நகையால் எத்திகள் வாயில் தம்பலமோடு எத்திகள்
நாண் அற்று இன்நயனால் எத்திகள் நாறல் புண் தொடை மாதர் நடையால் எத்திகள்
ஆரக் கொங்கையினால் எத்திகள் மோகத்தின் நவிலால் எத்திகள்
தோகைப் பைம் குழல் மேகச் சிகையால் எத்திகள்
ஆசைச் சங்கடியால் எத்திகள் பாடிப் பண் திறனால் எத்திகள்
பாரத் திண் தெரு ஊடே சிலர் கூடிக் கொ(ண்)டு ஆடிக் கொண்டு உழல்வாருக்கு உழல் நாயெற்கு உன் செயலால் அற்புத ஞானத் திண் கழல் தாராய்
பகையார் உட்கிட வேலைக் கொண்டு உவர் ஆழிக் கிரி நாகத்தின் படமோடு இற்றிட சூரைச் சங்கரி சூரா
பண நாகத்து இடை சேர் முத்தின் சிவகாமிக்கு ஒரு பாகத்தன் பரிவால் சத்து உபதேசிக்கும் குரவோனே
சுக ஞானக் கடல் மூழ்கத் தந்து அடியேனுக்கு அருள் பாலிக்கும் சுடர் பாதக் குகனே முத்தின் கழல் வீரா
சுக ரேசத் தன பாரச் செம் குற மாதைக் களவால் நித்தம் சுகம் மூழ்கிப் புலியூர் நத்தும் பெருமாளே.
சிரிப்பால் ஏமாற்றுபவர்கள். வாயில் வெற்றிலை பாக்கு உண்ட தாம்பூல எச்சிலுடன் ஏமாற்றுபவர்கள். வெட்கம் இல்லாமல் இனிமையான கண்களால் ஏமாற்றுபவர்கள். துர்க் கந்தம் கொண்ட தொடைகளை உடைய விலைமாதர்கள் தங்களுடைய நடையைக் கொண்டு ஏமாற்றுபவர்கள். நிறைந்துள்ள மார்பகங்களால் ஏமாற்றுபவர்கள். காம மயக்கம் தரக் கூடிய பேச்சால் ஏமாற்றுபவர்கள். மயிலின் தோகையைப் போல உள்ள இளம் கூந்தலாகிய மேகம் போன்ற மயிர் முடியால் ஏமாற்றுபவர்கள். ஆசையை ஊட்டும் சுகத்தைத் தரும் வாசனைகளால் ஏமாற்றுபவர்கள். பாடல்களைப் பாடித் தமது இசை ஞானத்தால் ஏமாற்றுபவர்கள். பெரிய நெருக்கமான தெருக்களில் சிலர் கூடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் திரிகின்றவர்களாகிய விலைமாதர்கள் வசமே திரியும் அடியேனுக்கு, உனது திருவிளையாடலால் அற்புதமயமான வலிய திருவடிகளைத் தந்து காப்பாயாக. பகைத்து நின்ற அசுரர்கள் அஞ்ச வேலாயுதத்தைக் கொண்டு, உப்புத் தன்மை நிறைந்த கடல்களும், (ஏழு) மலைகளும், ஆதிசேஷனுடைய படங்களும் குலைந்து விழ, அசுரன் சூரனை அழித்த சூரனே, பாம்பின் படம் போன்ற பதக்கம் விளங்கும் மேகலை அணிந்த அரையை உடைய முத்துப் போன்ற சிவகாமி அம்மையாரை ஒரு பாகத்தில் கொண்டவராகிய சிவபெருமானுக்கு அன்புடன் மெய்ப் பொருளை உபதேசம் செய்த சற்குருவே, சுக ஞானக் கடலில் முழுகி இன்பம் பெறத் தந்து அடியேனுக்குத் திருவருள் புரிந்த ஒளி வீசும் திருவடியை உடைய குகனே, முத்தாலாகிய வீரக் கழல்களை அணிந்த வீரனே, இன்பச் சுவை கொண்ட மார்பகங்களை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் களவியல் வழியில் தினந்தோறும் சுகம் அனுபவித்து, புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே.
நகையால் எத்திகள் வாயில் தம்பலமோடு எத்திகள் ... சிரிப்பால் ஏமாற்றுபவர்கள். வாயில் வெற்றிலை பாக்கு உண்ட தாம்பூல எச்சிலுடன் ஏமாற்றுபவர்கள். நாண் அற்று இன்நயனால் எத்திகள் நாறல் புண் தொடை மாதர் நடையால் எத்திகள் ... வெட்கம் இல்லாமல் இனிமையான கண்களால் ஏமாற்றுபவர்கள். துர்க் கந்தம் கொண்ட தொடைகளை உடைய விலைமாதர்கள் தங்களுடைய நடையைக் கொண்டு ஏமாற்றுபவர்கள். ஆரக் கொங்கையினால் எத்திகள் மோகத்தின் நவிலால் எத்திகள் ... நிறைந்துள்ள மார்பகங்களால் ஏமாற்றுபவர்கள். காம மயக்கம் தரக் கூடிய பேச்சால் ஏமாற்றுபவர்கள். தோகைப் பைம் குழல் மேகச் சிகையால் எத்திகள் ... மயிலின் தோகையைப் போல உள்ள இளம் கூந்தலாகிய மேகம் போன்ற மயிர் முடியால் ஏமாற்றுபவர்கள். ஆசைச் சங்கடியால் எத்திகள் பாடிப் பண் திறனால் எத்திகள் ... ஆசையை ஊட்டும் சுகத்தைத் தரும் வாசனைகளால் ஏமாற்றுபவர்கள். பாடல்களைப் பாடித் தமது இசை ஞானத்தால் ஏமாற்றுபவர்கள். பாரத் திண் தெரு ஊடே சிலர் கூடிக் கொ(ண்)டு ஆடிக் கொண்டு உழல்வாருக்கு உழல் நாயெற்கு உன் செயலால் அற்புத ஞானத் திண் கழல் தாராய் ... பெரிய நெருக்கமான தெருக்களில் சிலர் கூடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் திரிகின்றவர்களாகிய விலைமாதர்கள் வசமே திரியும் அடியேனுக்கு, உனது திருவிளையாடலால் அற்புதமயமான வலிய திருவடிகளைத் தந்து காப்பாயாக. பகையார் உட்கிட வேலைக் கொண்டு உவர் ஆழிக் கிரி நாகத்தின் படமோடு இற்றிட சூரைச் சங்கரி சூரா ... பகைத்து நின்ற அசுரர்கள் அஞ்ச வேலாயுதத்தைக் கொண்டு, உப்புத் தன்மை நிறைந்த கடல்களும், (ஏழு) மலைகளும், ஆதிசேஷனுடைய படங்களும் குலைந்து விழ, அசுரன் சூரனை அழித்த சூரனே, பண நாகத்து இடை சேர் முத்தின் சிவகாமிக்கு ஒரு பாகத்தன் பரிவால் சத்து உபதேசிக்கும் குரவோனே ... பாம்பின் படம் போன்ற பதக்கம் விளங்கும் மேகலை அணிந்த அரையை உடைய முத்துப் போன்ற சிவகாமி அம்மையாரை ஒரு பாகத்தில் கொண்டவராகிய சிவபெருமானுக்கு அன்புடன் மெய்ப் பொருளை உபதேசம் செய்த சற்குருவே, சுக ஞானக் கடல் மூழ்கத் தந்து அடியேனுக்கு அருள் பாலிக்கும் சுடர் பாதக் குகனே முத்தின் கழல் வீரா ... சுக ஞானக் கடலில் முழுகி இன்பம் பெறத் தந்து அடியேனுக்குத் திருவருள் புரிந்த ஒளி வீசும் திருவடியை உடைய குகனே, முத்தாலாகிய வீரக் கழல்களை அணிந்த வீரனே, சுக ரேசத் தன பாரச் செம் குற மாதைக் களவால் நித்தம் சுகம் மூழ்கிப் புலியூர் நத்தும் பெருமாளே. ... இன்பச் சுவை கொண்ட மார்பகங்களை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் களவியல் வழியில் தினந்தோறும் சுகம் அனுபவித்து, புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே.