தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர்
பத்திரம் கண் கயல் காரி ஒப்பும் குழல்கள் சச்சை அம் கெச்சையும் தாள ஒத்தும் பதுமை என்ப
நீலச் சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு ஒற்றி நன் சித்திரம் போல எத்தும் பறியர்
சக் க(ள்)ளம் சக்கடம் சாதி துக்க கொலையர் சங்க மாதர் சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர்
முன் பணம் கைக் கொடு உந்து ஆரும் இட்டம் கொளுவர் சொக்கி இடும்புக் கடன் சேரு மட்டும் தனகும் விஞ்சையோர் பால்
தொக்கிடும் கக்கலும் சூலை பக்கம் பிளவை விக்கலும் துக்கமும் சீத பித்தங்கள் கொடு துப்பு அடங்கிப் படும் சோரனுக்கும் பதவி எந்த நாளோ
குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர் கொற்றமும் கட்டியம் பாட நிர்த்தம் பவுரி கொண்ட வேலா
கொற்றர் பங்கு உற்ற சிந்தாமணிச் செம் குமரி பத்தர் அன்புற்ற எம் தாய் எழில் கொஞ்சு கிளி கொட்(கு) புரம் தொக்க வெந்து ஆடவிட்டு அங்கி விழி மங்கை பாலா
சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர செட்டி என்று எத்தி வந்து ஆடி நிர்த்தங்கள் புரி சில் சிதம் பொன் புயம் சேர முற்றும் புணரும் எங்கள் கோவே
சிற் பரன் தற்பரன் சீர் திகழ்த் தென் புலியூர் ருத்திரன் பத்திர அம் சூல(ம்) கர்த்தன் சபையில் தித்தி என்று ஒத்தி நின்று ஆடு சிற்றம்பலவர் தம்பிரானே.
கிளி என்று ஒப்புமை சொல்லத் தக்கவராய், மயில் போன்று நடனம் செய்பவர்கள். அம்பு போன்ற கண்ணும் நீருண்ட மேகத்தை ஒத்த கூந்தலும், சப்திக்கும் காற் சதங்கையும் தாள ஒத்துப் போல ஒலி செய்யும் பாவை எனக் கூறத் தக்கவர். நீல நிறமுள்ள சக்கரவாகப் புள், பொன்னாலாகிய குடம் இவற்றைப் போலிருந்து, பால் கொண்டதாயுள்ள மார்பினைக் கொண்டு தழுவி, நல்ல ஓவியம் போல இருந்து வஞ்சித்து, பொருளைப் பறிப்பவர்கள். முழுப் பொய்யைப் பரிகாசத்தினால் சாதிக்கின்ற, துக்கம் தரும் கொலைத் தொழிலைச் செய்பவர்கள். அழகிய விலைமாதர்கள். தம் வசத்தில் சுழலும்படியான பித்து ஏற்றுகின்ற சூதினைக் கற்ற சதிகாரிகள். முன்னதாகப் பணத்தைக் கையில் கொண்டு செலுத்தும் யார் மீதும் தமது விருப்பத்தைச் செலுத்துபவர்கள். மயங்கும்படியான அகந்தை வார்த்தைகளைச் சொல்லி பொருள் சேரும் வரையில் நட்பினைக் காட்டும் மாய வித்தைக்காரர்களிடத்தே, நெருங்கிக் கூடி வருகின்ற வாந்தியும், சூலை நோயும், விலாப் பக்கத்தில் வரும் ராஜபிளவைக் கட்டியும், விக்கலும், துக்கமும், சீத மலம், பித்தம் ஆகிய நோய்களைக் கொள்வதால், வலிமை குன்றி அழிந்து படும் இந்தக் கள்வனுக்கும் (சாலோக, சாமீப, சாரூப, சாயுஜ்ய எனப்படும்) சிவலோக இன்பப் பதவிகள் கிடைப்பது எப்போதோ? வஞ்சகம் கற்ற சண்டாளர் ஆகிய ஏழு மலைகளும் பொடிபட்டு நின்று குலைய, எட்டுத் திக்குப் பாலகர்களும் உனது வீரத்தைப் புகழ் மாலையாகப் பாட, நடனமாகிய கூத்துக்களைக் கொண்ட வேலனே, வெற்றியாளராகிய சிவபெருமானது இடது பக்கத்தில் உள்ள சிந்தாமணி போன்றவள், செவ்விய குமரி, பக்தர்கள் அன்பு கொண்ட எமது தாய், அழகு கொஞ்சும் கிளி, சுழன்று திரியும் திரி புரங்கள் எல்லாம் வெந்து குலைய வைத்த நெருப்புக் கண்ணை உடைய பார்வதி தேவியின் புதல்வனே, விசித்திரமான அழகிய குறப் பெண்ணாகிய வள்ளி அருகில் சென்று சேர வளைச் செட்டி வடிவு எடுத்து ஏமாற்றி வந்து விளையாடல்கள் செய்து கூத்துக்கள் புரிந்து, நுண்ணிய ஞானத்தவளாகிய அந்த வள்ளி உனது அழகிய தோள்களைச் சேர, அவளை முழுதும் கலந்து சேர்ந்த எங்கள் தலைவனே, ஞானபரன், பரம் பொருள், சீர் விளங்கும் அழகிய சிதம்பரத்தில் விளங்கும் ருத்திர மூர்த்தி, இலைகளை உடைய சூலாயுதத்தைக் கொண்ட தலைவன், பொன்னம்பலத்தில் தித்தி என்னும் தாளத்துக்குத் தக்கபடி நடனம் செய்யும் நடராஜப் பெருமானது தம்பிரானே.
தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர் ... கிளி என்று ஒப்புமை சொல்லத் தக்கவராய், மயில் போன்று நடனம் செய்பவர்கள். பத்திரம் கண் கயல் காரி ஒப்பும் குழல்கள் சச்சை அம் கெச்சையும் தாள ஒத்தும் பதுமை என்ப ... அம்பு போன்ற கண்ணும் நீருண்ட மேகத்தை ஒத்த கூந்தலும், சப்திக்கும் காற் சதங்கையும் தாள ஒத்துப் போல ஒலி செய்யும் பாவை எனக் கூறத் தக்கவர். நீலச் சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு ஒற்றி நன் சித்திரம் போல எத்தும் பறியர் ... நீல நிறமுள்ள சக்கரவாகப் புள், பொன்னாலாகிய குடம் இவற்றைப் போலிருந்து, பால் கொண்டதாயுள்ள மார்பினைக் கொண்டு தழுவி, நல்ல ஓவியம் போல இருந்து வஞ்சித்து, பொருளைப் பறிப்பவர்கள். சக் க(ள்)ளம் சக்கடம் சாதி துக்க கொலையர் சங்க மாதர் சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர் ... முழுப் பொய்யைப் பரிகாசத்தினால் சாதிக்கின்ற, துக்கம் தரும் கொலைத் தொழிலைச் செய்பவர்கள். அழகிய விலைமாதர்கள். தம் வசத்தில் சுழலும்படியான பித்து ஏற்றுகின்ற சூதினைக் கற்ற சதிகாரிகள். முன் பணம் கைக் கொடு உந்து ஆரும் இட்டம் கொளுவர் சொக்கி இடும்புக் கடன் சேரு மட்டும் தனகும் விஞ்சையோர் பால் ... முன்னதாகப் பணத்தைக் கையில் கொண்டு செலுத்தும் யார் மீதும் தமது விருப்பத்தைச் செலுத்துபவர்கள். மயங்கும்படியான அகந்தை வார்த்தைகளைச் சொல்லி பொருள் சேரும் வரையில் நட்பினைக் காட்டும் மாய வித்தைக்காரர்களிடத்தே, தொக்கிடும் கக்கலும் சூலை பக்கம் பிளவை விக்கலும் துக்கமும் சீத பித்தங்கள் கொடு துப்பு அடங்கிப் படும் சோரனுக்கும் பதவி எந்த நாளோ ... நெருங்கிக் கூடி வருகின்ற வாந்தியும், சூலை நோயும், விலாப் பக்கத்தில் வரும் ராஜபிளவைக் கட்டியும், விக்கலும், துக்கமும், சீத மலம், பித்தம் ஆகிய நோய்களைக் கொள்வதால், வலிமை குன்றி அழிந்து படும் இந்தக் கள்வனுக்கும் (சாலோக, சாமீப, சாரூப, சாயுஜ்ய எனப்படும்) சிவலோக இன்பப் பதவிகள் கிடைப்பது எப்போதோ? குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர் கொற்றமும் கட்டியம் பாட நிர்த்தம் பவுரி கொண்ட வேலா ... வஞ்சகம் கற்ற சண்டாளர் ஆகிய ஏழு மலைகளும் பொடிபட்டு நின்று குலைய, எட்டுத் திக்குப் பாலகர்களும் உனது வீரத்தைப் புகழ் மாலையாகப் பாட, நடனமாகிய கூத்துக்களைக் கொண்ட வேலனே, கொற்றர் பங்கு உற்ற சிந்தாமணிச் செம் குமரி பத்தர் அன்புற்ற எம் தாய் எழில் கொஞ்சு கிளி கொட்(கு) புரம் தொக்க வெந்து ஆடவிட்டு அங்கி விழி மங்கை பாலா ... வெற்றியாளராகிய சிவபெருமானது இடது பக்கத்தில் உள்ள சிந்தாமணி போன்றவள், செவ்விய குமரி, பக்தர்கள் அன்பு கொண்ட எமது தாய், அழகு கொஞ்சும் கிளி, சுழன்று திரியும் திரி புரங்கள் எல்லாம் வெந்து குலைய வைத்த நெருப்புக் கண்ணை உடைய பார்வதி தேவியின் புதல்வனே, சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர செட்டி என்று எத்தி வந்து ஆடி நிர்த்தங்கள் புரி சில் சிதம் பொன் புயம் சேர முற்றும் புணரும் எங்கள் கோவே ... விசித்திரமான அழகிய குறப் பெண்ணாகிய வள்ளி அருகில் சென்று சேர வளைச் செட்டி வடிவு எடுத்து ஏமாற்றி வந்து விளையாடல்கள் செய்து கூத்துக்கள் புரிந்து, நுண்ணிய ஞானத்தவளாகிய அந்த வள்ளி உனது அழகிய தோள்களைச் சேர, அவளை முழுதும் கலந்து சேர்ந்த எங்கள் தலைவனே, சிற் பரன் தற்பரன் சீர் திகழ்த் தென் புலியூர் ருத்திரன் பத்திர அம் சூல(ம்) கர்த்தன் சபையில் தித்தி என்று ஒத்தி நின்று ஆடு சிற்றம்பலவர் தம்பிரானே. ... ஞானபரன், பரம் பொருள், சீர் விளங்கும் அழகிய சிதம்பரத்தில் விளங்கும் ருத்திர மூர்த்தி, இலைகளை உடைய சூலாயுதத்தைக் கொண்ட தலைவன், பொன்னம்பலத்தில் தித்தி என்னும் தாளத்துக்குத் தக்கபடி நடனம் செய்யும் நடராஜப் பெருமானது தம்பிரானே.