சாந்தமில் மோக எரி காந்தி
அவாவனில மூண்டு
அவியாத சமயவிரோத
சாங்கலை வாரிதியை
நீந்தவொணாது
உலகர் தாந்துணை யாவரென
மடவார் மேல் ஏந்திள வார்முளரி
சாந்தணி மார்பினொடு தோய்ந்து உருகா
அறிவு தடுமாறி ஏங்கிட
ஆருயிரை வாங்கிய காலன்வசம்
யான்தனி போய்விடுவது இயல்போதான்
காந்தளின் ஆனகர
மான்தரு கானமயில் காந்த
விசாக சரவணவேளே
காண்டகு தேவர்பதி யாண்டவனே
சுருதி யாண்டகையே
இபமின் மணவாளா
வேந்த குமார குக
சேந்த மயூர
வட வேங்கட மாமலையில் உறைவோனே
வேண்டிய போதடியர்
வேண்டிய போகமது வேண்ட
வெறாது உதவு பெருமாளே.
பொறுமை இல்லாத மோகத்தினால் உண்டாகிய நெருப்பின் சூடு காந்தவும், ஆசையாகிய பெருங்காற்று மிகுந்து வீசவும், ஒரு போதும் ஓயாத, சமய வெறியால் வாதிட்டுப் பகை கொள்ளச் செய்யும் அழிகின்ற மதசாத்திரம் என்னும் பெரும் சமுத்திரத்தை நீந்திக் கடக்க முடியாமல், உலகில் மனைவி, மக்கள், சுற்றம், இவையே துணையென நம்பியும், பெண்கள் தம் உடல்மீது அணிந்த மார்க் கச்சுடன், இளம் தாமரையன்ன, சந்தனம் பூசிய, மார்பினைத் தழுவியும், உள்ளம் உருகியும், புத்தி தடுமாற்றத்தை அடைந்து, ஏக்கத்தைக் கொண்ட அடியேனுடைய அருமையான ஆவியைக் கவர்ந்து செல்லும் காலனின் வசப்பட்டு யான் துணையின்றி தனியே நமனுலகம் ஏகுதல் தகுதியோ? காந்தள் மலரைப் போன்ற மென்மையான திருக்கரங்களை உடையவளும், மான் ஈன்ற, கானகத்து மயில் போன்றவளுமான அழகி, வள்ளியின் கணவனே, விசாக நக்ஷத்திரத்தில் ஜோதிப் பிழம்பாக வெளிப்பட்டவனே, சரவணபவக் கடவுளே, பார்க்க அழகிய தேவர் தலைநகர் அமராவதியை மீட்டு ஆண்டவனே, வேதங்களால் துதிக்கப்பெறும் சிறந்த வீரனே, ஐராவத யானை போற்றி வளர்த்த மின் கொடி போன்ற தேவயானையின் மணவாளனே, அரசனே, என்றும் இளையவனே, இதய குகையில் உறைபவனே, செம்மையான பண்பு நிறைந்தவனே, மயில் வாகனனே, வட எல்லையில் உள்ள திருவேங்கட மாமலையில் வாழ்பவனே, உன் அடியார்கள் விரும்பிய போதெல்லாம் அவர்கள் விரும்பிக் கேட்ட போக பாக்கியங்களை உன்னிடம் விண்ணப்பிக்க, வெறுக்காமல் அவர்களுக்குத் தந்து அருள் புரிகின்ற பெருமாளே.
சாந்தமில் மோக எரி காந்தி ... பொறுமை இல்லாத மோகத்தினால் உண்டாகிய நெருப்பின் சூடு காந்தவும், அவாவனில மூண்டு ... ஆசையாகிய பெருங்காற்று மிகுந்து வீசவும், அவியாத சமயவிரோத ... ஒரு போதும் ஓயாத, சமய வெறியால் வாதிட்டுப் பகை கொள்ளச் செய்யும் சாங்கலை வாரிதியை ... அழிகின்ற மதசாத்திரம் என்னும் பெரும் சமுத்திரத்தை நீந்தவொணாது ... நீந்திக் கடக்க முடியாமல், உலகர் தாந்துணை யாவரென ... உலகில் மனைவி, மக்கள், சுற்றம், இவையே துணையென நம்பியும், மடவார் மேல் ஏந்திள வார்முளரி ... பெண்கள் தம் உடல்மீது அணிந்த மார்க் கச்சுடன், இளம் தாமரையன்ன, சாந்தணி மார்பினொடு தோய்ந்து உருகா ... சந்தனம் பூசிய, மார்பினைத் தழுவியும், உள்ளம் உருகியும், அறிவு தடுமாறி ஏங்கிட ... புத்தி தடுமாற்றத்தை அடைந்து, ஏக்கத்தைக் கொண்ட அடியேனுடைய ஆருயிரை வாங்கிய காலன்வசம் ... அருமையான ஆவியைக் கவர்ந்து செல்லும் காலனின் வசப்பட்டு யான்தனி போய்விடுவது இயல்போதான் ... யான் துணையின்றி தனியே நமனுலகம் ஏகுதல் தகுதியோ? காந்தளின் ஆனகர ... காந்தள் மலரைப் போன்ற மென்மையான திருக்கரங்களை உடையவளும், மான்தரு கானமயில் காந்த ... மான் ஈன்ற, கானகத்து மயில் போன்றவளுமான அழகி, வள்ளியின் கணவனே, விசாக சரவணவேளே ... விசாக நக்ஷத்திரத்தில் ஜோதிப் பிழம்பாக வெளிப்பட்டவனே, சரவணபவக் கடவுளே, காண்டகு தேவர்பதி யாண்டவனே ... பார்க்க அழகிய தேவர் தலைநகர் அமராவதியை மீட்டு ஆண்டவனே, சுருதி யாண்டகையே ... வேதங்களால் துதிக்கப்பெறும் சிறந்த வீரனே, இபமின் மணவாளா ... ஐராவத யானை போற்றி வளர்த்த மின் கொடி போன்ற தேவயானையின் மணவாளனே, வேந்த குமார குக ... அரசனே, என்றும் இளையவனே, இதய குகையில் உறைபவனே, சேந்த மயூர ... செம்மையான பண்பு நிறைந்தவனே, மயில் வாகனனே, வட வேங்கட மாமலையில் உறைவோனே ... வட எல்லையில் உள்ள திருவேங்கட மாமலையில் வாழ்பவனே, வேண்டிய போதடியர் ... உன் அடியார்கள் விரும்பிய போதெல்லாம் வேண்டிய போகமது வேண்ட ... அவர்கள் விரும்பிக் கேட்ட போக பாக்கியங்களை உன்னிடம் விண்ணப்பிக்க, வெறாது உதவு பெருமாளே. ... வெறுக்காமல் அவர்களுக்குத் தந்து அருள் புரிகின்ற பெருமாளே.