கதிர் போன்ற திருமேனியின் வடிவழகும், முற்றின ஞான ஸ்வரூபமும், கிரீடம் சூடிய முகங்கள் ஆறும், தேவர்கள் சூட்டிய மாலைகளில் இருக்கும் வண்டுகள் முரல, அம்மாலைகளிலிருந்து மெதுவான வேகத்தில் துளித்துளியாக தேன் சொட்ட, பவள வாய் இதழிலிருந்து சொல்லப்படும் வேத மொழிகளின் நறுமணம் வீச, அடர்ந்த பவளம் போன்ற ஒளி பாய, அருமையான சிலம்பு ஒலிக்க, வேல் ஏந்திய திருக்கரத்துடன் அழகிய கலாப மயில்மீது ஏறி, அடியேனுடைய நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் பொடிபட்டு அழிய, தேவர்கள் யாவரும் ஒன்றுக்கும் உதவாத எனக்கு நீஅருள் செய்வது எவ்வளவு ஆச்சரியம் என்று உன்னருளைப் போற்றிப் பாடும்படியாக, நீ எழுந்தருளி வரவேண்டும். நந்தி தேவனைப் போற்றி வணங்கி, (அவர் அனுமதியுடன்) பிரமன், திருமால், மற்ற தேவர்கள், முநிவர் கூட்டங்களுடன் ஓடிவந்து சரணடைய, தமது கண்டத்திலேயே தங்கி நிற்கும்படியாக விஷத்தை வாரி உண்டு சரணடைந்தவர்களுக்கு அருள் செய்த தலைவனும், மின்னலை ஒத்த இடையை உடைய பார்வதி தேவியை தமது இடப்பாகத்தில் பொருந்தி வைத்துள்ள தக்ஷிணாமூர்த்தியாகிய சிவபிரான் மிகவும் மகிழ்ச்சி அடைய அவருக்கு ஞானோபதேசப் பிரசாதம் தந்தவனே, துன்பங்களும், கிரகக் கோளாறுகளும், நோய்களும் விலக, என்னையும் ஒரு பொருளாகக் கருதி அருள்வாயாக. குறப்பெண் வள்ளியின் இளநீர் போன்ற மார்பில் அணையும் மார்பனே, இன்ப நிலையில் உள்ள முதிய முநி வியாக்ரபாதருடன், பாம்பின் உருவில் உள்ள பதஞ்சலி முநிவரும், நூறு கோடி ரிஷிகளும் புகழ்கின்ற ஞான மூர்த்தியாம் பெருமாளே.