கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன்
குலவி இணை முகில் அளகமும் சரிந்து அன்பினின் பண்பு உலாவக் கொடிய விரல் நக நுதியில் புண் படும் சஞ்சலன்
குனகி அவருடன் இனிது சம்ப்ரமம் கொண்டு உ(ள்)ளம் குரல் அழிய அவசம் உறு குங் குணன்
கொங்கு அவிழ்ந்து ஒன்று பாய் மேல் விடம் அனைய விழி மகளிர் கொங்கை இன்ப அன்புறும் வினையன்
இயல் பரவும் உயிர் வெந்து அழிந்து அங்கமும் இதம் ஒழிய அறிவில் நெறி பண்பில் அண்டும் சகன்
செஞ்செ(சி) நீடும் வெகு கனக ஒளி குலவும் அந்த மன் செந்தில் என்று அவிழ உளம் உருகி வரும் அன்பிலன்
தந்து இலன் விரவும் இரு சிறு கமல பங்கயம் தந்து உகந்து அன்புறாதோ
படம் இலகும் அரவின் உடல் அங்கமும் பங்கிடந்து உதறும் ஒரு கலபி மிசை வந்து எழுந்து அண்டர் தம் படை அசுரர் அனைவர் உடல் சந்து சந்து உங்கு அதம் சிந்தும் வேலா
படியவரும் இமையவரும் நின்று இறைஞ்சு(ம்) எண் குணன் பழைய இறை உருவம் இலி அன்பர் பங்கன் பெரும் பருவரல் செய் புரம் எரிய விண்டிடும் செம் கணன்
கங்கை மான் வாழ் சடிலம் மிசை அழகு புனை கொன்றையும் பண்பு உறும் தருண மதியின் அ(க்) குறை செய் துண்டமும் செம் கை ஒண் சகல புவனமும் ஒழி கதம் அங்கு உற அங்கு அங்கியும் பொங்கி நீடும் சடம் மருவு விடை அரவர்
துங்க அம் பங்கில் நின்று உலகு தரு கவுரி உமை கொங்கை தந்து அன்புறும் தமிழ் விரக உயர் பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே.
கொடி போன்ற இடை துவள, அங்கம் கிளர்ச்சி கொள்ள, அழகிய குமுத மலர் போன்ற அமுதளிக்கும் வாயிதழைப் பருகி இன்பம் கொள்ளும் எண்ணத்தை உடையவன் நான். விலைமாதரோடு குலவி அணைந்து, மேகம் போன்ற கரிய கூந்தலும் சரிந்து, அவர்கள் மீது அன்பினால் வரும் ஆசை வர, வளைந்த விரல் நகக் குறியால் புண்படுகின்ற ஏக்கம் கொண்டவன் நான். கொஞ்சிப் பேசி அந்த மாதர்களுடன் இனிய களிப்பு கொண்டு உள்ளமும் குரலும் ஒடுங்க தன்வசம் இழக்கும் குறுகிய குணத்தை உடையவன் நான். மணம் விரிந்து பொருந்தும் பாய் மீது நஞ்சு போன்ற கண்களை உடைய மகளிர் மார்பகங்களின் இன்பத்தில் அன்பு கொள்ளும் செயலை உடையவன் நான். தகுதியுடன் பொருந்திய உயிர் வெந்து அழிந்து உடலும் இன்பத்தை இழக்க, அறிவில்லாத வழிப் போக்கில் நெருங்கும் தோழன் நான். செவ்விதாய் நீடித்துள்ள மிக்க பொன் ஒளி விளங்கும் அழகு பொருந்திய திருச்செந்தூர் என்று கருதி நெகிழ, மனம் உருகி வருகின்ற அன்பு இல்லாதவன் நான். நூல் ஆராய்ச்சி இல்லாதவன் நான். (இருப்பினும்) அத்தகைய எனக்கு உனது பொருந்திய இரண்டு தாமரை போன்ற திருவடியைத் தந்து மகிழ்ந்து அன்பு காட்ட மாட்டாயோ? படம் விளங்கும் பாம்பின் உடலையும் அங்கங்களையும் பிளவுபடக் கிழித்து உதறுகின்ற ஒப்பற்ற மயிலின் மீது எழுந்தருளி வந்து, தேவர்களின் பகைவர்களான அசுரர்கள் எல்லாருடைய உடல்களும் பிளவுண்டு பிளவுண்டு போகும்படி, அவ்விடத்தில் கொன்ற வேலனே, மண்ணவரும் தேவர்களும் நின்று வணங்கும் எட்டு குணங்களை உடையவன். பழம் பொருளாகிய இறைவன். உருவம் இல்லாதவன். அடியார்கள் பங்கில் இருப்பவன். பெரிதும் துன்பம் செய்து வந்த திரி புரங்களும் எரியும்படித் திறந்த சிவந்த (நெற்றிக்) கண்ணை உடையவன். மான் போன்ற கங்கை(நதி)யாகிய மாது வாழ்கின்ற சடையின் மீது அழகாகத் தரித்த கொன்றை மலரும், குணம் கொண்ட இள மதியின் குறைத் துண்டத்தையும், சிவந்த கையில் எல்லா உலகங்களும் ஒழிக்க வல்ல பெருங் கோபம் கொண்டுள்ள ஒள்ளிய நெருப்பையும், கிளர்ந்து உயர்ந்த உடல் கொண்ட நந்தியாகிய) ரிஷபத்தையும் பாம்பையும் கொண்டவன், (அந்த சிவபெருமானின்) தூய, அழகிய (இடப்) பக்கத்தில் நின்று உலகெலாம் அளிக்கும் கெளரி உமை முலைப் பாலைத் தந்து அன்பு கொள்ளும் தமிழ் வல்லவனே, உயர்ந்த பரம் பொருளாகிய சங்கரன் வணங்கும் தம்பிரானே.
கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன் ... கொடி போன்ற இடை துவள, அங்கம் கிளர்ச்சி கொள்ள, அழகிய குமுத மலர் போன்ற அமுதளிக்கும் வாயிதழைப் பருகி இன்பம் கொள்ளும் எண்ணத்தை உடையவன் நான். குலவி இணை முகில் அளகமும் சரிந்து அன்பினின் பண்பு உலாவக் கொடிய விரல் நக நுதியில் புண் படும் சஞ்சலன் ... விலைமாதரோடு குலவி அணைந்து, மேகம் போன்ற கரிய கூந்தலும் சரிந்து, அவர்கள் மீது அன்பினால் வரும் ஆசை வர, வளைந்த விரல் நகக் குறியால் புண்படுகின்ற ஏக்கம் கொண்டவன் நான். குனகி அவருடன் இனிது சம்ப்ரமம் கொண்டு உ(ள்)ளம் குரல் அழிய அவசம் உறு குங் குணன் ... கொஞ்சிப் பேசி அந்த மாதர்களுடன் இனிய களிப்பு கொண்டு உள்ளமும் குரலும் ஒடுங்க தன்வசம் இழக்கும் குறுகிய குணத்தை உடையவன் நான். கொங்கு அவிழ்ந்து ஒன்று பாய் மேல் விடம் அனைய விழி மகளிர் கொங்கை இன்ப அன்புறும் வினையன் ... மணம் விரிந்து பொருந்தும் பாய் மீது நஞ்சு போன்ற கண்களை உடைய மகளிர் மார்பகங்களின் இன்பத்தில் அன்பு கொள்ளும் செயலை உடையவன் நான். இயல் பரவும் உயிர் வெந்து அழிந்து அங்கமும் இதம் ஒழிய அறிவில் நெறி பண்பில் அண்டும் சகன் ... தகுதியுடன் பொருந்திய உயிர் வெந்து அழிந்து உடலும் இன்பத்தை இழக்க, அறிவில்லாத வழிப் போக்கில் நெருங்கும் தோழன் நான். செஞ்செ(சி) நீடும் வெகு கனக ஒளி குலவும் அந்த மன் செந்தில் என்று அவிழ உளம் உருகி வரும் அன்பிலன் ... செவ்விதாய் நீடித்துள்ள மிக்க பொன் ஒளி விளங்கும் அழகு பொருந்திய திருச்செந்தூர் என்று கருதி நெகிழ, மனம் உருகி வருகின்ற அன்பு இல்லாதவன் நான். தந்து இலன் விரவும் இரு சிறு கமல பங்கயம் தந்து உகந்து அன்புறாதோ ... நூல் ஆராய்ச்சி இல்லாதவன் நான். (இருப்பினும்) அத்தகைய எனக்கு உனது பொருந்திய இரண்டு தாமரை போன்ற திருவடியைத் தந்து மகிழ்ந்து அன்பு காட்ட மாட்டாயோ? படம் இலகும் அரவின் உடல் அங்கமும் பங்கிடந்து உதறும் ஒரு கலபி மிசை வந்து எழுந்து அண்டர் தம் படை அசுரர் அனைவர் உடல் சந்து சந்து உங்கு அதம் சிந்தும் வேலா ... படம் விளங்கும் பாம்பின் உடலையும் அங்கங்களையும் பிளவுபடக் கிழித்து உதறுகின்ற ஒப்பற்ற மயிலின் மீது எழுந்தருளி வந்து, தேவர்களின் பகைவர்களான அசுரர்கள் எல்லாருடைய உடல்களும் பிளவுண்டு பிளவுண்டு போகும்படி, அவ்விடத்தில் கொன்ற வேலனே, படியவரும் இமையவரும் நின்று இறைஞ்சு(ம்) எண் குணன் பழைய இறை உருவம் இலி அன்பர் பங்கன் பெரும் பருவரல் செய் புரம் எரிய விண்டிடும் செம் கணன் ... மண்ணவரும் தேவர்களும் நின்று வணங்கும் எட்டு குணங்களை உடையவன். பழம் பொருளாகிய இறைவன். உருவம் இல்லாதவன். அடியார்கள் பங்கில் இருப்பவன். பெரிதும் துன்பம் செய்து வந்த திரி புரங்களும் எரியும்படித் திறந்த சிவந்த (நெற்றிக்) கண்ணை உடையவன். கங்கை மான் வாழ் சடிலம் மிசை அழகு புனை கொன்றையும் பண்பு உறும் தருண மதியின் அ(க்) குறை செய் துண்டமும் செம் கை ஒண் சகல புவனமும் ஒழி கதம் அங்கு உற அங்கு அங்கியும் பொங்கி நீடும் சடம் மருவு விடை அரவர் ... மான் போன்ற கங்கை(நதி)யாகிய மாது வாழ்கின்ற சடையின் மீது அழகாகத் தரித்த கொன்றை மலரும், குணம் கொண்ட இள மதியின் குறைத் துண்டத்தையும், சிவந்த கையில் எல்லா உலகங்களும் ஒழிக்க வல்ல பெருங் கோபம் கொண்டுள்ள ஒள்ளிய நெருப்பையும், கிளர்ந்து உயர்ந்த உடல் கொண்ட நந்தியாகிய) ரிஷபத்தையும் பாம்பையும் கொண்டவன், துங்க அம் பங்கில் நின்று உலகு தரு கவுரி உமை கொங்கை தந்து அன்புறும் தமிழ் விரக உயர் பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே. ... (அந்த சிவபெருமானின்) தூய, அழகிய (இடப்) பக்கத்தில் நின்று உலகெலாம் அளிக்கும் கெளரி உமை முலைப் பாலைத் தந்து அன்பு கொள்ளும் தமிழ் வல்லவனே, உயர்ந்த பரம் பொருளாகிய சங்கரன் வணங்கும் தம்பிரானே.