கோதிக் கோதிக் கூந்தலிலே மலர் பாவித்து ஆக(ம்) சாந்து அணிவார் முலை கோடுத் தானை
தேன் துவர் வாய் மொழி குயில் போலக் கூவிக் கூவிக் காண்டு இசை போலவெ நாணி கூனி பாய்ந்திடுவார் சிலர்
கூடித் தேறிச் சூழ்ந்திடுவார் பொருள் வருமோ என்று ஓதித் தோளில் பூந்துகிலால் முலை மூடிச் சூதில் தூங்கம் இலார் தெரு ஓடித் தேடிச் சோம்பிடுவார் சில விலைமாதர்
ஓருச் சேரச் சேர்ந்திடுவார் கலி சூளைக்காரச் சாங்கமிலார் சிலவோரைச் சாகத் தீம்பிடுவார் செயல் உறவாமோ
வேதத்தோனைக் காந்தள் கையால் தலை மேல் குட்டு ஆடிப் பாந்தள் சதா முடி வீரிட்டு ஆடக் காய்ந்து அசுரார்கள் மெல் விடும் வேலா
வேளைச் சீறித் தூங்கலொடே வயமாவைத் தோலைச் சேர்ந்து அணிவார் இட மீது உற்றாள் பொன் சாம்பவி மாது உமை தரு சேயே
நாதத்து ஓசைக் காண் துணையே சுடர் மூலத்தோனைத் தூண்டிடவே உயிர் நாடிக் காலில் சேர்ந்திடவே அருள்
சுர மானைஞானப் பால் முத்தேன் சுருபாள் வ(ள்)ளி மாதைக் கானில் சேர்ந்து அணைவாய்
சிவ ஞானப் பூமி தேன் புலியூர் மகிழ் பெருமாளே.
ஆய்ந்து ஆய்ந்து கூந்தலில் மலர்களைப் பரப்பிச் சூட்டி, உடலில் சந்தனம் அணிந்துள்ள மார்பு என்னும் மலை போன்ற சேனையுடன், பவளம் போன்ற வாயால் தேன் போன்ற மொழியால் குயில் போலக் கூவி அழைத்து, (ஆடவர்களைக்) கண்டு இசையுடன், பேசும் பேச்சுக்குத் தக்கபடி வெட்கப்பட்டும், (ஒரு சமயம்) குனிந்தும், (மற்றொரு சமயம்) பாய்ந்தும் சில பொது மகளிர் நடிப்பர். ஒன்று கூடியும், தெளிவுற்றும் சூழ்ந்து யோசிப்பவர்களாய், பொருள் கிடைக்குமோ என்று பேசி, தோள் மீதுள்ள அழகிய புடவையால் மார்பை மூடி, வஞ்சனை எண்ணத்துடன் தூக்கம் இல்லாத கண்களுடன் தெருவில் ஓடியும் (வாடிக்கையாளரைத்) தேடியும், சில வேசிகள் சோம்பலாய்க் காலம் கழிப்பர். ஒருமிக்க தரித்திர நிலையைச் சேர்ந்தவர்களாய், வேசிகளாய், நல் ஒழுக்கம் இல்லாதவர்களாய், (தம்மிடம் வரும்) சிலரைச் சாகும் அளவுக்கு கேடு செய்பவர்களாகிய விலைமாதர்களின் தொழில்களில் உறவு கொள்ளுதல் நல்லதா? வேதம் வல்ல பிரமனை காந்தள் மலர் போன்ற கையால் தலையில் குட்டி விளையாடி, ஆதிசேஷனாகிய பாம்பின் நூற்றுக் கணக்கான முடிகள் வேதனைப்பட்டு அசையக் கோபித்து, அசுரர்களின் மேல் வேலாயுதத்தைச் செலுத்தியவனே, மன்மதனைக் கோபித்து, யானையுடன் புலியின் தோலைப் போர்வையாகவும், உடையாகவும் ஒரு சேர அணிந்தவராகிய சிவபெருமானுடைய இடப்பாகத்தில் உறையும் அழகிய சாம்பவியாகிய மாதா, உமை பெற்ற குழந்தையே, உனது திருச்சிலம்போசை முதலிய நாதங்களைக் கேட்பதற்குத் துணை புரியும் தேவனே, மூலாதாரக் கனலைத் தூண்டி எழுப்பி, பிராணவாயு சுழுமுனை நாடி மார்க்கத்தில் சார்வதற்கு அருள் புரிவாயாக. தேவ லோகத்தில் வளர்ந்த மான் போன்ற தேவயானையையும், ஞானப் பால் போலவும் முப்பழங்களின் தேன் போலவும் இனிய சொரூபத்தை உடையவளும் ஆகிய வள்ளி நாயகியை தினைப் புனக் காட்டிலும் சேர்ந்து தழுவியவனே, சிவஞானப் பூமியாகிய அழகிய புலியூரில் (சிதம்பரத்தில்) மகிழ்ந்து விளங்கும் பெருமாளே.
கோதிக் கோதிக் கூந்தலிலே மலர் பாவித்து ஆக(ம்) சாந்து அணிவார் முலை கோடுத் தானை ... ஆய்ந்து ஆய்ந்து கூந்தலில் மலர்களைப் பரப்பிச் சூட்டி, உடலில் சந்தனம் அணிந்துள்ள மார்பு என்னும் மலை போன்ற சேனையுடன், தேன் துவர் வாய் மொழி குயில் போலக் கூவிக் கூவிக் காண்டு இசை போலவெ நாணி கூனி பாய்ந்திடுவார் சிலர் ... பவளம் போன்ற வாயால் தேன் போன்ற மொழியால் குயில் போலக் கூவி அழைத்து, (ஆடவர்களைக்) கண்டு இசையுடன், பேசும் பேச்சுக்குத் தக்கபடி வெட்கப்பட்டும், (ஒரு சமயம்) குனிந்தும், (மற்றொரு சமயம்) பாய்ந்தும் சில பொது மகளிர் நடிப்பர். கூடித் தேறிச் சூழ்ந்திடுவார் பொருள் வருமோ என்று ஓதித் தோளில் பூந்துகிலால் முலை மூடிச் சூதில் தூங்கம் இலார் தெரு ஓடித் தேடிச் சோம்பிடுவார் சில விலைமாதர் ... ஒன்று கூடியும், தெளிவுற்றும் சூழ்ந்து யோசிப்பவர்களாய், பொருள் கிடைக்குமோ என்று பேசி, தோள் மீதுள்ள அழகிய புடவையால் மார்பை மூடி, வஞ்சனை எண்ணத்துடன் தூக்கம் இல்லாத கண்களுடன் தெருவில் ஓடியும் (வாடிக்கையாளரைத்) தேடியும், சில வேசிகள் சோம்பலாய்க் காலம் கழிப்பர். ஓருச் சேரச் சேர்ந்திடுவார் கலி சூளைக்காரச் சாங்கமிலார் சிலவோரைச் சாகத் தீம்பிடுவார் செயல் உறவாமோ ... ஒருமிக்க தரித்திர நிலையைச் சேர்ந்தவர்களாய், வேசிகளாய், நல் ஒழுக்கம் இல்லாதவர்களாய், (தம்மிடம் வரும்) சிலரைச் சாகும் அளவுக்கு கேடு செய்பவர்களாகிய விலைமாதர்களின் தொழில்களில் உறவு கொள்ளுதல் நல்லதா? வேதத்தோனைக் காந்தள் கையால் தலை மேல் குட்டு ஆடிப் பாந்தள் சதா முடி வீரிட்டு ஆடக் காய்ந்து அசுரார்கள் மெல் விடும் வேலா ... வேதம் வல்ல பிரமனை காந்தள் மலர் போன்ற கையால் தலையில் குட்டி விளையாடி, ஆதிசேஷனாகிய பாம்பின் நூற்றுக் கணக்கான முடிகள் வேதனைப்பட்டு அசையக் கோபித்து, அசுரர்களின் மேல் வேலாயுதத்தைச் செலுத்தியவனே, வேளைச் சீறித் தூங்கலொடே வயமாவைத் தோலைச் சேர்ந்து அணிவார் இட மீது உற்றாள் பொன் சாம்பவி மாது உமை தரு சேயே ... மன்மதனைக் கோபித்து, யானையுடன் புலியின் தோலைப் போர்வையாகவும், உடையாகவும் ஒரு சேர அணிந்தவராகிய சிவபெருமானுடைய இடப்பாகத்தில் உறையும் அழகிய சாம்பவியாகிய மாதா, உமை பெற்ற குழந்தையே, நாதத்து ஓசைக் காண் துணையே சுடர் மூலத்தோனைத் தூண்டிடவே உயிர் நாடிக் காலில் சேர்ந்திடவே அருள் ... உனது திருச்சிலம்போசை முதலிய நாதங்களைக் கேட்பதற்குத் துணை புரியும் தேவனே, மூலாதாரக் கனலைத் தூண்டி எழுப்பி, பிராணவாயு சுழுமுனை நாடி மார்க்கத்தில் சார்வதற்கு அருள் புரிவாயாக. சுர மானைஞானப் பால் முத்தேன் சுருபாள் வ(ள்)ளி மாதைக் கானில் சேர்ந்து அணைவாய் ... தேவ லோகத்தில் வளர்ந்த மான் போன்ற தேவயானையையும், ஞானப் பால் போலவும் முப்பழங்களின் தேன் போலவும் இனிய சொரூபத்தை உடையவளும் ஆகிய வள்ளி நாயகியை தினைப் புனக் காட்டிலும் சேர்ந்து தழுவியவனே, சிவ ஞானப் பூமி தேன் புலியூர் மகிழ் பெருமாளே. ... சிவஞானப் பூமியாகிய அழகிய புலியூரில் (சிதம்பரத்தில்) மகிழ்ந்து விளங்கும் பெருமாளே.