பனி போலத் துளி சல வாயுள் கரு பதின் மாதத்து இடை தலை கீழாய்ப் படி மேவிட்டு
உடல் தவழ்வார் தத்து அடி பயில்வார் உத்தியில் சில நாள் போய்
தன மாதர்க் குழி வீழ்வார் தத்துவர்
சதி காரச் சமன் வரு நாளில்
தறியார் இல் சடம் விடுவார் இப்படி தளர் மாயத் துயர் ஒழியாதோ
வினை மாயக் கிரி பொடியாகக் கடல் விகடார் உக்கிட விடும் வேலா
விதியோனைச் சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா
நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு நிழலாள் பத்தினி மணவாளா
நிதியாம் இப்புவி புலியூருக்கு ஒரு நிறைவே பத்தர்கள் பெருமாளே.
பனி போல் அளவுள்ள ஒரு துளி சுக்கிலம் ஜலத் துவார வழியாய்ச் சென்று கரு தரித்து, பத்து மாதக் கணக்கில் தலை கீழாக பூமியில் வந்து பிறந்து, உடல் கொண்டு தவழ்பவராய், தத்தித் தத்தி அடியிட்டு நடை பயில்பவராய், மழலைப் பேச்சில் சில நாட்கள் கழிந்த பின்னர், மார்பகங்கள் மிக்க உடைய பெண்கள் என்னும் காமக் குழியில் வீழ்பவராய், காலத்தைத் தாவிச் செலவிடுவார். வஞ்சனை கொண்டவனாகிய யமன் வருகின்ற அந்த நாளில், நிலைத்திருக்க முடியாதவராய் தமக்கு வீடாகிய உடலை விடுவார். இந்த விதமாக தளர்ந்து ஒழியும் மாயமான துயரம் என்னை விட்டு நீங்காதோ? மாயைத் தொழிலில் வல்ல கிரெளஞ்ச மலை பொடியாக, கடலில் செருக்கு வாய்ந்த அசுரன் சூரன் அழிந்து போக, வேலினைச் செலுத்தியவனே, பிரமனை, நான்கு முடிகளும் தொங்கிக் கவிழ்ந்து பொடிபட, வலிமையாகக் குட்டிய குருநாதனே, நினைத்துத் தியானிப்பவர்களுடைய உள்ளத்தில் நீங்காமல் புகுந்திருக்கும் ஒளி வீசுபவளாகிய பத்தினி வள்ளியின் கணவனே, இந்தப் பூமிக்கு நிதி போன்றதான புலியூரில் (சிதம்பரத்தில்) இருக்கும் ஒரு நிறைந்த செல்வமே, பக்தர்களுக்கு உரிய பெருமாளே.
பனி போலத் துளி சல வாயுள் கரு பதின் மாதத்து இடை தலை கீழாய்ப் படி மேவிட்டு ... பனி போல் அளவுள்ள ஒரு துளி சுக்கிலம் ஜலத் துவார வழியாய்ச் சென்று கரு தரித்து, பத்து மாதக் கணக்கில் தலை கீழாக பூமியில் வந்து பிறந்து, உடல் தவழ்வார் தத்து அடி பயில்வார் உத்தியில் சில நாள் போய் ... உடல் கொண்டு தவழ்பவராய், தத்தித் தத்தி அடியிட்டு நடை பயில்பவராய், மழலைப் பேச்சில் சில நாட்கள் கழிந்த பின்னர், தன மாதர்க் குழி வீழ்வார் தத்துவர் ... மார்பகங்கள் மிக்க உடைய பெண்கள் என்னும் காமக் குழியில் வீழ்பவராய், காலத்தைத் தாவிச் செலவிடுவார். சதி காரச் சமன் வரு நாளில் ... வஞ்சனை கொண்டவனாகிய யமன் வருகின்ற அந்த நாளில், தறியார் இல் சடம் விடுவார் இப்படி தளர் மாயத் துயர் ஒழியாதோ ... நிலைத்திருக்க முடியாதவராய் தமக்கு வீடாகிய உடலை விடுவார். இந்த விதமாக தளர்ந்து ஒழியும் மாயமான துயரம் என்னை விட்டு நீங்காதோ? வினை மாயக் கிரி பொடியாகக் கடல் விகடார் உக்கிட விடும் வேலா ... மாயைத் தொழிலில் வல்ல கிரெளஞ்ச மலை பொடியாக, கடலில் செருக்கு வாய்ந்த அசுரன் சூரன் அழிந்து போக, வேலினைச் செலுத்தியவனே, விதியோனைச் சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா ... பிரமனை, நான்கு முடிகளும் தொங்கிக் கவிழ்ந்து பொடிபட, வலிமையாகக் குட்டிய குருநாதனே, நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு நிழலாள் பத்தினி மணவாளா ... நினைத்துத் தியானிப்பவர்களுடைய உள்ளத்தில் நீங்காமல் புகுந்திருக்கும் ஒளி வீசுபவளாகிய பத்தினி வள்ளியின் கணவனே, நிதியாம் இப்புவி புலியூருக்கு ஒரு நிறைவே பத்தர்கள் பெருமாளே. ... இந்தப் பூமிக்கு நிதி போன்றதான புலியூரில் (சிதம்பரத்தில்) இருக்கும் ஒரு நிறைந்த செல்வமே, பக்தர்களுக்கு உரிய பெருமாளே.