அடப் பக்கம் பிடித்துத் தோளொடு தோள் பொர வளைத்துச் செங்கரத்தில் சீரொடு பாவொடு அணுக்கி
செந்துணுக்கில் கோ(ப) இதழ் ஊறல்கள் அது கோதி அணிப் பொன் பங்கயத்துப் பூண் முலை மேகலை நெகிழ்த்து
பஞ்சரித்துத் தா பணமே என அருட்டிக் கண் சிமிட்டிப் பேசிய மாதர்கள்
உறவோடே படிச் சித்தம் களித்துத் தான் மிக மாயைகள் படித்துப் பண் பயிற்று இக்காதல்கள் மேல் கொள பசப்பிப் பின் பிணைக்கைக் கூறிய வீணிகள்
அவ மாயப் பரத்தைக் குண்டு உணர்த்துத் தோதக பேதைகள் பழிக்குள் சஞ்சரித்துப் போடு இடு மூடனை
பரத்து உற்று அண் பதத்துப் போதகம் ஈது என அருள்தாராய்
தடக்கைத் தண்டு எடுத்துச் சூரரை வீரரை நொறுக்கிப் பொன்றவிட்டுத் தூள் எழ நீறு எழ தகர்த்துப் பந்து அடித்துச் சூடிய தோரண கலை வீரா
தகட்டுப் பொன் சுவட்டுப் பூ அணை மேடையில் சமைப்பித்து அங்கு ஒருத்திக் கோது இல மாமயில் தனிப் பொற்பைம் புனத்தில் கோகில மா வ(ள்)ளி மணவாளா
திடத்தில் திண் பொருப்பைத் தோள் கொடு சாடிய அரக்கத் திண் குலத்தைச் சூறை கொள் வீரிய
திருப் பொன் பங்கயத்துக் கேசவர் மாயவர் அறியாமல் திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடிய சமர்த்தர்ப் பொன் புவிக்குள் தேவர்கள் நாயக
திருச் சிற்றம்பலத்துள் கோபுர(ம்) மேவிய பெருமாளே.
தமது காரியத்தில் வெற்றி பெற, வந்தவரைச் சார்ந்து நன்றாகப் பிடித்து அவருடைய தோளோடு தங்களுடைய தோளை இணைத்துப் பொருந்த, தங்களுடைய செவ்விய கைகளால் அணைத்து, சீராட்டியும் பாடல் பாடியும் நன்கு நெருக்கி, சிவந்த பவளத்துண்டை ஒத்த, இந்திர கோபத்தைப் போன்ற வாய் இதழின் ஊறல்களைத் தொகுத்து அனுபவிக்கத் தந்து, அழகிய பொலிவுள்ள தாமரை மொட்டு போன்றதும், ஆபரணம் அணிந்ததுமான மார்பையும், (இடையில் அணிந்துள்ள) மேகலையையும் வேண்டுமென்றே தளர்த்தி, குதலை மொழி பேசி நச்சரித்து பொருள் கொடு என்று மயங்குவது போன்ற கண்களைச் சிமிட்டிப் பேசுகின்ற வேசிகள், தங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் போல் படிகின்ற தங்கள் உள்ளத்தில் மகிழ்ந்து, பல விதமான மாயாலீலைகளைக் காட்டி, இசை பாடி, காம ஆசைகள் கொள்ளும்படியாக பாசாங்குகள் செய்து, பின்னர் தங்களுடைய மாறுபாட்டை எடுத்துப் பேசும் வீணிகள், கேடு தரும் மாயம் நிறைந்த விலைமாதர்கள், தாழ்வான செய்கையை உணர்த்தும் வஞ்சகப் பேதைமார்கள், (இத்தகையோரின்) பழிக்கிடமான செயல்களில் சுழன்று திரிவதற்கே விதிக்கப்பட்ட முட்டாளாகிய எனக்கு, மேலான பொருளாகப் பொருந்தி அணுகியுள்ள உனது திருவடி ஞானம் இதுதான் என்று காட்டும் திருவருள் தாராய். பெரிய கையில் தண்டாயுதத்தை எடுத்து சூரர்கள் ஆன வீரர்களை பொடிபடுத்தி அழித்து, சின்னா பின்னமாக்கி, புழுதி எழவும், சாம்பலாகும்படியும் உடைத்து, பந்தடிப்பது போல் அடித்து, அலங்கார வெற்றி மாலையைச் சூடியவனே, சகல கலைகளிலும் வல்ல வீரனே, பூவின் புற இதழ்களால் பொன் அடையாளம் விளங்குவது போன்ற மலர் அணை மேடையின் மேல் அலங்காரமாய் அமைந்த அந்த ஒப்பற்றவள், குற்றம் இல்லாத சிறந்த மயிலனையாள், தனிமையாய் அழகிய பசுமையான தினைப் புனத்தில் குயில் போன்ற பெருமை வாய்ந்த குரலுடைய வள்ளியின் கணவனே, பலத்துடன் வலிமையான மலைகளைக் கைகளால் வீசி எறிந்த அரக்கர்களின் திண்ணிய கூட்டத்தை, சுழற் காற்று வீசுவது போல வீசி அழித்த வீரம் வாய்ந்தவனே, அழகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் கேசவர், மாயவர் என்று அழைக்கப்படும் திருமால் அறிய மாட்டாத வகையில், திமித்தத் திந்திமித்தத் தோவென்று பலவிதமான தாளத்துடன் சாமர்த்தியமாக சிவபெருமான் நடனம் செய்த பொன்னம்பலத்தில் வந்து குழுமிய தேவர்களின் நாயகனாக, சிதம்பரத்தின் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
அடப் பக்கம் பிடித்துத் தோளொடு தோள் பொர வளைத்துச் செங்கரத்தில் சீரொடு பாவொடு அணுக்கி ... தமது காரியத்தில் வெற்றி பெற, வந்தவரைச் சார்ந்து நன்றாகப் பிடித்து அவருடைய தோளோடு தங்களுடைய தோளை இணைத்துப் பொருந்த, தங்களுடைய செவ்விய கைகளால் அணைத்து, சீராட்டியும் பாடல் பாடியும் நன்கு நெருக்கி, செந்துணுக்கில் கோ(ப) இதழ் ஊறல்கள் அது கோதி அணிப் பொன் பங்கயத்துப் பூண் முலை மேகலை நெகிழ்த்து ... சிவந்த பவளத்துண்டை ஒத்த, இந்திர கோபத்தைப் போன்ற வாய் இதழின் ஊறல்களைத் தொகுத்து அனுபவிக்கத் தந்து, அழகிய பொலிவுள்ள தாமரை மொட்டு போன்றதும், ஆபரணம் அணிந்ததுமான மார்பையும், (இடையில் அணிந்துள்ள) மேகலையையும் வேண்டுமென்றே தளர்த்தி, பஞ்சரித்துத் தா பணமே என அருட்டிக் கண் சிமிட்டிப் பேசிய மாதர்கள் ... குதலை மொழி பேசி நச்சரித்து பொருள் கொடு என்று மயங்குவது போன்ற கண்களைச் சிமிட்டிப் பேசுகின்ற வேசிகள், உறவோடே படிச் சித்தம் களித்துத் தான் மிக மாயைகள் படித்துப் பண் பயிற்று இக்காதல்கள் மேல் கொள பசப்பிப் பின் பிணைக்கைக் கூறிய வீணிகள் ... தங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் போல் படிகின்ற தங்கள் உள்ளத்தில் மகிழ்ந்து, பல விதமான மாயாலீலைகளைக் காட்டி, இசை பாடி, காம ஆசைகள் கொள்ளும்படியாக பாசாங்குகள் செய்து, பின்னர் தங்களுடைய மாறுபாட்டை எடுத்துப் பேசும் வீணிகள், அவ மாயப் பரத்தைக் குண்டு உணர்த்துத் தோதக பேதைகள் பழிக்குள் சஞ்சரித்துப் போடு இடு மூடனை ... கேடு தரும் மாயம் நிறைந்த விலைமாதர்கள், தாழ்வான செய்கையை உணர்த்தும் வஞ்சகப் பேதைமார்கள், (இத்தகையோரின்) பழிக்கிடமான செயல்களில் சுழன்று திரிவதற்கே விதிக்கப்பட்ட முட்டாளாகிய எனக்கு, பரத்து உற்று அண் பதத்துப் போதகம் ஈது என அருள்தாராய் ... மேலான பொருளாகப் பொருந்தி அணுகியுள்ள உனது திருவடி ஞானம் இதுதான் என்று காட்டும் திருவருள் தாராய். தடக்கைத் தண்டு எடுத்துச் சூரரை வீரரை நொறுக்கிப் பொன்றவிட்டுத் தூள் எழ நீறு எழ தகர்த்துப் பந்து அடித்துச் சூடிய தோரண கலை வீரா ... பெரிய கையில் தண்டாயுதத்தை எடுத்து சூரர்கள் ஆன வீரர்களை பொடிபடுத்தி அழித்து, சின்னா பின்னமாக்கி, புழுதி எழவும், சாம்பலாகும்படியும் உடைத்து, பந்தடிப்பது போல் அடித்து, அலங்கார வெற்றி மாலையைச் சூடியவனே, சகல கலைகளிலும் வல்ல வீரனே, தகட்டுப் பொன் சுவட்டுப் பூ அணை மேடையில் சமைப்பித்து அங்கு ஒருத்திக் கோது இல மாமயில் தனிப் பொற்பைம் புனத்தில் கோகில மா வ(ள்)ளி மணவாளா ... பூவின் புற இதழ்களால் பொன் அடையாளம் விளங்குவது போன்ற மலர் அணை மேடையின் மேல் அலங்காரமாய் அமைந்த அந்த ஒப்பற்றவள், குற்றம் இல்லாத சிறந்த மயிலனையாள், தனிமையாய் அழகிய பசுமையான தினைப் புனத்தில் குயில் போன்ற பெருமை வாய்ந்த குரலுடைய வள்ளியின் கணவனே, திடத்தில் திண் பொருப்பைத் தோள் கொடு சாடிய அரக்கத் திண் குலத்தைச் சூறை கொள் வீரிய ... பலத்துடன் வலிமையான மலைகளைக் கைகளால் வீசி எறிந்த அரக்கர்களின் திண்ணிய கூட்டத்தை, சுழற் காற்று வீசுவது போல வீசி அழித்த வீரம் வாய்ந்தவனே, திருப் பொன் பங்கயத்துக் கேசவர் மாயவர் அறியாமல் திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடிய சமர்த்தர்ப் பொன் புவிக்குள் தேவர்கள் நாயக ... அழகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் கேசவர், மாயவர் என்று அழைக்கப்படும் திருமால் அறிய மாட்டாத வகையில், திமித்தத் திந்திமித்தத் தோவென்று பலவிதமான தாளத்துடன் சாமர்த்தியமாக சிவபெருமான் நடனம் செய்த பொன்னம்பலத்தில் வந்து குழுமிய தேவர்களின் நாயகனாக, திருச் சிற்றம்பலத்துள் கோபுர(ம்) மேவிய பெருமாளே. ... சிதம்பரத்தின் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.