ஏழு கடல்களின் கரையிலுள்ள மணலையெல்லாம் எண்ணிப்பார்த்தால் வரும் அளவை விட அதிகம் என் துன்பம் நிறை பிறவிகள் என்ற அவதாரங்கள். இனி உனக்கே அடைக்கலமாம் என் உயிரும், உடலும். இனியும் பிறப்பெடுத்து உடலைவிட என்னால் முடியாது. கழுகும், நரியும், நெருப்பும், மண்ணும், யமனும், பிரம்மாவும், என்னுடலை பலமுறை பிரித்தும், பிறப்பித்தும் சோர்வடைந்து விட்டார்கள். என் கடமை இனி உன்னிடம் அடைக்கலம் புகுவதே ஆகும். யான் அடிமைசெய்வது உன்னிடம் அடிமை பூணுதற்கே ஆகும். நீ விரைவில் உன் திருவடிகளைத் தர வேண்டும். சிறந்து திகழும் அழகியும், பச்சை வடிவானவளும், பரிசுத்தமானவளுமான பார்வதி முன்பே ஈன்றருளிய முருகப் பெருமானே, விரிந்த பூமியானது பற்றி எரிய, கிரெளஞ்சகிரி நெரிந்து பொடிபட, வேகமாக வரவல்ல மயிலில் வருபவனே, ஏழு கடல்களும் கொந்தளிக்க அசுரர்களின் உயிரை உணவாகக் கொள்ளும் வேலினை ஆயுதமாகக் கொண்டவனே, தேவர்களும், முனிவர்களும் வணங்கித் துதித்த புலியூர் என்னும் சிதம்பரத்தில் நடனம் செய்கின்ற பெருமாளே.