தாது மா மலர் முடியாலே பதறாத நூபுர அடியாலே கர தாளமாகிய நொடியாலே மடி பிடியாலே
சாடை பேசிய வகையாலே மிகு வாடை பூசிய நகையாலே பல தாறுமாறு சொல் மிகையாலே அ(ன்)ன நடையாலே
மோதி மீறிய முலையாலே முலை மீதில் ஏறிய கலையாலே வெகு மோடி நாணய(ம்) விலையாலே மயல் தரு(ம்) மானார்
மோக வாரிதி தனிலே நாள் தொறு(ம்) மூழ்குவேன் உனது அடியார் ஆகிய மோன ஞானிகளுடனே சேரவும் அருள்வாயே
காதலாய் அருள் புரிவாய் நான் மறை மூலமே என உடனே மா கரி காண நேர் வரு திருமால் நாரணன் மருகோனே
காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார் தமது இடமே வாழ் சிவகாம நாயகி தரு பாலா புலிசையில் வாழ்வே
வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே
வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள் கோபுர மேலை வாயிலின் மயில் மீது ஏறிய பெருமாளே.
மகரந்தப் பொடிகள் தங்கும் பூக்கள் உள்ள கூந்தலாலும், பதறாமல் நடக்கும் சிலம்புகள் அணிந்த பாதத்தாலும், கைக்கொண்டு இடுகின்ற தாள ஒலியாலும், (வருபவர்களின்) மடியைப் பிடித்துத் தம் வசப்படுத்துவதாலும், ஜாடையாகப் பேசும் வழக்க வகையாலும், மிக்க வாசனைகளைப் பூசிக் கொண்டு சிரிக்கும் சிரிப்பாலும், பல விதமான தாறுமாறான பேச்சுக்களைப் பேசும் செறுக்காலும், அன்னம் போன்ற நடையாலும், முன்னே தாக்கி மேலெழுந்த மார்பாலும், அந்த மார்பின் மீது அணிந்த ஆடையாலும், பல விதமான மயக்கும் சக்திகளை காசுக்காக வெளிக் காட்டும் கர்வத்தாலும் (வந்தவருக்கு) காம மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்களின் காமக் கடலில் தினமும் முழுகுகின்ற நான் உன்னுடைய அடியவர்களாகிய மெளன ஞானிகளுடன் சேர்ந்து பழகுவதற்கு அருள் புரிவாயாக. நான்கு வேதங்களுக்கும் மூலப் பொருளே, அன்பு வைத்து அருள் புரிவாயாக என்று பெரிய யானை (ஆகிய கஜேந்திரன்) கூவி அழைக்க, அந்த யானை காணும் வண்ணம் அதன் முன்னே நேரே வந்து உதவிய திருமால் நாராயணனுடைய மருகனே, பக்தியும் பெரும் தவமும் உடைய பெரியோர்கள் வலம் வந்து வணங்கிச் சூழும் கனக சபையில் சிவபெருமானுடைய இடதுபாகத்தில் வாழ்கின்ற சிவகாமி நாயகி பெற்ற குழந்தையே, புலிசை என்னும் சிதம்பரத்தில் வாழும் செல்வமே, வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும் யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே, பொலிவு பொருந்திய மலை அரசாக விளங்கும் மேரு மலை போல உயர்ந்துள்ள கோபுரத்தின் மேற்கு வாயில் புரத்தில் மயிலின் மேல் விளங்கும் பெருமாளே.
தாது மா மலர் முடியாலே பதறாத நூபுர அடியாலே கர தாளமாகிய நொடியாலே மடி பிடியாலே ... மகரந்தப் பொடிகள் தங்கும் பூக்கள் உள்ள கூந்தலாலும், பதறாமல் நடக்கும் சிலம்புகள் அணிந்த பாதத்தாலும், கைக்கொண்டு இடுகின்ற தாள ஒலியாலும், (வருபவர்களின்) மடியைப் பிடித்துத் தம் வசப்படுத்துவதாலும், சாடை பேசிய வகையாலே மிகு வாடை பூசிய நகையாலே பல தாறுமாறு சொல் மிகையாலே அ(ன்)ன நடையாலே ... ஜாடையாகப் பேசும் வழக்க வகையாலும், மிக்க வாசனைகளைப் பூசிக் கொண்டு சிரிக்கும் சிரிப்பாலும், பல விதமான தாறுமாறான பேச்சுக்களைப் பேசும் செறுக்காலும், அன்னம் போன்ற நடையாலும், மோதி மீறிய முலையாலே முலை மீதில் ஏறிய கலையாலே வெகு மோடி நாணய(ம்) விலையாலே மயல் தரு(ம்) மானார் ... முன்னே தாக்கி மேலெழுந்த மார்பாலும், அந்த மார்பின் மீது அணிந்த ஆடையாலும், பல விதமான மயக்கும் சக்திகளை காசுக்காக வெளிக் காட்டும் கர்வத்தாலும் (வந்தவருக்கு) காம மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்களின் மோக வாரிதி தனிலே நாள் தொறு(ம்) மூழ்குவேன் உனது அடியார் ஆகிய மோன ஞானிகளுடனே சேரவும் அருள்வாயே ... காமக் கடலில் தினமும் முழுகுகின்ற நான் உன்னுடைய அடியவர்களாகிய மெளன ஞானிகளுடன் சேர்ந்து பழகுவதற்கு அருள் புரிவாயாக. காதலாய் அருள் புரிவாய் நான் மறை மூலமே என உடனே மா கரி காண நேர் வரு திருமால் நாரணன் மருகோனே ... "நான்கு வேதங்களுக்கும் மூலப் பொருளே, அன்பு வைத்து அருள் புரிவாயாக" என்று பெரிய யானை (ஆகிய கஜேந்திரன்) கூவி அழைக்க, அந்த யானை காணும் வண்ணம் அதன் முன்னே நேரே வந்து உதவிய திருமால் நாராயணனுடைய மருகனே, காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார் தமது இடமே வாழ் சிவகாம நாயகி தரு பாலா புலிசையில் வாழ்வே ... பக்தியும் பெரும் தவமும் உடைய பெரியோர்கள் வலம் வந்து வணங்கிச் சூழும் கனக சபையில் சிவபெருமானுடைய இடதுபாகத்தில் வாழ்கின்ற சிவகாமி நாயகி பெற்ற குழந்தையே, புலிசை என்னும் சிதம்பரத்தில் வாழும் செல்வமே, வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே ... வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும் யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே, வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள் கோபுர மேலை வாயிலின் மயில் மீது ஏறிய பெருமாளே. ... பொலிவு பொருந்திய மலை அரசாக விளங்கும் மேரு மலை போல உயர்ந்துள்ள கோபுரத்தின் மேற்கு வாயில் புரத்தில் மயிலின் மேல் விளங்கும் பெருமாளே.