சரவணபவனே, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே, சரவணபவனே, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே, சரவணபவனே, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே, என்று பல முறை தமிழினில் ஓதிப் புகழ்ந்து உள்ளம் உருகுகின்ற உன் அடியார்களுக்கு உற்ற பிறப்பு, இறப்பு என்பவை நீங்கவும், சிவப்பேறு அடையவும், வினைகள் தருகின்ற நோய்கள் துள்ளி ஓடவும், வரத்தினை நீ எங்கள் உயிர் இன்பம் அடையுமாறு தந்தருள்வாயாக. கண்களினின்றும் பொழிகின்ற கருணையை உடையவனே, ஒப்பற்ற தனிப் பெரும் தலைவனென வந்த யானைமுகக் கணபதியை துணையாகக் கொண்ட இளையவனே, கவிதைகளாகிய அமுத மொழிகளை வழங்குபவருடைய உயிர் நற்கதியைப் பெறுமாறு அருள் புரியும் நேசம் உடையவனே, கடல் சூழ்ந்த இவ்வுலகில் உயிர்கள் படுகின்ற துன்பங்களும், கலக்கங்களும், இன்னும் இத்தகையதாக உள்ள வேதனைகள் நீங்கும்படியும், நிலைத்திருக்குமாறு நற்கதி பெறுதலையும், உனது திருவடி நிழல் அருளக்கூடிய ஒருநாள் எனக்கும் உண்டோ? திரிபுரங்களை எரித்த சிவபெருமான் பெற்றருளிய குமாரனே, திருப்போரூரிலும், திருத்தணிகையிலும், மிகவும் உயர்ந்த சிவகிரியிலும், திருவேங்கடத்திலும் உலவும் வடிவேலனே, நாள்தோறும் உன் புகழைக் கூறும் அடியார்களின் உள்ளக் கோவிலில் குடிகொண்டவனே, அருட்செல்வம், பொருட்செல்வம் ஆகிய இரண்டிலும் விளங்குபவனே, இருண்ட ஆணவ மலம் ஒழியுமாறு ஞானசூரியனாக வருகின்ற பெரும் செல்வமே, பாம்பணையில் துயில்பவரும், நரசிம்மருமாகிய நெடிய திருமாலின் மருகோனாக வரும் அதிசய மூர்த்தியே, மலத்தை நீக்குபவளும், மலம் அற்றவளும், பெரியவளும் ஆகிய உமாதேவி தந்தருளிய முருகக் கடவுளே, அதலம் விதலம் முதலிய ஏழு உலகங்களும் கிடுகிடுவென நடுநடுங்க வருகின்ற மயிலின் மீது இனிதாக ஒளி வீசுபவனே, ஆறுகோணச் சக்கரத்தின் மையத்தில் அழகுடன் அமர்கின்ற ஹர ஹர சிவ சிவ, பெருமாளே.