மனமே உனக்கு உறுதி புகல்வேன் எனக்கு அருகில்
வருவாய் உரைத்தமொழி தவறாதே
மயில் வாகனக்கடவுள் அடியார் தமக்கரசு
மனமாயை யற்ற சுக மதிபாலன்
நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு மல
நிலை வேர் அறுக்கவல பிரகாசன்
நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம
நிழல் ஆளியைத் தொழுது வருவாயே
இனம் ஓது ஒருத்தி ருபி நலம் ஏர் மறைக்கு அரிய
இளையோள் ஒர் ஒப்புமிலி நிருவாணி
எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை
இதழ்வேணியப்பனுடை குருநாதா
முனவோர் துதித்து மலர் மழைபோல் இறைத்துவர
முது சூரரைத் தலை கொள் முருகோனே
மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்கு உருகு
முருகா தமிழ்ப்புலியுர் பெருமாளே.
மனமே, உனக்கு உறுதி தரக்கூடிய நன்மொழிகளைக் கூறுவேன், என் சமீபத்தில் வா, நான் சொல்லும் சொற்படி தவறாமல் நடப்பாயாக. மயிலை வாகனமாகக் கொண்ட தெய்வம், அடியவர்களுக்கெல்லாம் அரசர், மனம், மாயை என்பதெல்லாம் இல்லாத சுகத்தைத் தரும் இளம் குழந்தை. உனக்கு வேறு நினைவு எதற்கு? தேவலோகத்தையும், சிவலோகத்தையும் உனக்குத் தந்தருளி, மும்மலங்களில் (ஆணவம், கன்மம், மாயை) நிலைத்துள்ள வேர்களை அறுக்கவல்ல ஒளியுருவானவர், சங்க நிதி, பதுமநிதி, கற்பக மரம் போன்று அளிக்கவல்லவர், அவரே நமக்கு உறுதி, அவரே முழு முதற் கடவுள். நீதிமான், அத்தகைய பெருமானைத் தொழுது வழிபட்டு வருவாயாக. நமது உண்மையான சுற்றம் என்று சொல்லக் கூடிய ஒரே ஒருத்தியும், பேரழகுள்ளவளும், நலமும், சிறப்பும் உடைய வேதங்களுக்கு எட்டாதவளும், என்றும் இளையவளும், ஒருவிதத்திலும் தனக்குச் சமானம் இல்லாதவளும், உடையற்ற திகம்பரியும், என்னைப் பெற்றெடுத்தவளும், புகழ் பெற்ற கல்யாணியுமாகிய உமாதேவியை ஒரு பக்கத்தில் கொண்ட கொன்றை அணிந்த ஜடையுடைய எம் தந்தை சிவபெருமானின் குருநாதனே, முன்னவர்களாகிய அரி, அரன், அயன் ஆகிய மூவரும் துதி செய்து, மலர்களை மழைபோலத் தூவி வர, பழமை வாய்ந்த சூரன் முதலியவர்களின் சிரங்களைக் கொய்தறுத்த முருகனே, சர்க்கரைப் பாகு போன்ற மொழியும், முத்துப் போன்ற பற்களையும் உடைய, மயிலை ஒத்த சாயல் கொண்ட வள்ளிக்காக உள்ளம் உருகும் முருகனே, தமிழ் மணம் கமழும் புலியூர் என்ற சிதம்பரத்தில் உறையும் பெருமாளே.
மனமே உனக்கு உறுதி புகல்வேன் ... மனமே, உனக்கு உறுதி தரக்கூடிய நன்மொழிகளைக் கூறுவேன், எனக்கு அருகில் வருவாய் உரைத்தமொழி தவறாதே ... என் சமீபத்தில் வா, நான் சொல்லும் சொற்படி தவறாமல் நடப்பாயாக. மயில் வாகனக்கடவுள் அடியார் தமக்கரசு ... மயிலை வாகனமாகக் கொண்ட தெய்வம், அடியவர்களுக்கெல்லாம் அரசர், மனமாயை யற்ற சுக மதிபாலன் ... மனம், மாயை என்பதெல்லாம் இல்லாத சுகத்தைத் தரும் இளம் குழந்தை. நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு ... உனக்கு வேறு நினைவு எதற்கு? தேவலோகத்தையும், சிவலோகத்தையும் உனக்குத் தந்தருளி, மல நிலை வேர் அறுக்கவல பிரகாசன் ... மும்மலங்களில் (ஆணவம், கன்மம், மாயை) நிலைத்துள்ள வேர்களை அறுக்கவல்ல ஒளியுருவானவர், நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம ... சங்க நிதி, பதுமநிதி, கற்பக மரம் போன்று அளிக்கவல்லவர், அவரே நமக்கு உறுதி, அவரே முழு முதற் கடவுள். நிழல் ஆளியைத் தொழுது வருவாயே ... நீதிமான், அத்தகைய பெருமானைத் தொழுது வழிபட்டு வருவாயாக. இனம் ஓது ஒருத்தி ருபி ... நமது உண்மையான சுற்றம் என்று சொல்லக் கூடிய ஒரே ஒருத்தியும், பேரழகுள்ளவளும், நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் ... நலமும், சிறப்பும் உடைய வேதங்களுக்கு எட்டாதவளும், என்றும் இளையவளும், ஒர் ஒப்புமிலி நிருவாணி ... ஒருவிதத்திலும் தனக்குச் சமானம் இல்லாதவளும், உடையற்ற திகம்பரியும், எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை ... என்னைப் பெற்றெடுத்தவளும், புகழ் பெற்ற கல்யாணியுமாகிய உமாதேவியை ஒரு பக்கத்தில் கொண்ட இதழ்வேணியப்பனுடை குருநாதா ... கொன்றை அணிந்த ஜடையுடைய எம் தந்தை சிவபெருமானின் குருநாதனே, முனவோர் துதித்து மலர் மழைபோல் இறைத்துவர ... முன்னவர்களாகிய அரி, அரன், அயன் ஆகிய மூவரும் துதி செய்து, மலர்களை மழைபோலத் தூவி வர, முது சூரரைத் தலை கொள் முருகோனே ... பழமை வாய்ந்த சூரன் முதலியவர்களின் சிரங்களைக் கொய்தறுத்த முருகனே, மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்கு ... சர்க்கரைப் பாகு போன்ற மொழியும், முத்துப் போன்ற பற்களையும் உடைய, மயிலை ஒத்த சாயல் கொண்ட வள்ளிக்காக உருகு முருகா தமிழ்ப்புலியுர் பெருமாளே. ... உள்ளம் உருகும் முருகனே, தமிழ் மணம் கமழும் புலியூர் என்ற சிதம்பரத்தில் உறையும் பெருமாளே.