திரு நிலம் மருவிக் காலின் இரு வழி அடை பட்டு ஓ(ட்)டி
சிவ வழி உடன் உற்று ஏக பர(ம்) மீதே
சிவ சுடர் அதனைப் பாவை மணம் என மருவி
கோல திரி புரம் எரியத் தீயில் நகை மேவி
இரு வினை பொரியக் கோல திருவருள் உருவத்து ஏகி
இருள் கதிர் இலி பொன் பூமி தவசு ஊடே
இருவரும் உருகிக் காய(ம்) நிலை என மருவி
தேவர் இளையவன் என வித்தாரம் அருள்வாயே
பரிபுர கழல் எட்டு ஆசை செவிடுகள் பட
முத்தேவர் பழ மறை பணிய
சூலம் மழு மானும் பரிவோடு சுழல
சேடன் முடி நெறு நெறு என
கோவு பரியினை மலர் விட்டு ஆடி
அடியோர்கள் அரஹர உருகிச் சே செ என
திரு நடனக் கோலம் அருள் செ(ய்)யும் உமையின் பாகர் அருள் பாலா
அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளிப் போரொடு
அடியவர் கயிலைக்கு ஆன பெருமாளே.
ஒளி வீசும் ஜோதி இடத்தைப் பொருந்தி, பிராண வாயு செல்லும் இடகலை, பிங்கலை மார்க்கங்கள் அடைபடும்படி மூச்சை ஓட்டி, சிவ நெறியில் நின்று, தனித்து நிற்கும் மேலிடத்தே சிவ ஜோதியை பொம்மைக் கல்யாணம் போலக் கூடி, விளங்கி நிற்கும் (காமம், வெகுளி, மயக்கம் என்னும்) மும்மலங்களும் உனது புன்னகையில் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, எனது நல் வினை, தீ வினை ஆகிய இரண்டு வினைகளும் பொரிந்து சாம்பலாக, அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபட்டு, இருளும் ஒளியும் இல்லாத அழகிய பூமியிடத்தே, தவ நெறிப் பயனாய் நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, (அத்தகையக் கலப்பால்) இவ்வுடல் நிலைபட்டதெனப் பொருந்தி, தேவர்கள் இவன் இளையவன் என்று என்னை வியந்து கூறும்படியான விசித்திரப் பெரும் பேற்றை அருள்வாயாக. சிலம்பு, வீரக் கழல்கள் ஆகியவற்றின் ஒலிகள் எட்டு திசைகளிளும் செவிடுபடும்படியாக ஒலிக்க, பிரமன், ருத்திரன், திருமால் என்னும் முத்தேவர்களும், பழமையான வேதங்களும் பணிந்து போற்ற, (கைகளில் ஏந்திய) சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, நாகராஜனாகிய ஆதிசேஷனின் பணாமுடிகள் நெறு நெறு என்று முறிய, நந்தியாகிய வாகனத்தில் திருவடி மலரை வைத்திருத்தலை விட்டு, நடனம் செய்து, அடியார்கள் அரகர என மனம் உருகி ஜெய ஜெய என்று போற்ற, ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பார்வதியின் பாகராகிய சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் மஞ்சத்திலே இன்பப் போரிடுதலை விரும்புவதோடு, அடியார்கள் வாழும் கயிலை மலையிடத்தும் விருப்பம் காட்டும் பெருமாளே.
திரு நிலம் மருவிக் காலின் இரு வழி அடை பட்டு ஓ(ட்)டி ... ஒளி வீசும் ஜோதி இடத்தைப் பொருந்தி, பிராண வாயு செல்லும் இடகலை, பிங்கலை மார்க்கங்கள் அடைபடும்படி மூச்சை ஓட்டி, சிவ வழி உடன் உற்று ஏக பர(ம்) மீதே ... சிவ நெறியில் நின்று, தனித்து நிற்கும் மேலிடத்தே சிவ சுடர் அதனைப் பாவை மணம் என மருவி ... சிவ ஜோதியை பொம்மைக் கல்யாணம் போலக் கூடி, கோல திரி புரம் எரியத் தீயில் நகை மேவி ... விளங்கி நிற்கும் (காமம், வெகுளி, மயக்கம் என்னும்) மும்மலங்களும் உனது புன்னகையில் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, இரு வினை பொரியக் கோல திருவருள் உருவத்து ஏகி ... எனது நல் வினை, தீ வினை ஆகிய இரண்டு வினைகளும் பொரிந்து சாம்பலாக, அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபட்டு, இருள் கதிர் இலி பொன் பூமி தவசு ஊடே ... இருளும் ஒளியும் இல்லாத அழகிய பூமியிடத்தே, தவ நெறிப் பயனாய் இருவரும் உருகிக் காய(ம்) நிலை என மருவி ... நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, (அத்தகையக் கலப்பால்) இவ்வுடல் நிலைபட்டதெனப் பொருந்தி, தேவர் இளையவன் என வித்தாரம் அருள்வாயே ... தேவர்கள் இவன் இளையவன் என்று என்னை வியந்து கூறும்படியான விசித்திரப் பெரும் பேற்றை அருள்வாயாக. பரிபுர கழல் எட்டு ஆசை செவிடுகள் பட ... சிலம்பு, வீரக் கழல்கள் ஆகியவற்றின் ஒலிகள் எட்டு திசைகளிளும் செவிடுபடும்படியாக ஒலிக்க, முத்தேவர் பழ மறை பணிய ... பிரமன், ருத்திரன், திருமால் என்னும் முத்தேவர்களும், பழமையான வேதங்களும் பணிந்து போற்ற, சூலம் மழு மானும் பரிவோடு சுழல ... (கைகளில் ஏந்திய) சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, சேடன் முடி நெறு நெறு என ... நாகராஜனாகிய ஆதிசேஷனின் பணாமுடிகள் நெறு நெறு என்று முறிய, கோவு பரியினை மலர் விட்டு ஆடி ... நந்தியாகிய வாகனத்தில் திருவடி மலரை வைத்திருத்தலை விட்டு, நடனம் செய்து, அடியோர்கள் அரஹர உருகிச் சே செ என ... அடியார்கள் அரகர என மனம் உருகி ஜெய ஜெய என்று போற்ற, திரு நடனக் கோலம் அருள் செ(ய்)யும் உமையின் பாகர் அருள் பாலா ... ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பார்வதியின் பாகராகிய சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளிப் போரொடு ... மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் மஞ்சத்திலே இன்பப் போரிடுதலை விரும்புவதோடு, அடியவர் கயிலைக்கு ஆன பெருமாளே. ... அடியார்கள் வாழும் கயிலை மலையிடத்தும் விருப்பம் காட்டும் பெருமாளே.