அல்லிவிழியாலும் முல்லைநகையாலும்
அல்லல்பட ஆசைக் கடல் ஈயும்
அள்ள இனிதாகி நள்ளிரவு போலும்
உள்ளவினையார் அத் தனம் ஆரும்
இல்லும் இளையோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் சமனாரும்
எள்ளி யெனதாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற்கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லும் உபதேசக் குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
எள்ளிவன மீதுற்று உறைவோனே
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ
வல்லைவடி வேலைத் தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் பெருமாளே.
தாமரை இதழ் போன்ற கண்களாலும், முல்லை அரும்பை நிகர்த்த பற்களாலும், துயரத்தை அடையும்படி ஆசையைக் கடல் போலத் தருபவர்களும், அள்ளி எடுக்கலாம் போல இனிதாக அமைந்து நடு இரவு போன்று இருண்ட வினைகளை உடைய விலைமாதரும், அந்தச் செல்வம் மிகுந்த வீடும், மக்களாகிய இளைஞரும், அனைவருமே மெல்ல மெல்ல வேறாகும்படி, வலிய எருமையை வாகனமாகக் கொண்ட மாயக்கார யமனும் என்னை இகழ்ந்து, என் உயிரைக் கொள்ளை அடித்துக் கொண்டு போகும் அந்த நாளில் அடியேன் உய்யும் பொருட்டு ஒப்பற்ற உனது அழகிய திருவடியைத் தந்தருள்வாயாக. பழமையான வேதங்கள் தேடிப்பார்த்து காண முடியவில்லை என்று முறையிடுகின்ற சிவபிரானுக்கு உபதேச மொழியைச் சொல்லி அருளிய குருநாதனே, துள்ளி ஓடி விளையாடுகின்ற புள்ளிமான் வெட்கப்படும்படி அதனை இகழ்கிற வள்ளி வாழும் வள்ளிமலைக் காட்டிற்கு வலியச் சென்று வாழ்கின்றவனே, வலிமையான அசுரர்கள் மாளவும், நற்குணமுள்ள தேவர்கள் வாழவும், மிக விரைவாக கூரிய வேலைச் செலுத்தியவனே, வள்ளிக்கொடி படர்ந்திருக்கின்ற, சாரலுடன் கூடிய வள்ளிமலையில் எழுந்தருளியுள்ள வள்ளியின் மணவாளனே, பெருமாளே.
அல்லிவிழியாலும் ... தாமரை இதழ் போன்ற கண்களாலும், முல்லைநகையாலும் ... முல்லை அரும்பை நிகர்த்த பற்களாலும், அல்லல்பட ஆசைக் கடல் ஈயும் ... துயரத்தை அடையும்படி ஆசையைக் கடல் போலத் தருபவர்களும், அள்ள இனிதாகி ... அள்ளி எடுக்கலாம் போல இனிதாக அமைந்து நள்ளிரவு போலும் உள்ளவினையார் ... நடு இரவு போன்று இருண்ட வினைகளை உடைய விலைமாதரும், அத் தனம் ஆரும் இல்லும் ... அந்தச் செல்வம் மிகுந்த வீடும், இளையோரு மெல்ல அயலாக ... மக்களாகிய இளைஞரும், அனைவருமே மெல்ல மெல்ல வேறாகும்படி, வல்லெருமை மாயச் சமனாரும் ... வலிய எருமையை வாகனமாகக் கொண்ட மாயக்கார யமனும் எள்ளி யெனதாவி கொள்ளைகொளு நாளில் ... என்னை இகழ்ந்து, என் உயிரைக் கொள்ளை அடித்துக் கொண்டு போகும் அந்த நாளில் உய்யவொரு நீபொற்கழல்தாராய் ... அடியேன் உய்யும் பொருட்டு ஒப்பற்ற உனது அழகிய திருவடியைத் தந்தருள்வாயாக. தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர் ... பழமையான வேதங்கள் தேடிப்பார்த்து காண முடியவில்லை என்று முறையிடுகின்ற சிவபிரானுக்கு சொல்லும் உபதேசக் குருநாதா ... உபதேச மொழியைச் சொல்லி அருளிய குருநாதனே, துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண ... துள்ளி ஓடி விளையாடுகின்ற புள்ளிமான் வெட்கப்படும்படி எள்ளிவன மீதுற்று உறைவோனே ... அதனை இகழ்கிற வள்ளி வாழும் வள்ளிமலைக் காட்டிற்கு வலியச் சென்று வாழ்கின்றவனே, வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ ... வலிமையான அசுரர்கள் மாளவும், நற்குணமுள்ள தேவர்கள் வாழவும், வல்லைவடி வேலைத் தொடுவோனே ... மிக விரைவாக கூரிய வேலைச் செலுத்தியவனே, வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு ... வள்ளிக்கொடி படர்ந்திருக்கின்ற, சாரலுடன் கூடிய வள்ளிமலையில் எழுந்தருளியுள்ள வள்ளிமண வாளப் பெருமாளே. ... வள்ளியின் மணவாளனே, பெருமாளே.