கொள்ளை ஆசைக் காரிகள் பாதக வல்ல மாயக் காரிகள்
சூறைகள் கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் விழியாலே கொல்லும் லீலைக் காரிகள்
யாரையும் வெல்லும் மோகக் காரிகள் சூது சொல் கொவ்வை வாய் நிட்டூரிகள்
மேல் விழும் அவர் போலே உள்ள நோ(வ) வைத்து உறவாடியர்
அல்லை நேர் ஒப்பா(ம்) மன தோஷிகள் உள் விரோதக் காரிகள் மாயையில் உழல் நாயேன் உய்யவே
பொன் தோள்களும் ஆறு இரு கையும் நீபத் தார் முகம் ஆறும் முன் உள்ள ஞானப் போதமும் நீ தர வருவாயே
கள்ள மாயத் தாருகன் மா முடி துள்ள நீலத் தோகையின் மீது
ஒரு கையில் வேல் தொட்டு ஏவிய சேவக முருகோனே
கல்லிலே பொன் தாள் படவே அது நல்ல ரூபத்தே வர
கான் இடை கெளவை தீரப் போகும் இராகவன் மருகோனே
தெள்ளி ஏமுற்று ஈரம் முன் ஓதிய சொல் வழாமல்
தான் ஒரு வான் உறு செல்வி மார்பில் பூஷணமாய் அணை மணவாளா
தெள்ளும் ஏனல் சூழ் புன(ம்) மேவிய வள்ளி வேளைக்கார மனோகர
தில்லை மேலைக் கோபுரம் மேவிய பெருமாளே.
பேராசை கொண்டவர்கள், பாபச் செயல்களைச் செய்ய வல்ல மாயக்காரிகள், சூறைக் காற்றைப் போல் கொள்ளை அடிக்கும் வேட்டைக்காரிகள், பயனற்றவர்கள், கண்களால் கொல்லுகின்ற லீலைகள் செய்பவர்கள், யாரையும் மயக்க வல்ல காமாந்தகிகள், சூதான சொற்களைப் பேசும் கொவ்வைக் கனி போன்ற வாயை உடைய பொல்லாதவர்கள், மேலே விழுபவர் போல வெளியன்பு பாராட்டி, மனத்தை நோவச் செய்து உறவாடுபவர்கள், இருட்டுக்கு ஒப்பான மனக் குற்றம் உடையவர்கள், பகைமை எண்ணம் கொண்டவர்கள், அத்தகைய பொது மாதர்களின் மாயைச் சூழலில் சுழல்கின்ற நாயை ஒத்த அடியேன் பிழைக்கும்படி, அழகிய தோள்களும், பன்னிரண்டு கைகளும், கடப்ப மாலையும், ஆறு முகங்களும் முன்னதாக நான் தியானிக்க ஞான அறிவை நீ எனக்குத் தருவதற்கு வந்தருளுக. கள்ளத்தனமும் மாயையும் நிரம்பிய தாருகாசுரனுடைய பெரிய தலை அற்று விழ, நீல மயில் மேல் விளங்கி, ஒப்பற்ற கை வேலைச் செலுத்தி அனுப்பிய வல்லமை வாய்ந்த முருகனே, கல்லின் மீது அழகிய திருவடி பட்டவுடனே அது நல்ல பெண் உருவாய் வர, காட்டில் (அகலிகைக்கு உற்ற) துன்பம் நீங்கும்படி சென்ற ராமனுடைய மருகனே, ஆய்ந்து, இன்பமுற்று, முன்பு செய்த வாக்குறுதி தப்பாமல், விண்ணுலகில் வளர்ந்த செல்வியாகிய தேவயானையை தன் மார்பில் ஆபரணம் போல் அணைந்த மணவாளனே, நன்கு விளங்கிய தினைப் புனத்தில் இருந்த வள்ளிக்கு காவற்காரனாய் விளங்கும் மனத்துக்கு இனியோனே, தில்லை மேற்குக் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
கொள்ளை ஆசைக் காரிகள் பாதக வல்ல மாயக் காரிகள் ... பேராசை கொண்டவர்கள், பாபச் செயல்களைச் செய்ய வல்ல மாயக்காரிகள், சூறைகள் கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் விழியாலே கொல்லும் லீலைக் காரிகள் ... சூறைக் காற்றைப் போல் கொள்ளை அடிக்கும் வேட்டைக்காரிகள், பயனற்றவர்கள், கண்களால் கொல்லுகின்ற லீலைகள் செய்பவர்கள், யாரையும் வெல்லும் மோகக் காரிகள் சூது சொல் கொவ்வை வாய் நிட்டூரிகள் ... யாரையும் மயக்க வல்ல காமாந்தகிகள், சூதான சொற்களைப் பேசும் கொவ்வைக் கனி போன்ற வாயை உடைய பொல்லாதவர்கள், மேல் விழும் அவர் போலே உள்ள நோ(வ) வைத்து உறவாடியர் ... மேலே விழுபவர் போல வெளியன்பு பாராட்டி, மனத்தை நோவச் செய்து உறவாடுபவர்கள், அல்லை நேர் ஒப்பா(ம்) மன தோஷிகள் உள் விரோதக் காரிகள் மாயையில் உழல் நாயேன் உய்யவே ... இருட்டுக்கு ஒப்பான மனக் குற்றம் உடையவர்கள், பகைமை எண்ணம் கொண்டவர்கள், அத்தகைய பொது மாதர்களின் மாயைச் சூழலில் சுழல்கின்ற நாயை ஒத்த அடியேன் பிழைக்கும்படி, பொன் தோள்களும் ஆறு இரு கையும் நீபத் தார் முகம் ஆறும் முன் உள்ள ஞானப் போதமும் நீ தர வருவாயே ... அழகிய தோள்களும், பன்னிரண்டு கைகளும், கடப்ப மாலையும், ஆறு முகங்களும் முன்னதாக நான் தியானிக்க ஞான அறிவை நீ எனக்குத் தருவதற்கு வந்தருளுக. கள்ள மாயத் தாருகன் மா முடி துள்ள நீலத் தோகையின் மீது ... கள்ளத்தனமும் மாயையும் நிரம்பிய தாருகாசுரனுடைய பெரிய தலை அற்று விழ, நீல மயில் மேல் விளங்கி, ஒரு கையில் வேல் தொட்டு ஏவிய சேவக முருகோனே ... ஒப்பற்ற கை வேலைச் செலுத்தி அனுப்பிய வல்லமை வாய்ந்த முருகனே, கல்லிலே பொன் தாள் படவே அது நல்ல ரூபத்தே வர ... கல்லின் மீது அழகிய திருவடி பட்டவுடனே அது நல்ல பெண் உருவாய் வர, கான் இடை கெளவை தீரப் போகும் இராகவன் மருகோனே ... காட்டில் (அகலிகைக்கு உற்ற) துன்பம் நீங்கும்படி சென்ற ராமனுடைய மருகனே, தெள்ளி ஏமுற்று ஈரம் முன் ஓதிய சொல் வழாமல் ... ஆய்ந்து, இன்பமுற்று, முன்பு செய்த வாக்குறுதி தப்பாமல், தான் ஒரு வான் உறு செல்வி மார்பில் பூஷணமாய் அணை மணவாளா ... விண்ணுலகில் வளர்ந்த செல்வியாகிய தேவயானையை தன் மார்பில் ஆபரணம் போல் அணைந்த மணவாளனே, தெள்ளும் ஏனல் சூழ் புன(ம்) மேவிய வள்ளி வேளைக்கார மனோகர ... நன்கு விளங்கிய தினைப் புனத்தில் இருந்த வள்ளிக்கு காவற்காரனாய் விளங்கும் மனத்துக்கு இனியோனே, தில்லை மேலைக் கோபுரம் மேவிய பெருமாளே. ... தில்லை மேற்குக் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.