் அருமையாக வாசிக்க, அண்டங்கள் எல்லாவற்றிலும் உள்ள அனைவரும் சந்திர மண்டலத்தில் உள்ளவர்களும் வணங்கவும், தேவர்கள் பூமாரி பொழியவும், யாழ் ஏந்தும் கையினரான கந்தருவர் போற்றவும், எதிர்த்து வந்த சூரனின் செவ்விய கைகளையும் தலையுடன் துண்டாகும்படி யமனுலகுக்கு வஞ்சகராகிய அசுரரர்கள் போய்ச் சேரும்படியாக சிறந்த அம்புகளைச் செலுத்தி நடனமாடிய கந்தப் பெருமானே, சந்திரனை ஒத்த ஒளி வீசும் அழகும் முகமும் உடையவளும், வலிய மார்பகங்களை உடைய மென்மை வாய்ந்தவளுமாகிய குறப் பெண் வள்ளியுடன் சிறந்த சிதம்பரத்தில் மேம்பட்டு அருளும் தம்பிரானே.
கங்குலின் கார் குழல் முகம் சசி மஞ்சளின் புயத்தார் சரம் பெறு கண்கள் கொந்தளக் காதுகொஞ்சுக ... இருண்ட மேகம் போன்று கறு நிறமான கூந்தலை உடையவர்கள். சந்திரன் போன்ற முகம் உடையவர்கள். மஞ்சள் விளங்கும் கை உடையவர்கள். அம்பு போன்ற கண்களை உடையவர்கள். தலை மயிற் சுருள் காதைக் கொஞ்சும்படி அமைந்தவர்கள். செம் பொன் ஆரம் கந்தரம் தரித்து ஆடு கொங்கைகள் உம்பலின் குவட்டு ஆம் எனும் கிரிகந்தமும் சிறு தேமலும் பட சம்பை போல அங்கு அமைந்து இடை ... செம் பொன் மாலை கழுத்தில் அணிந்து, அசைந்தாடும் மார்பகங்கள் யானை போலும் திரட்சி கொண்டதைப் போன்ற மலையாய், அகில் நறு மணமும் சிறிய தேமலும் தோன்ற, மின்னல் போல இடையானது அங்கு அமையப் பெற்று, பாளிதம் கொடு குந்தியின் குறைக் கால் மறைந்திட அண் சிலம்பு ஒலிப் பாடகம் சரி கொஞ்ச மேவும் ... பட்டு ஆடை கொண்டு குதிக்கால் மறையும்படி உடுத்து, அடுத்துள்ள சிலம்பும், பாடகம் என்ற காலணியும், கை வளையுடன் (ஒத்து) ஒலிக்க உள்ளவர்களாய், அஞ்சுகம் குயில் பூவையின் குரல் அம் கை பொன் பறிக்கார பெண்கள் ஓடு அண்டி மண்டையர்க்கு ஊழியம் செய்வது என்று போமோ ... கிளி, குயில், நாகணவாய்ப்புள் ஆகியவற்றின் குரலை உடையவர்களாய், அழகிய கையில் பொன்னை அபகரிக்கின்ற விலைமாதருடன் நெருங்கி, அத்தகைய வேசிகளுக்கு சேவக வேலை செய்வது என்றைக்குத் தொலையுமோ? சங்கு பொன் தவில் காளமும் துரியங்கள் துந்துமிக் காடு அதிர்ந்திட சந்த செம் தமிழ்ப் பாணர் கொஞ்சிட ... சங்குகளும், அழகிய மேளங்களும், ஊது கொம்பும், முரசப் பறைகளும், பேரிகைகளும் கூட்டமாக அதிர்ச்சி செய்து ஒலிக்க, அழகிய செந்தமிழ்ப் பாடல்களைப் பாடவல்ல பாணர்கள் அருமையாக வாசிக்க, அண்ட கோசம் சந்திரன் பதத்தோர் வணங்கிட இந்திரன் குலத்தார் பொழிந்திட தந்திரம் புயத்தார் புகழ்ந்திட வந்த சூரை ... அண்டங்கள் எல்லாவற்றிலும் உள்ள அனைவரும் சந்திர மண்டலத்தில் உள்ளவர்களும் வணங்கவும், தேவர்கள் பூமாரி பொழியவும், யாழ் ஏந்தும் கையினரான கந்தருவர் போற்றவும், எதிர்த்து வந்த சூரனின் செம் கையும் சிரத்தோடு பங்கு எழ அந்தகன் புரத்து ஏற வஞ்சகர் செம் சரம் தொடுத்தே நடம் புரி கந்தவேளே ... செவ்விய கைகளையும் தலையுடன் துண்டாகும்படி யமனுலகுக்கு வஞ்சகராகிய அசுரரர்கள் போய்ச் சேரும்படியாக சிறந்த அம்புகளைச் செலுத்தி நடனமாடிய கந்தப் பெருமானே, திங்கள் ஒண் முகக் காமர் கொண்ட வன் கொங்கை மென் குறப் பாவையும் கொடு செம் பொன் அம்பலத்தே சிறந்து அருள் தம்பிரானே. ... சந்திரனை ஒத்த ஒளி வீசும் அழகும் முகமும் உடையவளும், வலிய மார்பகங்களை உடைய மென்மை வாய்ந்தவளுமாகிய குறப் பெண் வள்ளியுடன் சிறந்த சிதம்பரத்தில் மேம்பட்டு அருளும் தம்பிரானே.